Friday, January 28, 2022

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்த ஆண்டகை

இலங்கையில் உள்ள  கத்தோலிக்க மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை எனக்கூறிய கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உரிய விசாரணையை நடத்த உதவியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக கடந்த வாரம் கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். விகாரைகள்,சைவ ஆலயங்கள்,மசூதிகள், பாடசாலைகள்,வைத்தியசாலைகள் போன்றவையும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரையாகின.எங்கெங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படக்கூடாதோ அங்கெங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசாங்கத்தின் மீது நம்பிகை இழந்த காரணத்தினால்  ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைக் கோருவதற்கான  முடிவை எடுத்ததாகவும்  இனிமேலும் அரசாங்கததின் உறுதிமொழியை நம்ப முடியாதெனவும் பேராயர் கூறினார்.பிரதான வல்லரசு நாடுகள் மூலமாகவே இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராயர்.

  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  28 ஆம் திகதி நடைபெற்ற தொடர் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட,  காயமடைந்த  மக்களுக்கு உரிய நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

 ஈஸ்டர் ஞாயிறு அன்று,   தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தவர்களையும், நட்சத்திக் கோட்டல்களையும் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறைந்தது 253 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள், ஆனால் , இங்கிலாந்து, டென்மார்க், போர்ச்சுகல், இந்தியா, துருக்கி, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பங்களாதேஷ், அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப்  பயங்கரவாதத் தாக்குதலினால் கொல்லப்பட்டனர்.

நேஷனல் தவ்ஹீத் ஜமாத் (ண்TJ) எனப்படும் அதிகம் அறியப்படாத உள்ளூர் போராளி இஸ்லாமியக் குழுதான் இதற்குக் காரணம் என்று இலங்கை அதிகாரிகள்   தெரிவித்தனர் .முன்னதாக ஐஎஸ் அமைப்பு  தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. நாட்டை உலுக்குய இத் தாக்குதல் போன்று மேலும்ம் பல தாக்குதல்கள் நடை பெறலாம் என்ற அச்சம் உருவானது.  துரிதமாக நடைபெற்ற விசாரனைகளின் பின்னர்   கிழக்கு நகரமான சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றை பொலிஸார்  சோதனையிட்டதில் குண்டுவெடிப்பின் மூளையாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய போதகர் சஹ்ரான் ஹாசிமின் உறவினர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் பல இடங்களிலும் இருந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்குவதில் தீவிரமாக செயற்பட்டவர்களில்   பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒருவர். மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கோட்டாபய வெற்றிபெற்ற பின்னர் அவருடைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளின் பின்னரான சூழலில். நம்பிக்கையிழந்து விட்டார்.

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மகிந்த ராஜபக்ஷ .நாவுக்குச் சென்றார். இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான குற்றச் சாட்டுகள் .நாவில் பாரடுத்தபட்டுள்ளன.

உள்ளகப் பொறிமுறையின் மூலம விசாரணை நடத்தலாம் என இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்தது. அரசாங்க்ம் நடத்தும் விசாரணையில் இலங்கைத்  தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அந்த இடத்துக்கு இப்போது கத்தோலிக்க மக்கள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் ஈஸ்டர் தாக்குதலை  ஜனாதிபதி விசாரணைக்குழு விசாரிக்க ஆரம்பித்தது.

  பொரளை தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டவருக்கும் அங்கு வைக்கப்பட்ட குண்டுக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப் படுத்தும் காணொழிகள் வெளியாகி உள்ளன.   அந்த  தொடர்பான விசாரணைகள் கூட உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளதென்றும் பேராயர் கூறியுள்ளார்.

பேராயரை  சாந்தப்படுத்த அரசாங்கம்  மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கலுக்கும் கயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பேராயர் உறுதியாக இருக்கிறார். ஆணைக்குழுவின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து  வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரனையில் நம்பிக்கை இழந்த   பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை   நீதிகோரி சர்வதேச சமூகத்தை நாடவுள்ளதாகப் பல முறை கூறியிருந்தார். அது  தொடர்பான எந்த ஒரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.  செயற்பாடுகள் எதனையும் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விசாரணையை நடத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதும் அறிவிப்பில் இருக்குமா அல்லது செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடுமா என்பதை காலம் தான் கூற வேண்டும்.

No comments: