Saturday, May 28, 2022

ஐபிஎல் தொடரை எதிர்பாத்து ஏமாந்த வீரர்கள்


 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் நிறைய இளம் வீரர்கள் முதல் முறையாக களமிறங்கினாலும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்து நட்சத்திரங்களாக உருவாகி நாளடைவில் நாட்டுக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறி விடுவார்கள். இந்த ஆண்டு  திலக் வர்மா, தேவால்டு ப்ரேவிஸ், மோசின் கான் போன்ற நிறைய இளம் வீரர்கள் அந்த அணி நிர்வாகங்கள் கொடுத்த நல்ல வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி தம்மை நிரூபித்தனர். ஆனால் ஒருசில தரமான வீரர்களுக்கு கடைசிவரை வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

                           யாஷ் துள்

கடந்த பெப்ரவரியில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2022 ஐசிசி அண்டர்-19 உலகக்  கிண்ணப் போட்டியில்  டெல்லியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் யாஷ் துள் தலைமையிலான இந்தியா 5-வது முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அதில் துடுப்பாட்டம் உடபட  ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் அதன்பின் நடந்த ரஞ்சி கோப்பையில் சொந்த மாநிலமான டெல்லிக்கு அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.

 அதன் காரணமாக எந்தவித யோசனையுமின்றி டெல்லி ப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தின் போது அவரை தட்டி தூக்கியது. ஆனால் அண்டர்-19 உலக கோப்பையில் அவருடன் விளையாடிய திலக் வர்மா போன்ற வீரர்கள் கூட வாய்ப்பு பற்றி பெரிய அளவில் உருவான நிலையில் ப்டனாக செயல்பட்ட அவருக்கு டெல்லி அணி நிர்வாகம் ஒரு வாய்ப்பு கூட கடைசி வரை வழங்கவில்லை.  மந்தீப் சிங், சர்பராஸ் கான் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்த அந்த அணி நிர்வாகம் இவரை கடைசிவரை பெஞ்சில் அமர வைத்து அடுத்த வருடம் வரை காத்திருக்கும்படி சொல்லாமல் சொல்லி விட்டது.

                    ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்:

19 உலகக் கிண்ணப் போட்டியில் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அசத்திய ராஜவர்தனை ஏலத்தின் போது சென்னை அணி குறைந்த விலையில் வாங்கியது.  14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயத்தால் விலகியதால் இவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்த அந்த அணி நிர்வாகம் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன பின்பும் கூட கடைசி நேரத்தில் இலங்கையின் மதீஸா பதிரனாவுக்கு வாய்ப்பளித்த போதிலும் இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.

 ரசிகர்களோடு ரசிகர்களாக சென்னை கொடியைப் பிடித்துக்கொண்டு விசில் அடித்துக் கொண்டு   காட்சியளித்த அவருக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் திறமை வாய்ந்த அவர் அண்டர்-19 அளவில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்த உலகத் தரம் வாய்ந்த ஐபிஎல் தொடரில் உடனடியாக தள்ளிவிட்டு வீணடிக்க விரும்பவில்லை என்று பயிற்சியாளர் பிளம்மிங் தெரிவித்தார். மேலும் அவரிடம் நல்ல திறமை இருந்தாலும் ஒருசில அம்சங்களில் முன்னேற்றம் தேவைப்படுவதால் வரும் காலங்களில் வாய்ப்பளிக்கப்படும் என்று ப்டன் டோனி தெரிவித்தார்.

                                                  அர்ஜுன் டெண்டுல்கர்

 இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் புதல்வன் அர்ஜுன் டெண்டுல்கரின் திறமையும் தரமும் பற்றி பலருக்கும் தெரியாது. ஏனெனில் உள்ளூர் அளவில்  இரண்டு ரி20 போட்டிகளில் விளையாடி  இரண்டு 2 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கடந்த 2020 முதல் மும்பை அணியில் நெட் பவுலராக இருந்து வந்த நிலையில் இந்த வருடம் நேரடியாகவே அணிக்குள் அந்த அணி நிர்வாகம் வாங்கியது. ஆரம்பத்திலேயே சந்தித்த 8 தொடர் தோல்விகளால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை இழந்த நிலையில் கடைசி சில போட்டிகளிலாவது வாய்ப்பளிக்குமாறு முகமது அசாருதீன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கடைசி வரை அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.

                                                       ஹரி நிஷாந்த்

 உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் மற்றொரு தமிழக இளம் வீரர் ஹரி நிஷாந்த் கடந்த சில வருடங்களாகவே சென்னையின் பெஞ்சில் அமர்ந்து வருகிறார். இவரை மீண்டும் வெளியில் விடாமல் 20 லட்சத்துக்கு இந்த முறை வாங்கிய அந்த அணி நிர்வாகம் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்ட போதிலும் கடைசி ஒரு சில போட்டிகளில் கூட வாய்ப்பு வழங்கவில்லை.   மதீஸா பதிரனா, பிரசாந்த் சோலங்கி போன்ற இலங்கை மற்றும் வடமாநில வீரர்களுக்கு வாய்ப்பளித்த சென்னை அணி நிர்வாகம் தமிழக வீரரான இவருக்கு அதுவும் கடைசி போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை.

No comments: