Saturday, May 14, 2022

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரங்கேறும் வாரிசு அரசியல்


 திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட மிக முக்கியமான குற்றச் சாட்டுகளில் வாரிசு  அரசியல்  முன்னிலை பெறுகிறது. கருணநிதிக்குபின் ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி எனப் பிரசாரம் செய்யும் அண்னா திராவிட முன்னேற்றக் கழக்த்திலும்  வாரிசு அரசியல் உருவாகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் தலை எடுக்காத வாரிசு அரசியல் இப்போது  வெளிப்படையாக நடைபெறுகிறது. ஜெயலலிதாவுடன் சசிக்லா இருந்தபோது மன்னார்குடி குடும்பம் கோலோச்சியது. ஜெயலலிதா அதற்கு முற்றூப் புள்ளி வைத்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கும் அனைவருக்கும் உயர் பதவிகள் கிடைக்கும்.” எனஎடப்பாடி பழனிசாமி  திருவாய் மலர்ந்தருளினார். கழகத்தினுள் வாரிசு அரசியலை ஆரம்பித்தது  .பன்னீர்ச்செல்வம் என தொண்டர்கள் முணுமுணுக்கிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் நிலைமை தலைகீழாக இருக்கிறது! “பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கே மீண்டும் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அதிகாரத்தை அனுபவித்தவர்கள் , குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறதுஎன்று கொந்தளிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

.பன்னீர்செல்வம்  தன் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பதவியைக் கொடுத்ததோடு, தேனி மாவட்ட எம்.பி-யாகவும் வெற்றிபெறவைத்தார். பன்னீரின் தம்பி ராஜா சசிகலாவுடன் இணைந்ததால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  அவர் கட்சியில் இருந்தவரை தேனி நகரசபைத் தலைவர், தேனி மாவட்ட ஆவின் சேர்மன் ஆகிய பதவிகளை அனுபவித்தார். இவர்கள் தவிர தன் சம்பந்தி, மருமகன் ஆகியோருக்கு அரசு வழக்கறிஞர் பொறுப்புக் கொடுத்து கட்சிக்குள் வாரிசு அரசியலுக்கு வித்திட்டவர் பன்னீர்தான்.

ஜெயக்குமார்.  தன் மகன் ஜெயவர்தனுக்கு அம்மா பேரவைச் செயலாளர் பதவியைக் கொடுத்ததோடு எம்.பி-யாகவும் ஆக்கினார். இவர் தன்னையும் தன் வாரிசையும் வளர்த்ததுபோல கட்சியினர் யாரையும் அரவணைக்கவில்லை. அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமார் கைதானபோது கட்சி சார்பில் யாரும் பெரிதாகப் போராடுவதற்கு வரவில்லை. மதுரையில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் மதுரை மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கிறார். அதோடு ராஜ்சத்யன் தனது கட்சி செல்வாக்கை வைத்து தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி, கூடைப்பந்து கமிட்டி உள்ளிட்ட சில விளையாட்டு சார்ந்த கமிட்டிகளிலும் பதவிகளை வாங்கியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேல் மகளிர் அணி இணைச் செயலாளராகவும், அவரின் கணவர் தையூர் குமரவேல் திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் மகன் ராஜா மேற்குப் பகுதிச் செயலாளராகவும், மகள் பெருங்குளம் பேரூராட்சித் தலைவராகவும் இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரத்வி மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கிருத்திகாவை மாவட்ட மகளிரணிச் செயலாளராக தற்போது நியமித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர திருச்சியில் வெல்லமண்டி நடராஜன், திருவள்ளூரில் சிறுணியம் பலராமன், திருவொற்றியூரில் குப்பன், சோழிங்கநல்லூரில் கந்தன், சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் ஆதிராஜாராம், வளர்மதி, மனோஜ் பாண்டியன் என ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குக் கட்சியில் முக்கியப் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் முக்கிய ஆட்களின் வாரிசுகள் வகிக்கும் பதவிகள்தான். இன்னும் கீழ்மட்டத்தில் தோண்டினால் மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி என ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப உறவுகளுக்குள் கட்சியின் மொத்தக் கட்டமைப்பும் சிக்கியுள்ளது.

 எம்.ஜி.ஆர் காலத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆகிய முக்கியப் பதவிகளில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. மதுரையில் நவநீத கிருஷ்ணன், அழகிரி பாலன், ராமநாதபுரத்தில் தென்னவன், செங்கல்பட்டில் ஆர்.எஸ்.முனிரத்தினம் எனப் பல்வேறு மாவட்டங்களில் உதாரணங்களைச் சொல்லலாம். ஜெயலலிதா காலத்தில் இந்த முறை படிப்படியாக மாற்றப்பட்டது. சசிகலாவின் குடும்பத்தினர் கட்சியில் தலையெடுத்ததும்தான் நிலைமை முற்றிலுமாக மாறியது. தேவர், கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய சமூகத்தினருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டார்கள். அதே நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது. ஏதோ கண்துடைப்புக்காக ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, தமிழ்மகன் உசேன் என சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பதவிகளெல்லாம் முக்கியப் பொறுப்புகள் என்று சொல்ல முடியாது.

எம்.ஜி.ஆர் காலத்தில்  கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில்  அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலில் விழும் கலாசாரம் அரங்கேற்றப்பட்டது. காரின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்வது ஹெலிகொப்டரை அண்ணாந்து பார்த்து கையெடுத்துக் கும்பிடுவது போன்ற நகைச் சுவைக் காட்சிகள் ஜெயலலிதா காலத்தில் அரங்கேறின.

ஜெயலலிதா மரைந்ததும் அவை அப்படியே சசிகலாவுக்கு  மடைமாற்றப் பட்டன. சசிகலா  சிறைக்குச் சென்றதும், எடப்பாடி பழனிச்சாமி, .பன்னீர்ச்செல்வம் ஆகிய  இரட்டைத் தலைமை   உருவானது.பதவியைப் பாதுகாப்பதற்காக எடப்பாடியின்  பக்கம் பலரும் சாய்ந்தார்கள். இடைக்கிடை சசிகலா எனும் அஸ்திரத்தை . பன்னீர்ச்செல்வம்  பிரயோகிப்பதால் எடப்பாடி எரிச்சலடைந்துள்ளார்.

தங்களுடைய அரசியல் வாழ்கை முடிவதற்கிடையில் வாரிசுகளை வளர்த்து விடுவதில் தலைவர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

No comments: