Saturday, May 7, 2022

பேரறிவாளன் விடுதலையை கையில் எடுத்தது நீதிமன்றம்

ராஜீவ் கந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில்  அவரை விடுதலை செய்வதற்கான காலக்கெடுவை அறிவித்தது  நீதிமன்றம்.

`பேரறிவாளன் விவகாரத்தில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவிக்க உத்தரவிடுகிறோம்'' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை   உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``பல ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையிலிருக்கிறார். அவருடைய நடத்தை நன்றாக இருப்பதால் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. அவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் எப்படி முடிவெடுக்க முடியும்? அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன? நாங்கள் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். அதன் நிலை என்ன? பேரறிவாளன் விவகாரத்தில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவிக்க உத்தரவிடுகிறோம். அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் தொடர்புடைய முக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். மத்திய அரசு மே 10-ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி நீதிமன்றமே முடிவெடுக்கும்'' எனத் தெரிவித்தனர்.

 தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியின் செயற்பாட்டுக்கு நீதிபதிகள் சாட்டையடி கொடுத்துள்ளனர்.  தமிழகத்தின் உத்தரவு  எச்சரிக் கை போல் உள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த , 2014ஆம் ஆண்டு, இந்த ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக  ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் திக்ச்தி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் ஏன் அவர் (பேரறிவாளன்) சிக்கிக்கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.

 இதையடுத்து நீதிபதிகள்,"ஆளுநர் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, எத்தனை முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது? அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்றால், இது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை சிதைத்துவிடும்" என்றனர்.

ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் தெரிவித்தனர்

பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் பிரபு   கூறுகையில், "மத்திய அரசு தரப்பில் மீண்டும் பழைய வாதத்தை முன்வைத்தனர். ஆனால், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவிற்கு எதிராக இருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக உள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழ்நாடு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட முடிவு குறித்த விபரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டனர்,'' என்றார்.

மேலும், இது குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதை குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதில், குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

''மத்திய அரசு பதிலில் நீதிபதிகள் திருப்தியடையவில்லை. மத்திய அரசுக்கு கொடுத்த வாய்ப்புகள் முடிந்து விட்டன. இப்போது நாங்கள் முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ''

''ஆகையால், அமைச்சரவை முடிவில் ஆளுநர் தலையீடு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு சட்டப்படி வாய்ப்புகள் அதிகம் உள்ளது,''என்றார் வழக்குரைஞர் பிரபு.

சுமார் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் திக‌தி பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பிணையில் வெளியாகி உள்ளார்.

காங்கிரஸும் ,பாரதீய ஜனதாக் கட்சியும் அரசியலில் எதிரிகள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டு கட்சிகளும் ஒரே கொள்கையில் உள்ளன.

பேரறிவாளன் விடுதலையை நீதிமன்றம்  கையில் எடுத்ததால் தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது.

 

No comments: