Sunday, January 2, 2022

மோடியை வரவேற்க தயாராகிறது தமிழகம்


இந்தியப் பிரதமர் மோடியை மிகவும் மூர்க்கமாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்துக்கு வரும் மோடியை  வரவேற்கத் தயாராகிவிட்டது. மோடி எமது எதிரி அல்ல, அவர் தமிழகத்துக்கு வரும்போது எதிர்ப்புக்காட்ட வேண்டாம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாரதி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.   ஆர்வக்கோளாறில் ஐடி விங் நிர்வாகிகளில் சிலர், மோடியை எதிர்த்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடக் கூடும் என்பதால் முன் கூட்டியே இந்த அறிவுறுத்தல் என்கிறார்கள்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழகம் இருந்தபோது  இந்தியப் பிரதமர் மோடியின்  விஜயம் எதிர்ப்பலையால் பேசு பொருளானது.

தமிழக முதல்வராகமு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது, புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்தது, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, உற்பத்தி செய்ய உத்தரவிட்டது என தமிழக அரசின் செயல்பாடுகள் மத்திய அரசை விட்டு விலகி இருந்தது.

கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த திமுக கறுப்பு பலூன்களை பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் திகதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது. பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தருவதாக பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர்.   திமுகவினரும் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த காலங்களை போல் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி விங்கில் உள்ள நிர்வாகிகளில் சிலர் ஆர்வக்கோளாறில் ஏதேனும் பதிவை வெளியிட்டோ அல்லது மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தோ அரசுக்கு சிக்கல் ஏற்படுத்திவிடக் கூடாது என நினைத்த திமுக தலைமை அதுபோன்ற காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

 பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்தமுறை வரவேற்பு மழை மட்டுமே பொழியவிருக்கிறது. மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டட கட்டுமானப்பணி அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால், அவர்கள் தரப்பிலும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராகி வருகின்றனர். தமிழகம் வரும் பிரதமருக்கு ஸ்டாலின் நேசக்கரம் நீட்டும் நிகழ்வு தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

  திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டதும் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதும் திரும்பிப்பார்க்கத் தக்கது. இப்போதே அதே திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில், பிரதமருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருவது கவனிக்கத்தக்கது

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அன்றைய எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை வகித்த ஸ்டாலின் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார். தினட்தந்தியின் பவளாவிழாவில் மோடி கலந்துகொண்டபோது ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. வாழ்த்து அனுப்பினார். இப்போ தமிழகத்தின் முதல்வராக பிரதமர்  மோடியை வரவேற்க ஸ்டாலின் தயாராகிறார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் தமிழக அரசியல் கட்சிகள்    சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களை நடத்தினர். 

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மனு அளித்தனர். டெல்லியில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். அதனால் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் இந்த மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து   உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மனு அளித்தது.

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்றது. டெல்லியில் விவசாயிகள், இந்த 3 சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓராண்டாக பாராமுகமாக இருந்த நிலையில் திடீரென பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தினார். என்னதான் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவு இது என கூறப்பட்டாலும் பாஜக எந்த ஒரு பிரச்சனையிலும் பிடிவாதமாக இருக்காது என்பதை வெளிப்படுத்தியிருந்தது இந்த முடிவு. அதேபோல் நீட் தேர்வு விவகாரத்திலும் அதிரடியான நிலைப்பாட்டை மத்திய அரசு அல்லது பிரதமர் மோடி அறிவிக்கலாம்; அதற்கான முன்னோட்டங்களே டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களின் இந்த முயற்சிகள் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மோடியின் தமிழக விஜயத்தின் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  பெருமெடுப்பில் வரவேற்பளித்தன. திராவிட முன்னேற்றக் கூட்டனியின் தலைமையிலான கட்சிகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டின.  இப்பொழுது முதன் முதலாக ஸ்டாலினின் தலைமையிலன அரசாங்கம் வரவேற்பளிக்கப் போகிறது.  ஸ்டாலினின்  கூட்டணிக் கட்சிகள் அமைதியாக  இருக்கப்போகின்றன.

ஒட்டுமொத்தத் தமிழகமும் மோடியை வரவேற்கப் போகிறது. அதற்குப் பிரதி உபகாரமாக மோடி என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

No comments: