மெகா ஏலத்தில் பலத்த
போட்டிகளுக்கு மத்தியில் அதிக தொகை கொடுத்து வீரர்கள் வாங்கப்பட்டார்கள். ஒரு
அணியின் நட்சத்திர வீரரை இன்னொரு அணி அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளது. உடல்
தகுதி இல்லாமையால் சில வீரர்கள் களம் இறங்க மாட்டார்கள். புதிய வீரரால் பழைய
வீரருக்கு சிக்கல். இவற்ரில் இருந்து அந்த அணிகள் எப்படி வெளியேறப் போகின்றன.
அவற்றுக்கான தீர்வுகள் என்ன.
1. சென்னை சூப்பர் கிங்ஸ் – தீபக் சஹர்:
2018 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ராஜஸ்தானைச்
சேர்ந்த தீபக் சஹர் கடந்த வருடங்களில் அபாரமாக செயல்பட்டு அந்த அணியின் வெற்றிகளில்
முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக ஆரம்ப கட்டங்களில் அபாரமாக பந்துவீசி பவர்பிளே
ஸ்பெஷலிஸ்ட் பவுலராக உருவெடுத்த அவர் அதன் காரணமாக இந்திய அணியிலும் விளையாடும்
வாய்ப்பை பெற்று அசத்தினார். அதேபோல் துடுப்பாட்டத்தில் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் அதிரடியாக விளையாடி கணிசமான
ஓட்டங்களை சேர்ப்பவராக உள்ளார்.
இதனால் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை
அணி நிர்வாகம் அவரை மீண்டும் போட்டி போட்டு வாங்கியது. அந்த நேரத்தில் மேற்கு
இந்திய அணிக்கு எதிராக நடந்த தொடரில் துரதிஷ்டவசமாக காயமடைந்த
அவர் தற்போது அதிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக குறைந்தது
பாதி ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு
மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் அந்த அணிக்காக விளையாடிய ஷார்துல் தாகூர் இப்போது சென்னை அணியில் இல்லை என்பதால் புதிதாக வாங்கப்பட்ட கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே ஆகியோரை களமிறக்க வேண்டிய கட்டாயத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு வீரர்களான அவர்களை சேர்த்தால் துடுப்பாட்டத்தில் எந்த வெளிநாட்டு வீரர்களையும் சேர்க்க முடியாது. எனவே தீபக் சஹருக்கு பதில் சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்ரேக்கருக்கு வாய்ப்பு கொடுப்பதே இதற்கு சரியான தீர்வாக அமையும்.
2. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – விராட் கோலி:
பெங்களூரு அணியில் கடந்த வருடம் கீழ் வரிசையில் பினிஷராக
செயல்பட்ட ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் இப்போது ஓய்வு பெற்றுள்ளார். இம்முறை கப்டனாக
அறிவிக்கப்பட்டுள்ள பப் டு பிளேஸிஸ் ஓப்பனிங் வீரர் என்பதால் கடந்த வருடம் தொடக்க வீரராக விளையாடிய விராட்
கோலி இந்த வருடம் அதே இடத்தில் மீண்டும் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த வருடம் அந்த அணிக்கு ஓப்பனிங்கில் விராட் கோலி – டு பிளேஸிஸ் ஜோடி களமிறங்கினால் மிடில் ஆர்டர் பலவீனமாகிவிடும். அதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டரில் கிளென் மேக்ஸ்வெல் தவிர வேறு யாரும் தரமானவர்களாக இல்லை. எனவே தொடக்க வீரராக ஏதேனும் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பளித்து 3-வது இடத்தில் விராட் கோலி, 4-வது இடத்தில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவதே இதற்கான தீர்வாக இருக்கலாம்.
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – வெங்கடேஷ் ஐயர்:
கடந்த வருடம் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரின் முதல்
பகுதியில் திண்டாடிய கொல்கத்தா துபாயில் நடந்த 2-வது பகுதியில் அடுத்தடுத்து
வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம்
துபாயில் நடந்த 2-வது பகுதியின் போது அந்த அணிக்கு ஓபனிங் வீரராக களமிறங்கிய
வெங்கடேஷ் ஐயர் ஒரு ஆல்-ரவுண்டராக அசத்தினார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர்
சமீபத்தில் நடந்த மேற்கு இந்திய அணிக்கு
எதிரான தொடரில் மிடில் வரிசையில் களமிறங்கி ஒரு நல்ல பினிஷராக செயல்பட்டார். அதன் காரணமாக
இந்த வருடம் அவரை எந்த இடத்தில் விளையாட வைக்கலாம் என்ற குழப்பம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அந்த அணியில் தற்போது ஓப்பனிங் இடத்தில் விளையாட நித்தீஷ் ராணா, ஆரோன் பின்ச், சாம் பில்லிங்ஸ், அஜிங்கிய ரஹானே, சுனில் நரேன் என பல வீரர்கள் உள்ளனர். எனவே அவரை மிடில்
ஆர்டரில் அன்றே ரசல் உடன் விளையாட வைப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கலாம்.
4. மும்பை இந்தியன்ஸ் – வெளிநாட்டு வீரர்கள்:
ட்ரெண்ட் போல்ட், குயின்டன் டி காக் போன்ற தரமான
வெளிநாட்டு வீரர்களை இந்த வருடம் தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் டைமல் மில்ஸ், ரிலே மெரிடித்,
தேவால்டு ப்ரேவிஸ், டிம் டேவிட், டேனியல் சம்ஸ் என நிறைய வெளிநாட்டு வீரர்களை வாங்கியது.
அதிலும் இந்த வருடம் விளையாட மாட்டார் எனத் தெரிந்த பின்பும் கூட இங்கிலாந்தின்
வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை அந்த அணி நிர்வாகம் வாங்கியது அனைவரையும்
ஆச்சரியப்படுத்தியது.
மும்பை அணிக்காக விளையாடப் போகும் நான்கு வெளிநாட்டு வீரர்களில் பொல்லார்ட், டிம் டேவிட் ஆகியோர் முதல் இரண்டுவீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இருப்பினும் எஞ்சிய இரண்டு இடத்தில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
5. டெல்லி கேபிட்டல்ஸ் – அன்றிச் நோர்ட்ஜெ:
கடந்த வருடம் நடந்த
ரி20 உலக கோப்பையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரிச்
நோர்ட்ஜெ இன்னும் அதிலிருந்து முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக இவர் இந்த
வருடத்தின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற
சந்தேகம் நிலவி வருகிறது.
கடந்த வருடம் நடந்த
ஐபிஎல் தொடரில் 150 கீ.மீ க்கும் மேல் தொடர்ந்து பந்துவீசி எதிரணிகளை மிரட்டியதால்
மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடாவை கூட தக்க வைக்காத
டெல்லி அணி நிர்வாகம் இவரை தக்க வைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக காயமடைந்த அவருக்கு
பதில் யார் விளையாடப் போகிறார் என்ற கேள்வி தற்போது அந்த அணியில் நிலவுகிறது.
இப்போதைய நிலைமையில் அவரின் இடத்தை வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான், தென்
ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி ஆகியோரை வைத்து சமாளிக்கலாம். ஆனாலும் அவரளவுக்கு
துல்லியமாகவும் அதிரடி வேகமாகவும் இவர்கள் பந்துவீச மாட்டார்கள் என்பது அந்த
அணிக்கு பின்னடைவாகும்.
No comments:
Post a Comment