Saturday, May 28, 2022

தலைவர்களின் வெளியேற்றத்தால் தடுமாறும் காங்கிரஸ்

 இந்திய அரசியலில் அசைக்க முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸ்  கட்சிக்கு இது  மிகுந்த கஸ்டகாலம். கட்சியைப்புனர‌மைத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டிய இக்கட்டான நிலையில்  சோனியா  இருக்கிறார். பாரதீய ஜனதாவிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்   மூத்த தலைவர்களையும் இழந்து வருகிறது.

 2014ல் நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாபில் ஆட்சியை இழந்ததுடன், அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.

'கட்சிக்கு நிரந்தர தலைமை வேண்டும்; அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குலாம் நபி ஆசாத் தலைமையில், 'ஜி - 23' எனப்படும், 23 அதிருப்தி தலைவர்கள், சோனியாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தனர். ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்த வாதம் வலுப்பெற்றது

இதையடுத்து சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மூன்று நாள் சிந்தனையாளர் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, கட்சியை வலுப்படுத்தவும், 2024 நாடாளுமன்ற‌ தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கவும், 13 முதல் 15ம் திக‌தி வரை சிந்தனையாளர் கூட்டம் நடந்தது.

ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில், 400க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி, மக்களுடனான தொடர்பை புதுப்பிப்பது உள்ளிட்ட பல முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கட்சியை வலுப்படுத்த சில குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சோனியா நேற்று, மூன்று குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். அரசியல் விவகாரங்களுக்காக ஒரு குழு; 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க, சிந்தனையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தும் பணிக் குழு; அக்., 2ல் நடக்க உள்ள பாரத ஒற்றுமை யாத்திரையை ஒருங்கிணைக்க குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி உள்ளிட்ட பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழுக்களில், சோனியா, அவருடைய மகனும் முன்னாள் தலைவருமான ராகுல், மகளும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இது புதிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை  வலுபடுத்த முயற்சிகள்  நடைபெறும் வேளையில் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து  முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இது, கட்சியின் பலத்தையும், பா.ஜ.,வை எதிர்ப்பதிலும் அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஐந்து  முக்கிய தலைவர்கள் கபில் சிபல்  முக்கியமானவர். காங்கிரஸ் ஆட்சியின் போது பல ஆண்டுகள் செய்தி தொடர்பாளராகவும், மன்மோகன் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் கபில் சிபல். வழக்கறிஞரான இவர், கடந்த சில நாட்களாக, கட்சி மேலிடத்துடனான உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சிக்கலாக இருந்தது. தலைமை மீது அதிருப்தியில் இருந்த 23 தலைவர்களில் ஒருவரான இவர், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர், கட்சி தலைமை கற்பனை நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர் என விமர்சித்து இருந்தார்.

பஞ்சாப் மாநில தலைவராக இருந்த சுனில் ஜக்கார், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். முதல்வர் பதவி வகித்த சரண்ஜித்சிங் சன்னியை விமர்சித்ததற்காக அவருக்கு விளக்கம் கேட்டு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், அதிருப்தி அடைந்த ஜக்கார் கட்சியில் இருந்து வெளியேறி, கடந்த மே 19ல் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது அவர் , நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? யார் என்பதை கட்சி மேலிடம் ஆராய வேண்டும் என்றார்.

தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த மே 21ம் திக‌தி கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில தலைவராக இருந்த ஹர்திக் படேல் அறிவித்தார். இது தொடர்பாக ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், மூத்த தலைவர்களை சந்திக்க சென்ற போது, தன்னை புறக்கணித்துவிட்டு மொபைல் போனில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துவதாக கூறியிருந்த அவர், மாநில நிர்வாகிகள் கட்சி விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், சிக்கன் சாண்ட்விச்சில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அஸ்வினி குமார், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். மன்மோகன் சிங், கபில் சிபல் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். கட்சி சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி இருந்தார். கடந்த பிப்.,15ம் திக‌தி காங்கிரசில் இருந்து விலகினார். சோனியாவிற்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில் அவர், தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு உகந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

மன்மோகன் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி வகித்த ஆர்பிஎன் சிங், உ.பி., சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.,வில் இணைந்தார். அதற்கு முன்னர், அக்கட்சியில் இருந்து ஜிதின் பிரசாதா விலகி பா.ஜ.,வில் இணைந்த நிலையில், அவரை பின்பற்றி ஆர்பிஎன் சிங் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், 32 ஆண்டுகளாக காங்கிரசில் உள்ளேன். தற்போது உள்ளது போல் முன் எப்போதும் இப்படி இருந்தது கிடையாது என்றார்.

இந்நிலையில், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு நடக்கும் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில் சிபல் கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ள‌து. 

முக்கிய தலைவர்களின் வெளியேற்றம் காங்கிரஸுக்கு பலத்த  அடியாக உள்ளது.

No comments: