Tuesday, February 28, 2023

`ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் - ரஷ்ய போர்!'

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயானப் போர் ஓராண்டைக் கடந்துவிட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கில் உயிர் பலிகள், மீட்டுருவாக்கம் செய்யமுடியாத உடமை சேதங்கள், பில்லியன் கணக்கில் பொருளாதாரச் சரிவுகள் என அனைத்து வகையான பேரிழப்புளைச் சந்தித்தபின்னும் போரை முடிவுக்கு கொண்டுவராமல் இருநாடுகளும் உக்கிரமாய் தங்கள் சண்டையைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்றன.   உலக நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என கேட்டுக்கொண்டாலும் அவற்றையெல்லாம் மதிக்காமல் விடாப்பிடியாக போரைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஐ.நா-வும் வழக்கம்போல `போரை நிறுத்துங்கள்' என கண்துடைப்பு அறிக்கைகளையே ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் தாக்கத்தால் அந்த இரு நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன  

குறிப்பாக, ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாழும் உக்ரைன் மக்கள்(ரஷ்ய மொழி பேசுபவர்கள்) பொதுவாக ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டுடனும், மேற்குப்பகுதியை ஒட்டிய உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டுடனும் இருக்கின்றனர். உக்ரைன் மக்களின் இந்த அடிப்படை உளவியலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள்பக்கம் இழுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம், உக்ரைன் ரஷ்யாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உக்ரைனை சரியான களமாக தேர்வுசெய்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டு நாடுகள், உக்ரைனை தங்களின் நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தன. வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுசேர ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துவந்த உக்ரைன், நேட்டோ ( NATO- அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளோடு 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) கூட்டமைப்பில் இணையவும் ஆர்வம் 


உலகமே 2022-ம் ஆண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்றுக்கொண்டிருந்தபோது, உக்ரைன்-ரஷ்யா நாடுகள் மட்டும் மிகுந்த பதற்றத்துடனே காணப்பட்டன. 2021 நவம்பர் மாதம் தொடங்கிய அந்தப் போர்ப் பதற்றம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கணக்காக நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்றார்போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``உக்ரைனைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்" என உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிராக உசுப்பிக்கொண்டிருந்தார்.

உக்ரைன் எல்லையைச் சுற்றி சுமார் 1 லட்சம் ரஷ்யப் படைவீரர்கள் குவிக்கப்பட்டனர். கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டுப் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும்கூட ஆயுதப்பயிற்சி வழங்க உத்தரவிட்டார். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. அதேசமயம், நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்குள் `அமெரிக்கர்களே உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்' என அவசர அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், ``ரஷ்யாவிடம் போர்த் திட்டங்கள் தயாராக இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை(Kyiv) முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கிறது. இதன்மூலம், 1945-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய போரை நடத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது" என வலுவான எச்சரிக்கை விடுத்தார். 

2022, ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி  எதிர்பார்த்தபடியே ரஷ்ய ஜனாதிபதி  புதின், உக்ரைன் மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த கணமே, உக்ரைன் மீது வான்வழியாகக் குண்டுமழை பொழிந்தது ரஷ்ய விமானப்படை. இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே ரஷ்யா சொல்லியது. அதேபோல, தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். ``ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 130 பேர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட 316 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்

  `` விதிமுறைகளை மீறிக் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்களை நடத்திவருகிறது. ரஷ்யத் தாக்குதல்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நேட்டோ படைகளையும் காணவில்லை. இரண்டாவது நாளாகத் தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து உலக நாடுக உதவி செய்யவேண்டும்" என  உக்ரைன் ஜனாதிபதி வேதனையோடு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ரஷ்யா போர்த்தொடுத்தால் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தங்களது நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற தைரியத்தில் தன்னைவிட ராணுவபலத்தில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவுக்கு எதிராகச் சவால்விட்டு வந்தார் உக்ரைன்  ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. ஆனால், ``உக்ரைன் எங்களது நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்ல; அதனால் எங்கள் படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப முடியாது. எங்களது உறுப்பு நாடுகளான போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள்மீது ரஷ்யா கைவைத்தால், திருப்பி அடிக்கத் தயங்கமாட்டோம்'' என கைவிரித்தது நேட்டோ.

அமெரிக்காவோ, `எவ்வளவுவேண்டுமானாலும் ஆயுதங்களை அனுப்புகிறோம், ஆனால் தங்கள் நாட்டு ராணுவத்தினரை போருக்கு அனுப்பிவைக்க வாய்ப்பில்லை' என திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன்பிறகு, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற அதிநவீன ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியது உக்ரைன். மேலும், உக்ரைன்மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாமீது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது.  

எத்தனைத் தடைகளை விதித்தாலும், ``மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை எங்களின் போர் தொடரும்'' என ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடியாகத் தெரிவித்தது. ரஷ்யாவின் விடாப்பிடியான தாக்குதலால், உக்ரைனின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அத்தனைக் கட்டடங்களும் பாரபட்சமின்றி தகர்க்கப்பட்டன. ஏராளமான உயிரிழப்புக்கு மத்தியில், கோடிக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டைநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர்.

குறிப்பாக, இந்தப் போர் தொடங்கிய சில மாதங்களிலேயே சுமார் 1 கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வாக இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பெற்றது. ட்டம்

போரால் உக்ரேனிய மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் பிறநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்ற வர்கள்  பாதிக்கப்பட்டனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்ய ராணுவம், உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்ற ஒரு சில மாதங்களே போதும் என சொல்லப்பட்டுவந்த நிலையில், தனது தலைநகர் கீவை நெருங்க முடியாதபடி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்தது உக்ரைன் ராணுவம். போர்த்தொடுத்தது ரஷ்யாதான் என்றாலும்கூட, ரஷ்ய தரப்பிலும் மிகக்கடுமையான பாதிப்புகளை உக்ரைன் ராணுவம் ஏற்படுத்தியது. அதாவது, போர் நடைபெற்ற மூன்று மாதத்தில் சுமார் 25,000 ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது.

``ரஷ்யாவுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். போரில் இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 1,110 பீரங்கிகள், 199 விமானங்கள், 155 ஹெலிகாப்டர்கள், 1,900 வாகனங்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்கள், எரிபொருள் டேங்குகள் என பெரிய அளவிலான ரஷ்யாவின் போர்த் தளவாடங்களை உருத்தெரியாமல் அழித்திருக்கிறோம்" என அப்போதே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் துணிச்சலாகக் கூறியது. தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவுக்குச் சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியபோதே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிமாக உயர்ந்தது. அதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. காரணம், உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும்தான் முக்கியப் பங்காற்றி வந்தன. இந்தநிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் சேர்ந்து சுமார் 5,831 தடைகளை விதித்ததால் ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. அதேபோல, போர்தாக்கத்தால் உக்ரைனிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த இரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் உலக நாடுகள் அத்தியாவசியப் பொருள்களுக்காக தட்டுப்பட்டை எதிர்கொண்டன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகள் பெருமளவில் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவையே சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

இதுகுறித்துப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``'உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளும் கோதுமை, பார்லியை 30 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோதுமை மற்றும் சோளத்தின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 60 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. எனவே, ரஷ்யா-உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் 170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்!" என கவலை தெரிவித்தார்.

No comments: