Saturday, February 11, 2023

பாஜகவின் பஞ்சாயத்தால் துளிர்த்தது இரட்டை இலை


 தமிழகத்தில் தாமரை மலர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. இந்த உண்மை தெரியாமல்  தமிழகத்தின் எதிர்க்கட்சி பாரதீய ஜனதா என அண்ணாமலை  உரத்துச் சொன்னார். தமிழகத்தின் எதிர்க்கட்சி பாரதீய ஜனதா என அறைகூவல் விடுத்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படதும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழகத்தின்  பெரிய கட்சி என பல்டியடித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அங்கு  வெற்றி பெற்ற காங்கிரஸ்  போட்டியிடும் என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். .வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ்  வேட்பாளராக  நிறுத்தியது.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில்  திராவிட முன்னேற்றக் கழகம்   முதலில் களம்  இறங்கியது.கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஈரோட்டில் கால் பதித்தன.

.பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய  இருவரும் ஈரோட்டில் வேட்பாளரை நிறுத்தி பலப் பரீட்சை செய்ய  முடிவு செய்தனர். பன்னீர்,எடப்பாடி,சசிகலா, தினகரன் ஆகிய நால்வரும் ஒன்றாக  இணைய வேண்டும் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

ஒற்றைத் தலமை என்பதில் எடப்பாடி குறியாக  இருக்கிறார். எக்காரணம்  கொண்டும் பன்னீரைச் சேர்க்க அவர் விரும்பவில்லை. பன்னீரால் தனக்கு ஆபத்து என  எடப்பாடி அஞ்சுகிறார்.  எடப்பாடி  தூக்கி எறிந்தாலும் இரட்டை இலை முடங்கக் கூடாது என்பதில்  . பன்னீர்ச்செல்வம்  உறுதியாக  இருக்கிறார். பன்னீர், எடப்பாடி ஆகிய  இருஅவ்ரும் கையெழுத்திட்டால்  இரட்டை  இலை கிடைத்துவிடும். கையெழுத்திட பன்னீர் தயாராக  இருக்கிறார். பன்னீரில் தயவில் இரட்டை இலையை பெறுவதற்கு எடப்பாடி விரும்பவில்லை.

  எடப்பாடி பழனிசாமி தரப்பு தென்னரசுவை அறிவித்தது.  .பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான  செந்தில் முருகன் மனுத் தாகல் செய்தார்.  இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், பன்னீர்ச்செல்வம் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தத் தீர்ப்பு தற்காலிகமானது. வழக்கு இனமும்  நிலுவையில் உள்ளது . பன்னீர், எடப்பாடி ஆகிய  இருவரையும் தவிர்த்து தமிழ்மகன்  உசைன் கையெழுத்திடலாம் என  நீதிமன்றம் அறிவுறுத்தியது. தமிழ் மகன்  உசைனுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. இரட்டை  இலை  கிடைக்க வேண்டும் என்பதற்காக  பன்னீர்தரப்பு அமைதியாக  இருக்கிறது.

பன்னீரை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக எடப்பாடி  சொல்கிறார். ஆனால், பன்னீரையும்  இணைக்கும்படி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடியின்  வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக அண்ணாமலை அறிவித்த அண்ணாமலை எடப்பாடியின்  வேட்பாளரை ஆதரிகுமாறு பன்னீரிடம்  வேண்டுகோள் விடுத்தார்.

   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரட்டை உலைச் சின்னம்  கிடைத்ததால் பன்னீரின் வேட்பாளர்  வாபஸ்  பெற்றார்.  குக்கர் சின்னம்  கிடைக்காததால் தனது கட்சியின்  வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக தினகரன் அறிவித்தார். எல்லா ஏற்பாடுகளும்  பாரதீய ஜனதாவின் விருபத்துக்கமையவே  நடை பெறுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றானால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியும் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் நம்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி கழகம்  ஒன்றாகி  விட்டது. ஆனாலும், பன்னீரின் உதவியைப் பெற எடப்பாடி  விரும்பவில்லை. பெயரளவில் கழகம்  ஒன்றிணைந்துள்ளது.பிரசாரம்  செய்யத் தயாராக   இருப்பதாக பன்னீர் தரப்பு அறிவித்துள்ளது.  எடப்பாடியும்  ஏனையவர்களும் அதனைப் புறக்கணித்துள்ளனர்.

பன்னீரின் உதவி இல்லாமல் இடைத் தேர்தலில் வெற்ரி பெற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார்  இரட்டை  இலையின் வெற்றியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பன்னீர்  விரும்புகிறார். இது வரை காலமும் சின்னத்தில்தான்  இரட்டை இருந்தது.பின்னர் தலைமை இரட்டையாகியது. ஒற்றைத் தலைமையை  நோக்கி எடப்பாடி உறுதியாகச் செல்கிறார்.

நிர்வாகிகளில் அதிகமானோர்  எடப்பாடியின் பின்னால் நிற்கிறார்கள். தலைமைப்  போட்டியால் பல  நிர்வாகிகளும் தொண்டர்களும் பரம எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டனர்.  பாட்டாளி மக்கள் கட்சியும், விஜயகாந்தின் கட்சியும்  அண்ண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்  இருந்து வெளியேறிவிட்டன. இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், தேசிய முற்போக்கு திராவிட கட்சி [விஜயகாந்தின் கட்சி]ஆகியன இடைத் தேர்தலில் போட்டியிடும் பலமான கட்சிகள். ஆனாலும், காங்கிரஸுக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தும் இடையில்தான்  போட்டி பலமாக  இருக்கும்.

ஈரோடு கிழக்கில்   கையும், இரட்டை  இலையும் தான் களத்தில் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  இடையிலான  கெளரவத் தேர்தலாக   ஈரோடு களம்  இருக்கப்போகிறது.

ஸ்டாலினின் தலைமையிலான அரசாங்கத்துக்கு  முதலாவது  இடைத் தேர்தல். இரட்டைத் தலைமையில் இருந்து விடுபடத்துடிக்கும் எடப்பாடிக்கு ஈரோடு நெருப்பாறு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வி பன்னீரைப் பாதிக்கப்போவதில்லை. தமிழக பாரதீய ஜனதாவின் லைவரான  அண்ணாமலைக்கு பரீட்சைக் களம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில்  இரட்டை இலையில் போட்டியிட்ட யுவராஜ் வாங்கிய வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாய நிலை எடப்பாடிக்கு எற்பட்டுள்ளது. கமலின் ஆதரவு  திராவிடமுன்னேற்றக்  கூட்டணிக்கு பக்க பலமாக  உள்ளது.

No comments: