Friday, May 13, 2022

அரசியல்வாதிகளை அடக்கிய மக்கள் எழுச்


 முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

                     பட்டினத்தார்

 

முன்னை இட்டதீயும்,அன்னை இட்ட தீயும், பட்டினத்தார் இட்ட தீயும் எரிந்த பின் அணைந்தன. தென் இலங்கையில் அனுமன் இட்ட தீ நின்று நின்றுஅவ்வப்போது முழு இலங்கையையும் எரிக்கிறது. 

எரிப்பது,சூறையாடுவது, சொத்துக்களை அழிப்பது இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. 1958 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுதங்கள் அவை. அதன் உச்சக் கட்டம் ஆசியாவிலேயே அதி உன்னதமான யாழ்ப்பாண வாசிகசாலை எரிக்கப்பட்டது.அந்த ஆயுதங்கள் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் உச்சக்கட்டம் அடைந்தபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக மீரிகானவில் ஆரம்பமான போராட்டம், கோல்பேஸில் நிலைகொண்டு இலங்கை முழுவதும் பரவியது. மக்களின் தன்னார்வ எழுச்சி அரசாங்கத்துக்கு அச்சத்தை உண்டாக்கியது. ஜனாதிபதி,பிரதமர்,பசில் ஆகிய மூன்று சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்பும்  போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையின் அரசியல் அதிகாரம் ராஜபக்ஷ குடும்பத்தின் கைகளுக்குச் சென்றது.  போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் எவையும்  பெரும்பாலான சிங்கள மக்களின் உணர்வைத் தூண்டவில்லை.

யுத்தம் முடிந்தது, அச்சம் நீங்கியது என்ற  நிம்மதி  சிங்கள மக்கள் மனதில் தோன்றியது. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்த சிங்களவர்கள் கடத்தப்பட்டது, கொல்லப்பட்டது எவையும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.  இலங்கையில் உள்ள சீன நிறுவனங்களின் பதாகைகளில் சிங்களம்  புறந்தள்ளப்பட்டது.   தலை நகரில் தமிழ் மொழியை தார் பூசி அழித்தவர்கள் இதனைப் பெரிதாகக் கருதவில்லை.

பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களின் கண்களைத் திறந்துள்ளது. எரிவாயு, பெற்றோல்,டீசல், மண்ணெண்னை, அங்கர் போன்ற   பொருட்களின் தட்டுப்பாடு,  சீனி, மா, அரிசி,பருப்பு போன்ற‌அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன  அரசாங்கத்துக்கு  எதிரான போராட்டத்துக்கு  வழி அமைத்தது

கொதிப்படைந்த மக்களை சாந்தப்படுத்தும் வழிவகை தெரியாமல் தவித்த ஜனாதிபதி அரசாங்கத்தை  மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்னர் நிலையான அரசாங்கம்  ஒன்றை அமைக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உருவானது. போராட்டக்கார்களைத் திசை திருப்புவதற்காக பிரதமர் பதவியியை மஹிந்த இராஜிநாமா செய்தார். பதவியை விட்டுக்கொடுக்க  மஹிந்த விரும்பவில்லை. பதவி விலக மாட்டேன் என உறுதியாகச் சொன்னார்.

பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும், அதேவேளை மக்கள் செல்வாக்கு தனக்கு இருக்கிறது எனபதையும் வெளிப்படுத்த வேண்டும். இதற்காக அலரிமாளிகையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.அந்தக் கலந்துரையாடலின்  முடிவில் வன்செயல் ஆரம்பமானது. ஒரு மாதம் நடைபெற்ற அமைதியான போராட்டம் யுத்தகளமாக  மாறியது.  கிறிஸ்தவ மத   போதகரும்,  சிங்கக் கொடியை வைத்திருந்த  இளம் பெண்ணும் தாக்கப்பட்டதைக் கண்ட பலரும் கண்கலங்கினார்கள். 

அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள்  வெகுண்டெழுந்ததால்  வன்முறையை ஆரம்பித்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். அவர்கள் வந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சில வாகனங்கள் பேரை வாவியில் வீசப்பட்டன.   வன்செயலை ஆரம்பித்தவர்களும் பேரை வாவிக்குள் தூக்கி எறியப்பட்டனர். கொழும்பில் நடைபெற்ற‌ வன்செயலின் தாக்கம்  நாடெங்கும் எதிரொலித்தது.  முன்னாள் பிரதமர் மஹிந்தவின் தங்காலை வீடு, குருநாகலில் உள்ள‌ அவரது வீடு, நாமலின் வீடு,பசிலின் வீடு என்பன தீக்கிரையாக்கப்பட்டன.  பிரதான அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன  தீயில் பொசுங்கின. அரசாங்கத்தின்  மீது மக்களுக்கு இருந்த கோபம்  நெருப்பாக வெளியேறியது.

அரசியல் மாற்ற‌ங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழமை.  ஆனால், இந்தப் போராட்டம்  இலங்கைக்குப் புதியது. வன்முறைகுப் பதில் வன்முறை  அல்ல. ஆனால், அவர்களுக்கு அப்படியான ஒரு பதிலைக் கொடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது.

இலங்கை அரசியலின் வாக்கு வங்கி  இனப் பிரச்சனையின் அடிப்ப‌டையில்தன் வளர்க்கப்ப‌டுகிறது. சிங்களம் மட்டும் சட்டம், பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி  செல்வா ஒப்பந்தம் ஆகியன கிழித்தெறியப்பட்டமை ஜே.ஆரின் பாதயாத்திரை ,  பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டமை போன்றவை சிங்கள அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை உயர்த்தின.

தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழ்த் தலைவர்கள் அகிம்சைவழியில் போராடினார்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். த‌மிழ் மக்கள் அனைவ‌ரும் பயங்கரவாதிகள் என  முத்திரை குத்தப்பட்டது.  இவை எல்லாம் மறைமுகமாக சிங்கள வாக்கு வங்கியை உயர்த்தின.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு எதிராகவே பதியப்பட்டன. தமிழ் வாக்குகளால் பாராளுமன்றத்துக்குச் சென்றவர்கள் சிங்களக் கட்சியில் இணைந்து சுகபோகம் அனுபவித்தனர்.

வடக்கு, கிழக்கு  தமிழ் வாக்குகள் தமக்குரிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யவில்லை. தமக்குப் பிடிக்காத ஒருவர் ஜனாதிபதியாக்க்கூடாது என்பதற்காக அவரை எதிர்த்தவருக்கு வாக்களித்தார்கள்.

ஆட்சிமாற்றத்தால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. பொருளாதாரப் பிரச்சினை காலக்கிரமத்தில் தீர்க்கப்படலாம். இலங்கையின் மூவின மக்களையும் அரவனைக்கும்போதுதான் இந்து சமுத்திரத்தின் முத்து உலகின் கவனத்தை ஈர்க்கும். 

No comments: