Friday, January 7, 2022

இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தலைவர்களின் கடிதம்


 இலங்கை அரசியலில் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஒருகாலத்தில் பெரியண்ணனாக இந்தியா தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. பெரியண்ணனுக்குப் பக்கத்தே இருக்கும் குட்டிப் பையனான இலங்கை  பெரியண்ணனின் சொல்லை இப்போது கேட்பதில்லை. குட்டிப் பையனின் குழப்படியைக் கண்டும் காணாதது போல் இருக்கும் பெரியண்ணன் தனது அரசவை விழாக்களின் போது குட்டிப் பையனை செங்கம்பளம் விரித்து  வரவேற்கத் தவறுவதில்லை.இலங்கை தமிழ்  அரசியல் தலைவர்கள் இந்தியாவின் மீது  முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இலங்கைத் தமிழரின் பிரச்சினையை என்றைக் காவது  ஒருநாள்  இந்திய தீர்த்து வைக்கும் எனும் குருட்டு நம்பிக்கையில் காலத்தைக் கடத்துகின்றனர்.

 இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து தமிழ்,முஸ்லிம், மலயக அரசியல் தலைவர்கள்  ஒன்றிணைது கூடி ஆராய்ந்தனர். கடிதத்தில் என்ன எழுத வேண்டும் என யோசித்தபோது அவர்களுக்கு 13 ஞாபகம் வந்தது. 13 ஆவது திருத்தச் சட்டமானது, இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினை, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், 1987 இல் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருந்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்தச் சட்டத்தையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதற்குக் காரணமும் இருக்கிறது. அது சொந்த நலன் சார்ந்ததுதான். 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன, இலங்கையின் ஜனாதிபதியானதன் பின்னர், தாராள பொருளாதாரக் கொள்கையைச் செயற்படுத்தி, அமெரிக்கச் சார்புள்ள அரசியல் கொள்கையை முன்னெடுத்தார். இந்து சமுத்திரப் பிராந்தியம், தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கின்ற இந்தியாவுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்குள் தலையிட்டது.

இந்தியாவின் தலையீடு, பெரும்பாலும் தமிழ்ப் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவும் வளர்ப்பதாகவும்  தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக, பூட்டானின் திம்புவிலும் இந்தியாவின் புதுடில்லியிலும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை தோல்வியில் தான் முடிந்திருந்தன.

13 இந்தியப்பிரதமர் மோடிக்கு  ஞாபகப் டுத்துவதற்கு  தமிழ் அரசியல் தலைவர்கள் முடிவு செய்தனர். பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்   .வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா,தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் கையெழுத்திடவில்லை. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என வலியுறுத்திவந்த மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்த ஆவணத்தில் கையெழுத்திடாமை குறித்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கரிசனை கொண்டுள்ள தரப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 இது ஏற்கெனவே  எதிர் பார்த்த ஒன்றுதான். இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினைகள்  ஒரேமாதிரியானவை அல்ல. ஆகையால், அனைவரையும் திருப்திப் படுத்தும் வகையில் ஒரு ஆவணத்தைத் தயாரிக்க முடியாது.    இலங்கைப் பிரச்சினை பற்றி மோடிக்கு நன்கு தெரியும்  தமிழ்த்தலைவர்கள் அனுப்பும் கடித்தத்தைப் பார்த்தபின் பு எவர் உடனடியாகத் தலையிட்டு பிரச்சினையைத்  தீர்த்து வைப்பார் என  யாரும் எதிர் பார்க்க மாட்டார்கள்.இது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும்  இராஜ தந்திர நகர்வு மாத்திரமே. ஆனால், இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு நரியான இலங்கை அரசாங்கம் அஞ்சப்போவதில்லை. மோடிக்கு அனுப்புவதற்கு தயாரிக்கப்பட்ட ஆவணமும் ஒரே முறையில் தயாரிக்கப்படவில்லை. ரெலோவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் பின்னர் இன்னொரு தரப்பால்  திருத்தி வடிவமைக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பப்பமிட்ட  ஆவணம் எனக் கூறப்படுகிறது. மையகத் தலைவர்கலும், முஸ்லிம் தலைவர்கலுக் கையெழுத்திடவில்லை.  கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரகுமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கபப்ட்டதாகத் தெரியவில்லை. அங்கஜனை மறந்துவிட்டார்கள். விஜயகலாவை அரசியல் அரங்கில் காணவில்லை.

இந்தியப் பிரதமருக்கு  எதிராக இந்தியாவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள், அடுத்து வரபோகும் மாநிலத் தேர்தல்கள் என்பனவற்றால்  மோடி  கலக்கத்தில் உள்ளார். இந்த ஆவணத்துக்கு  இந்தியப் பிரதமர் மோடி பதிலளிப்பாரா இல்லையா  என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

No comments: