Tuesday, March 1, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 7


 தமிழ்த் திரை உலகின் அசைக்க முடியாத வில்லன் எம்.என்.நம்பியார் . எம்.ஆர்.ராதா,அசோகன், பி.எஸ்.வீரப்பா போன்றவர்களுக்கு மத்தியில்   தனித்துவமாக மிளிர்ந்தவர். எ.ஜி.ஆர்ன் படத்தில் கதாநாயகி மாறலாம். ஆனால், நம்பியார்  மாறுவதில்லை. உருட்டும் விழி, மிரட்டுப் பார்வை , கையைப் பிசைந்து கொண்டு அதட்டும் பாணி. இவை எல்லாம் நம்பியாரின் தனித்துவ அடையாளங்கள். மிமிக்கிரி  கலைஞர்களை  வாழ வைப்பவர்களில்  நம்பியாரும் ஒருவர்.

கேரளாவில் நம்பியார் வசித்தபோது தகப்பன் இறந்து விட்டார். எட்டு வயதான நம்பியார்  ஊட்டியில் உள்ள சகோதரியிடம் சென்றார். சகோதரியின் கணவரின் டீக்கடை வைத்திருந்தார். அங்குள்ள பாடசாலையில்  ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். வியாபாரம் படுத்து விடவே அங்கிருந்து கிளம்பி நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.   தங்குவதற்கு இடமும் சாப்பிடுவதற்கு சாப்பாடும் மட்டும் நம்பியாரின் தேவையாக இருந்தது. எதிர் காலத்தைப் பற்றி அவர் நினைக்கவில்லை. நாடகத்தைப்  பற்றியோ, நடிப்பைப் பற்றியோ எதுவும் நம்பியாருக்குத் தெரியாது. சமையல்காரருக்கு உதவியாளராக நம்பியார்  சேர்ந்தார். சமையல் செய்பவர்கள் சாப்பிடலாம், அங்கு தங்கலாம். காசு கொடுக்க மாட்டர்கள். எதிர் காலத்தில் வில்லனாக ரசிகர்களை அச்சுறுத்துவேன் என்ற எதிர் பார்ப்பு எதுவும் இல்லாமல் நம்பியார் வேலை செய்தார்.

சின்ன வேடங்களில் நடிப்பவர்கள் பெரிய வேடங்களில் நடிக்க ஆசைப்படுவார்கள். சமையல் வேலைக்கு உதவி செய்த நம்பியாருக்கு நடிப்பில் ஆர்வம் உண்டாகவில்லை. கதாநாயகனுக்கு இணையான வில்லனிடம் வேலை வாங்குகிறோம் எனத் தெரியாமல் அங்குள்ளவர்கள் நம்பியாரிடம்  வேலை வாங்கினார்கள்.

 நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக கம்பனியில் பிசியாக நடித்த பலர் காணாமல் போய்விட்டார்கள். நம்பியார் மட்டும் இன்றைக்கும் பேசப்படுகிறார். தங்கும் இடமும் சாப்பாடும் மட்டும் இருந்தால் போதுமா   கையில் நாலு காசு பார்க்க வேண்டாமா என்ற சிந்தனை நம்பியாருக்கு உதித்த போது நடிக்கத் தொடங்கினார். நடிப்பவர்களுக்குச் சம்பளம் கொடுப்பார்கள். தேவைகளைப் பூர்த்தி செய்ய காசு வேண்டும். அதனால் நம்பியார் நடிக்கத் தொடங்கினார்.

பக்த ராமதாஸ் என்ற நாடகத்தை பல கொம்பனிகள் மேடையேற்றின. ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகத்துக்கு ஈடு  இணையாக எதுவும் இருக்கவில்லை. பக்த ராமதாஸ்  நாடகத்தில்  நவாப் வேடத்தில் நடித்ததனால் " நவாப்" என்ற பட்டம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. நவாப் ராஜமணிக்கம் என்ற பெயர் பிரபலமானது.

சரியான நம்பியார் நீ' என்று வில்லத்தனத்திற்கு உவமை சொல்லும் அளவிற்கு புகழ்பெற்ற வில்லன் நம்பியார். காமெடி என்றால் கவுண்டமணி-செந்தில் என்று நாம் ஒரு கூட்டணியை சொல்லிவிடுவோம். அதுபோலவான கூட்டணிதான், எம்ஜிஆர்-நம்பியார். ஹீரோ - வில்லன் கூட்டணி. எம்ஜிஆர் ஹீரோவாக வெற்றிபெற்றார் என்றால் அவரைத் தூக்கிவிட்ட ஒரு வில்லனாகவே நம்பியார் இருந்தார். 'எப்போதுமே வில்லன் வேடம்தான் கொடுக்கிறார்கள்' என்று நொந்துகொண்ட தன் மனைவியிடம் ’'வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பு இல்லை’’ என்று அசத்தலாக சொல்லிய ரீல் வில்லன், ரியல் ஹீரோ நம்பியார்.

15வயது முதல் பெண் வேடம், நகைச்சுவை வேடம் என நாடகங்களில் தன்னுடைய திறமையை காட்டிய நம்பியார் 23வது வயதில் வில்லனாக நாடகத்தில் நடித்தார். அதுவே பின் நாட்களில் அவரது ஆஸ்தான வேடமாகவும் அமைந்தது. வித்யாபதி, ராஜகுமாரி என தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்தாலும் வேலைக்காரி, திகம்பர சாமியார் படங்களுக்கு பிறகே நம்பியார் அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாரானார். குறிப்பாக சர்வாதிகாரி படத்தில் சர்வாதிகாரியாவே வாழ்ந்தார் நம்பியார். அதன் பின்னர் அவர் கொடூர வில்லனாக மக்கள் மனதில் பதிந்தார்.

 

மிகப் பெரிய வெற்றி பெற்ற பக்த ராமதாஸ்  நாடகத்தை  படமாகத் தயாரிக்க  ஒரு நிறுவனம் முன் வந்தது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் படத்திலும் நடிப்பார்கள்  என  நவாப் ராஜமானிக்கம் பிள்ளை நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையால் நம்பியார்  சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் அமைந்தது. அந்தப் படக்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு   40 ரூபா சம்பளம் கொடுக்கப்படத். பெண்கள்  இலாத படத்தில் நம்பியார் சிறு வேடத்தில் நடித்தார். முதல் படத்துடன் சினிமாவை மறந்துவிட்டு  மீண்டும் நாடகத்தில் ஆர்வம் காட்டினார்.

நவாப் ராஜமாணிக்கத்தின்  நாடகக் குழுவில் இருந்து வெளியேறிய கிருஷ்ணசாமி,  சக்தி நாடகக் குழுவை உருவாக்கினார். சக்தி கிருஷ்ணசாமியின் அழைப்பின் பேரில் நம்பியாரும் சக்தி நாடகக் குழுவில் சேர்ந்தார்

1944 ஆம் ஆண்டு நடந்த அந்த மாற்றத்தின் பின்னர் நம்பியரின் வாழ்வில் ஒளி வீசியது. சக்தி கிருஷ்ணசாமி  எழுதிய " கவியின் கனவு" எனும் நாடகத்தில் ரஜகுருவாக நம்பியார் நடித்தார். அதன் பின்னர் குரு அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது.

கவியின் கனவு நாடகத்தைப் பார்த்த ஜூபிடர் பிக்ஸர்ஸ்  அதிபர் சோமுவுக்கு கவியாக நடித்த எஸ்.வி.சுப்பையா, ராஜகுருவாக நடித்த நம்பியார் ஆகிய இருவரின் நடிப்பையும் வெகுவாக ரசித்தார். நல்ல நடிகர்களைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களை  ஜூபிடர் பிக்ஸர்ஸின் நிரந்தர  ஒப்பந்தம் செய்தார்.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான வித்யாவதி என்ற படத்தில் பாக்கியம் என்ற நடிகையுடன் ஜோடிசேர்ந்து  நகைச்சுவை பாத்திரத்தில் நம்பியார் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம், காளி என்.ரத்தினம்,சி.டி ராஜகாந்தம்

 

 ஆகியோர் நகைச்சுவை ஜோடிகளாக வலம் வந்தனர். அவர்களைப்போன்று நம்பியாரும், பாக்கியமும் புகழடைவார்கள்  என ஜூபிடர் பிக்ஸர்ஸ் சோமு எதிர் பார்த்தார். சுமார் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் திரையில் தோன்ரிய நம்பியாரை யாரும் கண்டுகொள்ளவில்லை.  அதனால், கவலைப் படாத நம்பியார் மீண்டும் நாடக உலகின் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

1947 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு விஷப் பரீட்சை நம்பியாரைத் தேடிச் சென்றது. "கஞ்சன்" என்ற படத்தில் நம்பியார் கதாநாயகனாக நடித்தார். நம்பியாரின் தகப்பனாக எஸ்.வி.சுப்பையா நடித்தார். அந்தப் படமும் முடங்கியது. சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை என்பதையிட்டு நம்பியார் மனம் வருந்தவில்லை. நம்பியார் எதிர்பாராத திருப்பம் " மந்திரி குமாரி"  மூலம்  நடந்தது. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் மந்திரி குமாரி எனும் படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்  தகுதியான ஒருவரைத் தேடினார். நம்பியாரைப் பற்றிக்  கேள்விப்பட்டு அவர் அழைக்கப்பட்டார்.

டி.ஆர். சுந்தரத்துக்கு நம்பியாரைப் பிடித்துவிட்டது. மிகப்பெரிய தொகை கொடுத்து நம்பியாரை  ஒபந்தம்  செய்தார் டி.ஆர்.சுந்தரம்.  தனது சினிமா வாழ்க்கை இவ்வளவுதான் எனக் கருதிய நம்பியாருக்கு  மந்திரி குமாரி  புது வாழ்வு கொடுத்தது. எம்.ஜி.ஆருக்கு எதிரான இந்த வில்லன் யார் என அனைவரும் உற்று நோக்கினர். கலைஞர் கருணாநிதியின் வசனம் அன்றைய அரசியலைப் பேசியது. ராஜகுருவான வில்லன் நம்பியார் அனைவரையும் மிரட்டினார். அடுத்து வெளியாகிய "சர்வாதிகாரி" யிலும் கதாநாயகன் - வில்லன் ஜோடி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

நம்பியாரின் மீது நம்பிக்கை வைத்த ஆர்.டி.சுந்தரம் அவரை கதாநாயகனாகப் பார்க்க விரும்பினார். "கல்யாணி" படத்தில் நம்பியாரை கதாநாயகனாக்கினார் சுந்தரம். அந்தப் படமும் தோல்வியடைந்ததால்  மீண்டும் மிரட்டும் வில்லனாகினார். நம்பியார். 

நம்பியார் என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் எம்.என். என்ற இரு எழுத்துக்களில் எம் என்பது அவருடைய தந்தையார் கெளு நம்பியாரின் இல்லப்பெயரான ‘மஞ்சேரியைக் குறிக்கும். என். என்பது பெற்றோர் அவருக்கு இட்ட நாராயணன் என்ற பெயரைக் குறிக்கும்.அறிஞர் அண்ணா எழுதிய ‘வேலைக்காரியும், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திகம்பர சாமியாரும் நம்பியாரின் திரை வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிவிட்டன.சர்வாதிகாரி' படத்தில் மகாவர்மன் என்ற சர்வாதிகாரியாக நடித்த நம்பியாரை அடக்கும் நாயகன் பிரதாபனாக எம்.ஜி.ஆர் நடித்ததும் பெரும் திருப்பமாக அமைந்தது. ‘சர்வாதிகாரி படத்துக்குப் பின்னரே எம்.ஜி.ஆர் கதாநாயகன் என்றால் நம்பியார்தான் வில்லன் என்ற நிலை உருவானது.

  திருமணத்தின்போது நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.கதாநாயகி மாறினாலும் வில்லனில் மாற்றம் இல்லை . எத்தனை வில்லன்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு வில்லன் நம்பியார்தான் என்ற நிலையை, ‘மந்திரிகுமாரி, ‘ஆயிரத்தில் ஒருவன், ‘அரசகட்டளை, ‘தாய் சொல்லைத் தட்டாதே, ‘எங்க வீட்டுப் பிள்ளை தொடங்கிப் பல வெற்றிப் படங்கள் உருவாக்கின. தோல்விப் படமே என்றாலும் போட்ட முதலுக்கு நஷ்டமில்லாத வசூல் உறுதி என்ற நிலையை உருவாக்கியது இந்த ஹீரோ – வில்லன் கூட்டணி. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன் என்றபோதும் சிவாஜி, ஜெமினி கணேசனுக்கும் வில்லனாக நடிக்கத் தயங்கவில்லை நம்பியார்.

கொடூர வில்லனாகப் புகழ்பெற்றுவிட்ட நிலையில் ‘பாசமலர் ‘ரகசிய போலீஸ் 115’, ‘கண்ணே பாப்பா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து, நம்பியாரா இவர் என வியக்க வைத்திருக்கிறார். ‘மக்களைப் பெற்ற மகராசியில் எம்.என்.ராஜத்துடன் இணைந்து ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ டூயட் பாடினார். அதில் நம்பியாரின் நடிப்பைப் பார்த்து, “நீ ஏன் கதாநாயகனாக நடிக்காமல் போனாய்?” என உடன் நடித்த சிவாஜியைக் கேட்க வைத்தவர். கதாபாத்திரத்துக்காகச் சிறப்பு ஒப்பனை போட்டுக்கொண்ட முதல் வில்லன் நடிகர் நம்பியார்தான். ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்காக 109 வயதுக் கிழவராக 3 மணிநேரம் சிறப்பு ஒப்பனை போட்டுக்கொண்டார்.

 “கிராமப்புறங்களில் என்னைக் கண்டதும் பெண்கள் திட்டுவதும், பயந்து ஓடுவதும்தான் எனது நடிப்புக்குக் கிடைத்த உண்மையான விருது என்று கூறியிருக்கிறார் நம்பியார்.. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஆறு முதலமைச்சர்களுடன் கலையுலகில் இணைந்து பணிபுரிந்தவர் இவர் மட்டும்தான். நாயகன், நாயகனின் நண்பன், காமெடியன், வில்லன், குணசித்திரம் என்று பலவிதக் கதாபாத்திரங்களில் நடித்த நம்பியார் செந்தமிழ் வசனம் பேசி நடிக்கும் வேடங்களைப் பெரிதும் விரும்பினார்.

 'அம்பிகாபதி படத்தில் ஒட்டக் கூத்தராகவும், ‘ஹரிச்சந்திரா படத்தில் விஸ்வா மித்திரராகவும் நடித்ததைத் தனக்குப் பிடித்த கதாபாத்தி ரங்களின் பட்டியலில் வைத்திருக்கிறார்.கடைசி யாகக் கடந்த 2006-ம் ஆண்டு விஜயகாந்துடன் நடித்த ‘சுதேசி என்ற படத்துடன் சுமார் 750 தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

திரையில் வில்லனான நம்பியார் நிஜத்தில் கதாநாயகன்.ஐயப்ப பக்தரான அவரால் திரை உலகில் உள்ள பல‌ர் ஐயப்ப பக்தராகினர். 

No comments: