Tuesday, February 28, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -58



 

  

தமிழ் சினிமாவில் வாய்ப்புத்தேடி அலைந்த வாலிகளைத்துப்போனார்.  கவிஞர் கண்னதாசனையே திரை உலகினர்  பெரிதும் நம்பினார்கள். அவர் பாடல்கள்  கொடுக்கத் தாமதமானாலும் காத்திருந்து பாடல்களைப் பெற்றனர். எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்கள்  பட்டி  தொட்டி என்க்கும் ஒலித்தன.  வாய்ப்புத் தேடித் தவமிருந்த வாலி தனக்குக் கிடைத்த சின்னச் சின வாய்ப்புகளைப் பயன் படுத்தி தனது திறமையை  வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆருக்காக தெய்வத்தாய், படகோட்டி ஆகிய படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதினார்.  அந்த இரண்டு படங்களின் பாடல்களும்  மக்களுக்குப் பிடித்து விட்டதால் எம்.ஜி.ஆரின் மனதில் வாலி இடம் பிடித்தார்.

எம்ஜிஆர் -கண்ணதாசன் என்ற  வெற்றிக் கூட்டணிக்குள்  வாலியும் இணைந்தார்.  எம்.ஜி.ஆர்,  வாலி கூட்டனியிலும்  பாடல்கள்  பிரமாதமாக  இருந்தன.  58ம் ஆண்டு ‘அழகர்மலைக் கள்வன்’ என்ற படத்தில் பாட்டெழுதத் தொடங்கினார் கவிஞர் வாலி. படத்துக்கு ஒரு பாடல் எழுதி வந்தார். அந்தப் படமும் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை கிடைத்து வந்தது. 61ம் ஆண்டு, எம்ஜிஆர் நடித்து, அறிஞர் அண்ணாவின் வசனத்தில் வந்த ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் ஒரு பாடல் எழுதினார். பாட்டு ஹிட்டானது என்றாலும் கண்ணதாசன் - எம்ஜிஆர் கூட்டணி வலுவாக இருந்த காலம் அது.


முக்தா சீனிவாசனின் இயக்கத்தில், ஜெமினி கணேசன் நடித்த ‘இதயத்தில் நீ’ படத்தில் கண்ணதாசனும் மாயவநாதனும் வாலியும் எழுதியிருந்தார்கள். மாயவநாதனும் மிகச்சிறந்த பாடலாசிரியர்தான். சொல்லப்போனால், மாயவநாதன் எழுதிய பல பாடல்கள், கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று கொண்டாடப்பட்டன. அந்த அளவுக்கு மாயவநாதன் பாடல்கள் எழுதி பிரபலமாகியிருந்தார். பின்னாளில், வாலியின் பாடல்களைக் கேட்டுவிட்டு, கண்ணதாசன் பாடல்கள் என்று பலரும் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கண்ணதாசன் பாட்டு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

‘இதயத்தில் நீ’ படத்தில் வாலி எழுதிய பல பாடல்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 63ம் ஆண்டு இந்தப் படம் வெளியான அதே காலகட்டத்தில், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், ‘கற்பகம்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் முதன்முதலாக எல்லாப் பாடல்களையும் எழுதினார் வாலி. பெண் குரல் கொண்ட எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இதே சமயத்தில், பாலசந்தரின் கதை, வசனத்தில் , கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் ‘அவளுக்கென்ன’ பாடலை எழுதினார். இன்று வரைக்கும் அந்தப் பாடல் ஹிட் லிஸ்ட் வரிசையில் இருக்கிறது. 64ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த ‘தாயின் மடியில்’ படத்துக்கு வாலியும் பாட்டு எழுதினார்.இந்த வருடம்தான் ‘தெய்வத்தாய்’ படம் வெளிவந்தது

’இந்தப் புன்னகை விலை’ என்ற பாடல், ’வண்ணக்கிளி சொன்னமொழி என்ன மொழியோ?’, என்ற பாடல், ’ஒருபெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ என்ற பாடல் என எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் உண்டு. அது எம்ஜிஆரின் திரைப் பயணத்தில் டாப் கியர் எடுப்பதற்கும் அரசியல் வாழ்வில் பல படிகள் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் பாடல்... ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’. இந்தப் பாடல், எம்ஜிஆரை மிகப்பெரிய உயரத்தில் இருந்து உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வாலியை உயரத்துக்குக் கொண்டு சென்றது.

இதையடுத்து, இதே 64ம் ஆண்டில், ஜி.என்.வேலுமணி தயாரிப்பில், டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், மனோரமா நடிப்பில் வெளியானது ‘படகோட்டி’.

இந்தப் படத்தில், ஒரேயொரு பாட்டெழுதத்தான் வாலியை அழைத்தார்கள் என்றும் அந்தப் பாட்டு எம்ஜிஆருக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் எல்லாப் பாடல்களையும் வாலியைக் கொண்டே எழுதவைத்தார் என்றும் சொல்லுவார்கள்.

எம்ஜிஆர் படத்துக்கு எல்லாப் பாடல்களுமே வாலி எழுதியது ‘தெய்வத்தாய்’ படத்தில்தான். இதன் பின்னர் ‘படகோட்டி’ படத்தில் எல்லாப் பாடல்களும் எழுதினார்.

‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ என்றொரு பாடல். ’என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’, என்றொரு பாடல். ’கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு’, ‘தொட்டால் பூமலரும்’, ’பாட்டுக்குப் பாட்டெடுத்து‘ என்ற பாடலும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ என்ற பாடல்கள் அனைத்துமே அப்படியொரு ஹிட்டைப் பெற்றன.

மீனவர்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில், இன்னும் இரண்டு பாடல்கள் எழுதியிருந்தார் வாலி. ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்’ என்ற பாடலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற பாடலும் அடைந்த வெற்றிக்கு அந்தக் கடல்தான் எல்லை.

மீனவக் குடும்பங்களில் என்றில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் பாடல்களும் டி.எம்.எஸ்., சுசீலாவின் குரலும் இன்னும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ’ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்பன போன்ற வரிகள், கடலில் கால் வைக்காதவர்களின் மனங்களையும் அசைத்து உலுக்கியது.

எம்ஜிஆரின் மறக்கமுடியாத பட வரிசையில் ‘படகோட்டி’க்கு இடம் உண்டு. கவிஞர் வாலியின் திரை வாழ்வில் ‘படகோட்டி’க்கு இடமுண்டு. 1964ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி வெளியான ‘படகோட்டி’ படம் வெளியானது. 56 ஆண்டுகளானாலும் ‘தொட்டால் பூமலரும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ முதலான பாடல்களை மறக்கவே முடியாது!

’கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’... எம்ஜிஆர் - வாலி கூட்டணியின் 2வது மெகா ஹிட் பாடல்கள்!

No comments: