Saturday, March 26, 2022

இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்த வைகோ

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாள், பிரசாரப் பீரங்கி எனப் புகழப்பட்ட வைகோவின் அரசியல் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. மூப்பு, உடல் நிலை காரணமாக முன்புபோல் தீவிரமாகச் செயற்பட முடியாத நிலை உள்ளது. வாரிசு அரசியலை மூர்க்கமாக எதிர்த்த வைகோ தனது மகன் துரை வையாபுரி க்கு கட்சியில் உயர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார். கழகத்தின் மூத்த நிர்வாகிகளின் விருப்பம் இல்லாமல் நடை  பெற்ற வாரிசு அரசியலால் கழகத்தினுள் கலகக்குரல் எழுந்துள்ளது

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு எதிராகப் பேசி விமர்சனம் செய்திருக்கிறார் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறியதற்குப் பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாரிசு அரசியலே முக்கியமான காரணமாகும். 1993‍ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து  வைகோ வெளியானதற்கு, கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வாரிசு அரசியல் செய்கிறார் என்ற  குற்றச்சாட்டு முதன்மையானது. வைகோவை வெளியேற்றுவதற்கு கருணாநிதி செய்த அரசியல் இன்னொருவகையானது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக  வைகோ வந்துவிடுவார் என்ற பயத்தில் கருணாநிதி சூழ்ச்சி செய்ததாக வைகோவின் ஆதரவாளர்கள்  குற்றம் சாட்டினர்.வைகோவுக்காக அன்று ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து உயிரைக் கொடுத்தனர். அதற்காக நீதி கேட்டு வைகோ நெடும் பயணம் சென்றார். இன்று அவை எல்லாம் மறக்கடிக்கப்பட்டு தனது வாரிசுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார் வைகோ.

துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர் உள்ளிட்டநான்கு பதவிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஏற்கனவே தலைமை கழகச் செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதான்  மூத்த நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு அரசியலை எதிர்த்து  போராடிய வைகோவின் செயலை மூத்த நிர்வாகிகள் அங்கீகரிக்கவில்லை. கட்சியின் தலைவர் வைகோதான். ஆனால், அதற்காக  இரத்தம் சிந்தி, சிறைக்குச் சென்று, போராட்டம் நடத்தி, சொத்தை இழந்தவர்கள் பலர்  இருக்கிரார்கள். அவர்களின்  முதுகில் ஏறி மகனுக்கு பதவி கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. வைகோவின் மகன் அரசியலுக்கு வருகிறார் என சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. அப்போது வைகோ கடுமையாக மறுத்து அறிக்கை விடுத்தார்.

    சிவகங்கையில் அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட்டம் நடத்தினர்.   சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முக சுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணி செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்து கொண்டனர். போர்க்கொடித் தூக்கியிருக்கும் செவந்தியப்பன் வைகோவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். பொடா சட்டத்தின் கீழ் கைதாகி, வைகோவுடன் பல மாதங்கள் சிறையில் இருந்தவர். அப்படிப்பட்ட நபரே இன்று அதிருப்தியில் இருக்கிறார்.

கலிங்கப்பட்டியில் கடந்தாண்டு ஒக்டோபர் 20ஆம் திக‌தி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வைகோ அவரின் மகன் துரை வைகோவை   தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்தார். எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அவசரமாகக் கூட்டம் நடத்தி, துரை வைகோவை ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராகத் தேர்வு செய்ததால்    மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள்  பலர் எதிர்ப்புத் தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

சென்னையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.  அதிருப்தி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வைகோ மகன் துரை வையாபுரி கட்சி தலைமை கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. கலக குரல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் வைகோ என்ன முடிவை எடுக்க போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிருப்தியாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக்த்துக்குத் தூது  போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சி எனப்தாலும் வைகோமீது ஸ்டாலின் மதிப்பு வைத்திருப்பதாலும் அவர்களுக்கு கதவு  திறக்கப்படவில்லை.கட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்ட மதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செந்தியப்பன்,உயர்நிலை குழு உறுப்பினர்கள் சேர்ந்தது  மதிமுக கட்சியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்நிலையில்,  மாவட்டத்தில் உள்ள மதிமுக கட்சி நிர்வாகிகள், கட்சி அலுவலகத்திற்கு உள்ளே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூடாது என போரட்டம் செய்தனர்.

கட்சி அலுவலகம் எங்களுக்கு சொந்தம் என்றும் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் பல மாதங்களாக கட்சியில் செயல்படாமல் உள்ளார் என்றும் தலைவர் வைகோ மீது தவறான குற்றச்சாட்டு கூறுகிறார் என நிர்வாகிகள் சரமாரியாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர்  செவந்தியப்பன்,  மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை.  வைகோ மகன் துரை வையாபுரிக்கு   எல்லாவித அதிகாரத்தையும் கொடுப்பதற்கு வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறார். மதிமுகவை பொறுத்த வரை  உயர்நிலை குழுவை  கூட்டி  உயர்நிலைக் கூட்டத்தில் எடுத்த  முடிவுகளை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த ஓராண்டு காலமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டவில்லை. உயர்நிலைக் குழுக்   கூட்டத்தை தவிர்த்து  வருகிறார்.  கட்சிக்கு 40 ஆண்டுகள் உழைத்த திமுக தலைவர் ஸ்டாலினையே குடும்ப அரசியல் என்று சொன்னவர்தான் வைகோ. ஆனால் தற்போது தனது மகனை  கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார். ஆனால் குடும்ப அரசியல் இல்லை என்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் உயர் நிலைய குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

வைகோவின் அரசியல் ஆட்டத்தால்  கருணாநிதி முதலமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது. விஜயகாந்தை முன்னிறுத்தி வைகோ தேர்தல் வியூகம் அமைத்ததால் வாக்குகள் சிதறியது. விஜயகாந்தின் ஆதரவு இல்லாததால்  ருணாநிதி தோல்வியடைந்தார்.  அதற்குப் பிராயச்சித்தமாக ஸ்டாலினை முதல்வராக்க பிரசாரம்செய்தார்.

அரை நூற்றாண்டு அனுபவம் உள்ள வைகோவால் கட்சியைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாத துரையால் கட்சியைத் தூக்கிநிறுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில்  கிடைக்கவில்லை.

வைகோவின் கட்சி பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது. சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது.வைகோவின் கட்சி உருப்பினர்கள்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். வைகோவுக்கு  நாடளுமன்றபதவி கிடைத்துள்ளது. இன்றைய பரபரபான அரசியலில் வைகோவின் மகனால் எதுவும் செய்ய முடியாது. மூப்பனாரின் மகனைப் போலவே வைகோவின் மகனும் அரசியல் செய்யப்போகிறார்.

No comments: