Monday, January 24, 2022

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்


 இலங்கையில் அரசியல் ரீதியாகத்  தோன்றிய   பல பிரச்சினைகளுக்கு   அவ்வப்போது சுமுகமான   தீர்வுகள்   கிடைத்தன. ஆனால், தமிழ் மக்களுக்கான  பிரச்சினை மட்டும் புரையோடிப்போய்  இன்னமும் தீர்க்கப்பட முடியாத நிலையில்  இருக்கிறது.ஒரு சிங்களத் தலைமை பிரச்சினையைத் தீர்க்க முன் வரும்போது இன்னொரு தலைமை அதற்கு கடுமையான கடிமையான எதிர்ப்பைத் தெரிவித்து தடுத்துவிடும்.

பிரச்சினை தீருவதுபோன்ற ஒளிக்கீற்று ஒன்று தென்படும். பின்னர் அது  மறைந்துவிடும். சமாதானம் செய்ய வந்த வெள்ளைப் புறாவும் இரத்தத்தில் தோய்ந்தது. புதிதாகப் பதவி ஏற்கும் அரசாங்கம் தமிழ்த் தலைவர்களுடன்      பேச்சு வார்த்தை நடத்தும் அந்தப் பேச்சுவார்த்தை அநேகமாக முதலில்     இருந்தே ஆரம்பமாகும்.

கோட்டாபய ஜனாதிபதியானதும் .பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. தமிழ்த் தலைவர்களில் சிலர்  அமெரிக்காவுக்குப் பறந்தனர். சிலர்  இந்தியாவின்  பக்கம்  ஒதுங்கினர்.  இந்த நிலையில் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி வெளியிடப்போகிறார் என்ற செய்தி ஒன்று பரபரப்பாக உலாவியது.

பாராளுமன்றத்தின்   கூட்டத்தொடரை ஜனாதிபதி  ஆரம்பித்து வைக்கும்  உரையில் நாட்டின் ஏதிர் காலம் பற்றிய முக்கியமான திட்டங்களை வெளியிடுவது  வழமை.  9 ஆவது பாரளுமன்ற இரண்டாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடம் இருந்து   தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய முன் அறிவிப்பு வரும் என தமிழ்த் தலைவர்கள் நம்பிக்கையுடன் எதிர் பார்த்து காத்திருந்தனர்.

நடத்துவார் என்ற செய்தியும் இறக்கை கட்டிப் பறந்தது.  இதனால் சில  தமிழ்த் தலைவர்கள் ஏதோ ஒரு எதிர் பார்ப்புடன் காத்திருந்தனர். ஜனாதிபதியுன் உரையில் தான் எதிர்பார்த்த எதுவும் இல்லாமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்  இரா.சம்பந்தன் ஏமாற்ற மடைந்தார்.அதன் எதிரொலியாக பசிலிடன் அவர் சீறிப் பாய்ந்தார்.

சந்திரிகா ,ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசா  போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே இனப்பிரச்சனைத் தீர்வு விவகாரத்தில் நேர்மையுடன் செயற்படவில்லை.13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக முடக்கப்பட்டது. சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை ரணில் எதிர்த்தார்.ரணிலின் தீர்வுத் திட்டத்தை சந்திரிகா எதிர்த்தார். சந்திரிகா, ரணில் ஆகிய இருவரும்  இணைந்து நல்லாட்ட்சி செய்யப் போகையில் மகிந்த எதிர்த்தார்.

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல்,  புத்த விகாரை கட்டுதல், மற்றும் காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் அனைத்தும் 2015 இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் கொழும்பை மையப்படுத்திய திணைக்களங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியின் உரையில் உப்பு சப்பில்லை என்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியின் உரையை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரை சிறப்பானதெனக் கூறுகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா  ஒருபடி மேலே  போய் ஜனாதிபதியின் கையை தமிழ்த் தலைவர்கள் பற்றிப்பிடிக்க வேண்டும் என்கிறார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். அரச தலைவரின் சிம்மாசன உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபயவின்   கொள்கைகள் அனைத்தையும் தெரிந்துகொன்ட சம்பந்தன் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை அவர் தருவார் என எப்படி எதிர்பார்த்தார்.

2009 இல் இறுதிப் போரை நடத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கும் நிலையில் அவரிடம் இருந்து வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது. சிங்கள கடும் போக்களர்களின் வாக்குகள் தான் கோத்தபயவை ஜனாதிபதியாக்கியது. தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவை இல்லை என்பதை அந்தத் தேர்தல் உணர்த்தியது. சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பௌத்த குருமாரும் விரும்புவதையே கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் எடுத்துரைத்திருக்கிறார். இது ஒன்றும் புதிய கொள்கை அல்ல.

சவால்களை வெல்ல முன்வாருங்கள், அரசியலுக்காக மக்களித் தூண்டாதீர்கள், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வடக்கு கிழக்கு பாராளுமன்ற  உறுப்பினர்கள்  ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். வடக்கு,கிழக்கு மக்களை அரவணைக்காமல் ஒத்துழை க்க வேண்டும் என்று விடுக்கப்படும் வேண்டுகோளை வடக்கு,கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள்.  தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து எந்தவொரு காத்திரமான விடயமும் முன்வைக்கப்படவில்லை. அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்தின் வாழ்வாதாரச் செயற்பாடுகளில் ஒத்துழைக்க வேண்டுமென்று வடக்கு கிழக்குப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததில் எவ்வித யதார்த்தமும் இல்லை. 

 

No comments: