Sunday, February 12, 2023

அமெரிக்காவை அச்சுறுத்திய சீன உளவு பலூன்


 அமெரிக்க, சீன  உரசல்கள்  உளகளாவிய ரீதியில் கவனம்  பெற்றுள்ள நிலையில் சீன  உளவு பலூன்  புதியதொரு மோதலின் கதவைத் திறந்துள்ளது. அமெரிக்க வான்பரபில் சுற்றித் திரிந்த  சீன  உளவு பலூனை கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. வழமை போன்று சீனா இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

  அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வானில் பலூன் ஒன்று கடந்த 5 நாட்களாக சுற்றி வந்ததை அம்ரிக்க அதிகாரிகள் கண்டுள்ளனர். அது சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஐடாஹோ பகுதியில் இருந்து கரோலினாஸ் வரை தென்கிழக்கு திசையில் கடந்த 5 நாட்களாக பலூன் சுற்றி வந்துள்ளது. சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பலூன் அணு ஆயுத தளத்தின் மேலே பறந்ததால் சுட்டு வீழ்த்த முடியவில்லை.

உளவு பலூனன் சுட்டு வீழ்த்தப்பட்டால்  மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்று கருதி அந்த முயற்சி கைவிடப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பலூனை சுட்டு வீழ்த்த மாற்று வழிகளை கண்டு வந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், பலூன் சனிக்கிழமை மதியம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் தக்க நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. லாங்லி விமானப்படை தளத்தில் இருந்து  புறப்பட்ட போர் விமானத்தில் இருந்து ஒரே ஒரு ஏவுகணை மூலம் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பலூனின் உதிரி பாகங்களை கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உதிரி பாகங்களை கொண்டு ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா பலூனை வீழ்த்தியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பலூன் சிவிலியன் விமானம். தவறுதலாக அமெரிக்கா எல்லைக்குள் வந்துள்ளது. இது முற்றிலும் தற்செயலானது என சீனா தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சீனா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்குப் பிறகு சீன பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் காலகட்டத்தின் போது இது போன்ற பல பலூன்கள் பறந்த நிலையில், சீனாவின் பலூன் உளவு சேகரிப்பு கண்ணோட்டத்தில் பறந்தது அமெரிக்காவுக்கு பெரும் சீண்டலாக அமைந்தது.

சாதாரண வணிக வகை விமானங்கள் 65,000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். ஆனால், சீனாவின் இந்த பலூன் 80,000 அடி முதல் 1,20,000 அடி வரை பறந்துள்ளது. இதை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம். இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொன்டானாவில் உள்ள விமான படை தளவாடத்தின் மீது பறந்து சென்றதாகவும், அங்கு அமெரிக்க விமான தளங்கள் மற்றும் நாடு விட்டு நாடு பாயும்  அணுசக்தி ஏவுகணைகள் 150க்கும் அதிகமாக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

  வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் திகதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது. இந்த பலூன் கடந்த 3-ம் திகதி அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே பறந்தது. அப்பகுதியில் உள்ள மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானப்படைத் தளத்தை உளவு பார்க்கவே அப்பகுதியில் சீன பலூன் பறக்கவிடப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. இதை மறுத்த சீன வெளியுறவு அமைச்சகம், "சீன பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. வழிதவறி அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விட்டது" என்று விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை அமெரிக்க அரசு ஏற்கவில்லை.

மூன்று பேருந்துகளின் அளவு கொண்ட சீன பலூன் ஹீலியம் வாயு, சூரிய எரிசக்தியில் பறக்கக் கூடியது. சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை சேகரித்துள்ளோம். இப்போது வேறு எந்த தகவலும் வெளியிட முடியாது. இவ்வாறு அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

தைவானை சீனா ஆக்கிரமிக்க அமெரிக்கா தடையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருப்பது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

 உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் உக்ரைனுக்கு ஏராளமான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் செயல்படுகின்றன. இந்த சூழலில் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருப்பது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும் 3-ம் உலகப்போர் குறித்த ஆபத்தும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: