Saturday, January 15, 2022

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க களம் இறங்கிய மகாராஷ்டிரா


 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம் கொஞ்சம் தூக்கலானது. மத்திய  அரசுடன் இணக்கமாக இருந்தால் ஆளுநர் அமைதியாக இருப்பார். மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்தால் ஆளுநர் அத்து மீறுவார்.

 மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் ஆளுநர் தனது எல்லையை மீறி செயற்படுவார். மிக்கிய மசோதக்களை தாமதப்படுத்தி மாநில அரசின் செயற்பாட்டை முடக்குவார்.     பாண்டிச்சேரியின்  முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகாரம் எல்லை மீறியது. அன்றைய முதல்வர்  நாராயணசாமியின் அரசுக்கு அவர் கொடுத்த தொல்லையால் முதல்வரால் நிர்வாகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

முருகன், நளினி உட்பட ஏழுபேரின் விடுதலை தொடர்பான மசோதா ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது. இது தொட்ர்பான விளக்கக் மனுவை  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்  கட்சிகள் ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளன.

இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும்  சட்டத்தை மகாராஷ்டிர அரசு இயற்றியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இருக்கிறது. ஆளுநரின் அந்த அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.  அதனைப் பின்பற்றி தமிழகமும் சட்டம் இயற்றி ஆளுநருக்கு குடைச்சல் கொடுக்க உள்ளது.

மாநிலங்களில் பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆளுநர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஆளுநர்களுக்கு இருக்கிறது. இதில், பல மாநிலங்களில் சர்ச்சை எழுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர்கள் செயல்பட்டுவரும் நிலையில், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இத்தகைய பிரச்னைகள் எழுகின்றன. உதாரணமாக, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்தப் பிரச்னை நிலவுகிறது.

தமிழகத்தில் இதற்கு முன்பாக பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியது. தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாகச் சொல்லப்படும் சில கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகின. 

இதற்கிடையே, சிவசேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில் பகத்சிங் கோஷியாரி ஆளுநராக இருக்கிறார். அங்கு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்துவரும் நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசு பறித்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, பா.. எம்.எல்.-க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

`மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2016’-ல் அந்த மாநில அரசு திருத்தம் கொண்டுவருகிறது. அதற்கான மசோதா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஐந்து பெயர்களிலிருந்து ஒரு பெயரை துணைவேந்தர் பதவிக்கு ஆளுநர் தேர்வுசெய்வார் என்பது இதுவரையிலான நடைமுறை.

ஆனால், இந்த மசோதாவின்படி, தேடல் குழு ஐந்து பேர்கொண்ட பட்டியலை மாநில அரசிடம் அளிக்க வேண்டும். அதிலிருந்து இரண்டு பெயர்களை ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பும். அந்த இருவரில் ஒருவரை துணைவேந்தர் பதவிக்கு ஆளுநர் தேர்வுசெய்ய வேண்டும். அந்த நபர், 30 நாள்களுக்குள் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். தேடல் குழு பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியலுக்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், அதே தேடல் குழுவோ அல்லது புதிய தேடல் குழுவோ, புதிதாக ஐந்து நபர்களின் பெயர்களை அளிக்க வேண்டும்.

இதற்கு முன்பு, தேடல் குழு ஐந்து பெயர்கள் அடங்கிய பட்டியலை வேந்தருக்கு அனுப்பும். அவற்றுக்கு வேந்தர் ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், புதிய பெயர்ப் பட்டியலை அளிக்குமாறு அதே குழுவிடமோ அல்லது புதிய குழுவிடமோ கோருவதற்கு வேந்தருக்கு அதிகாரம் உண்டு. மேலும், மகாராஷ்டிராவில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மூலமாக, பல்கலைக்கழக இணை வேந்தர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. வேந்தர் இல்லாதபட்சத்தில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு இணை வேந்தர் தலைமை வகிப்பார். பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை இணை வேந்தரால் கேட்டுப்பெற முடியும்.

இத்தகைய மாற்றங்களுடன் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு எதிர்க் கட்சியான பா.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மசோதாவை சட்டமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை பா..-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்மொழிந்தார். ஆனால், குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர், கடும் அமளிக்கு மத்தியில் மசோதா நிறைவேறியது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தைப் பறிப்பதற்கான சதி என்று விமர்சித்துள்ள ஃபட்னாவிஸ், இதற்கு எதிராக மாநில அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாகவும், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச்செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒபுதலளிக்க வேண்டும். ``ஜெயலலிதா முதல்வராகவும் சென்னாரெட்டி ஆளுநராகவும் இருந்தபோது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்க முடியாது என்கிற ஒரு சட்ட மசோதாவை 1995-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு  அனுப்பபட்டது. அதற்கு என்ன நடந்ததெனத்  தெரியாது. அது போன்ற ஒரு நிலைதான்  இதற்கும் நடக்கும்.

சட்டமன்றத்தில் தீர்மானம் போடலாம். ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றால், அது மத்திய அரசால்தான் முடியும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித் தனி சட்டம் இருக்கின்றன. அதில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால், ஆளுநரின் ஒப்புதலுக்குத்தான் போக வேண்டும். ஆகையால், அது நிறைவேறாது  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நிமியனம், பல்கலைக்கழகச் செயல்பாடுகள், அதிகாரம் போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்க வேண்டும். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஒரு பிரநிதிதான். முதல்வருக்குச் சில அதிகாரங்கள், ஆளுநருக்கு சில அதிகாரங்கள் என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற இரட்டையாட்சி முறை இப்போது இல்லை. அது ஒழிக்கப்பட்டுவிட்டது.இறையாண்மை பெற்ற ஒரு மாநில அரசு இருக்கும்போது, அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையில் முடிவெடுக்கும் அதிகாரம், அந்த மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. மாநில அரசை கலந்தாலோசிக்காமலும், மாநில அரசின் பரிந்துரைகளை ஏற்காமலும், நானே ஒரு குழுவை அமைப்பேன் என்று ஆளுநர் செயல்பட்டால், அது ஒரு ஜனநாயக விரோதப் போக்கு. மக்களாட்சி மாண்புக்கு எதிரானது எனவும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments: