Thursday, March 31, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 தமிழ்த்திரை உலகில் பல வெற்றிப் படங்களைத்தந்தவர். பல நடிகர்களுக்கு இவரின் படங்கள் திருப்புமுனையாக  இருந்தன. புதிய நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், தொழில் நுட்பங்கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். இவர் தயாரித்த  கிந்திப் படங்களும் சக்கை போடு போட்டன. சண்டைப் படங்கள்,சமூகபபடங்கள் மட்டுமன்றி பக்திப் படங்களையும் தந்தவர்.  சிங்கம், புலி,யானை,, ஆடு,பசு,பாம்பு,கோழி,குரங்கு,குதிரை போன்றவற்றையும் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்க வைத்தவர்.  அவர்தான் சாண்டோ சின்னப்பா தேவர்.

தண்டாயுதபாணி பிலிம்ஸ் தேவரின்..... என்ற நீண்ட  கம்பனியின் சொந்தகாரன். நடிப்பதர்கு ஆசைப்பட்டு திரை உலகை நோக்கிச் சென்ற சின்னப்பா தேவர் தவிர்க்க முடியாத தயாரிப்பாளரானார்.  பூஜை போடுகின்ற அன்றே படம் வெளியாகும் நாளை அறிவிப்பார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.  பால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, மல்யுத்தத்தில் அதீத அக்கறை காட்டினார்.  திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

சின்னப்பாவின் ஊரில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.   அப்படத்தின் இயக்குநர் படத்தில் நடிக்கிறாயா என சின்னப்பாவிடம் கேட்டார். மகிழ்ச்சியுடன் சின்னப்பா ஒப்புக்க்கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னர்  சின்னப்பா நடித்த காட்சி படத்தில் வராது என்றும்  வேரு ஒரு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் தருவதாகவும் இயக்குநர் சொன்னார். கட்டுமஸ்தான் உடலமைப்புக்  கொண்ட சின்னப்பா டூப்பாக நடித்தார்.  ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும்  என சின்னப்பா முயற்சி செய்தார்.  சினிமா வாய்ப்பு தேடி அலைகையில் எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் உதவியால் ராஜகுமாரியில் ஒரு காட்சியில் நடித்து 45 ரூபா சம்பளமாகப் பெற்றார்.

எம்.ஜி.ஆருடன் இணைந்துக் படங்கள் தயாரித்தவர் என்ற பெருமை பெறு


ம் அளவுக்கு உயர்ந்தவர். தேவர் தயாரிப்பாளராகி தனது தம்பி எம்.ஏ. திருமுகத்தையே டைரக்டராக்கி எம்ஜிஆரை வைத்து முதன் முதலில் தயாரித்து 1956-ல் வெளியிட்ட ‘தாய்க்குப் பின் தாரம்’ சக்கை போடுபோட்டது. ஆனால் தெலுங்கில் எம்ஜிஆரை கேட்காமல் வெளியிட்டதில் தகராறு முளைத்தது.

உடனே வாள்வீச்சில் எம்ஜிஆருக்கு முன்பே பெயரெடுத்த முன்னணி நடிகர் ரஞ்சனை வைத்து ‘நீலமலை திருடன்’ எடுத்தார். பின்னர், கன்னட நடிகர் உதயகுமார், ஜெமினி கணேசேன், பாலாஜி போன்றோரை வைத்து அடுத்தடுத்து படங்களை கொடுத்தார். எம்ஜிஆரும் தேவரை கண்டுகொள்ளவில்லை, தேவரும் எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1960-ல் அசோகனை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’ என்று ஒரு படத்தை ஆரம்பித்தார்.. பாடல்களெல்லாம்ஒலிப்பதிவாகிவிட்டன  ஆகிவிட்டன. பாடல்களை எதேச்சையாக கேட்ட எம்ஜிஆருக்கு வரிகளும் டியூனும் அற்புதமாய் தெரிந்தன. நைசாக கதையையும் கேட்டார். அங்குதான் பிடித்தது அசோகனுக்கு சனி. இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று எம்ஜிஆர் கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். விளைவு? அசோகன், படத்தில் வில்லனாக்கப்பட்டார். தாய் சொல்லை தட்டாதேவில் எம்ஜிஆர் ஹீரோவானார்.  பீம்சிங், சிவாஜி ஜோடி  "ப" வரிசைப்படங்கள் வெற்றி பெற்றன. சாண்டோ சின்னப்பா, எம்.ஜி.ஆர் இணை "த" வரிசைப்படங்கள் வெற்றி பெற்றன. இத்தனை சாதனைகள் செய்தும் சிவாஜி நடித்த படத்தை சாண்டோ  சின்னப்பா தேவர்  தயாரிக்கவில்லை.

தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார்.   ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.

குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். 

எம்ஜிஆருக்குச் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை திகதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, வெளியாகும் நாளும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை.

அதேபோல், படத்தில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்படும். அவர்களிடம் பேசப்படும். சம்மதம் வாங்கப்படும். டெக்னீஷியன்களும் அப்படித்தான். எல்லாம் முடிவானதும், எல்லோருக்கும் ‘சிங்கிள் பேமெண்ட்’ வழங்கப்படும். அதாவது, ஒரு படத்துக்கான சம்பளத்தை, இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுப்பதெல்லாம் சின்னப்பா தேவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள்.

இந்தித் திரைப்படத்துக்காக, ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள்.

தேவரின் வாழ்க்கையை  புத்தகமாக்க  வேண்டும் என சிலர் தெரிவித்தனர். புத்தகம் எழுத  நிண்ட காலம் தேவைப்படும் . உங்கள்  வாழ்கையை படமாக்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. தேவரின் மனது குளிர்ந்தது. முருகனின் திருவிளையாடல்தான் என் கதை என்றார். முருகனுடைய திருவிளையாடல் தான் என் கதை. . அந்த மருதமலையான், என்னை எப்படி காப்பாத்தி, கரை சேர்த்தான்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமே... அதுல, சினிமாவுக்கு எதெல்லாம் தோதுபடும்ன்னு பாருங்க...' என்றார் தேவர்.

தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள், ஆறு கதைகளாக, தனித்தனியாக சினிமாவிற்கு ஏற்றவாறு உருவாகி, மருதமலை, சுவாமி மலை, பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி கோவில்களில் நடைபெற்றது போல மெருகூட்டப்பட்டது. முருகன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்கள், தேவர் பிலிம்சாரால் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் வாரியார் தோன்றி, சொற்பொழிவு செய்வதாக கதை நகர்ந்தது.

எட்டுமணி நேரம் ஓடக் கூடிய இந்த 'டாகுமென்டரி' படத்துக்கு, தெய்வம் என்று பெயரிட்டனர். தேவர் பிலிம்சில் தொடர்ந்து நடித்தவர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 1970களில், கோலிவுட்டில், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமாருக்கு அடுத்து, குன்னக்குடி வைத்தியநாதன் பிசியாக இருந்த நேரம். அதனால், அவரை ஒப்பந்தம் செய்தார் தேவர். வழக்கம் போல், பாடல்கள் கண்ணதாசன்.

பாடலுக்கான சிச்சுவேஷனைக் கேட்டார் கண்ணதாசன். ஆனால், படத்தில் சிச்சுவேஷனே இல்லை.

'என்னய்யா... விளையாடறீங்களா... தேவர் அண்ணன் கதையில, பாட்டெழுத சந்தர்ப்பமே இல்லயா...' என்றார். படத்தில் பாடல் சிச்சுவேஷன் இல்லை என்றதும், தேவருக்கு கடும் கோபம்.

கடைசியில் கதை இலாகாவினர், 'அண்ணே... நீங்களும், கவிஞர் அய்யாவும், கோவில் உற்சவங்களை போட்டு பாருங்க... முருகனுக்கு, ஆறு பாட்டாவது கிடைக்காமலா போயிரும்...' என்றனர்.

தினமும் ஒரு, 'எபிசோட்' என்று, எட்டு நாட்கள், திருவிழா காட்சிகளை, மிக பொறுமையாக பார்த்தனர் கண்ணதாசனும், தேவரும்!

வேலனின் ஒவ்வொரு விசேஷமும், பாடலாக ஆனது. உணர்ச்சி வசப்பட்டு எழுதினார் கண்ணதாசன்; அந்தப் படல்கள் அனைத்தும்  இன்றும் பக்திப் பாடல்களாக  ஒலிக்கின்றன.

எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்.

தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் படுதோல்வியைச் சந்தித்த படம்... ‘தேர்த்திருவிழா’வாகத்தான் இருக்கும்.

பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை ‘முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகியிருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம்.

கோவையில் மிகப்பெரிய விநியோகஸ்தர் அவர். தேவரின் படங்களை தொடர்ந்து அவர்தான் அந்தப் பகுதியில் ரிலீஸ் செய்து வந்தார். ஒருநாள் அவரை தேவர் போனில் அழைத்தார். ‘இப்போ எடுத்திட்டிருக்கிற படத்துக்கு நீங்க பணம் எதுவும் தரவேணாம். அதுக்கு பதிலா ஒண்ணு செய்யணும்’ என்றார். ‘சொல்லுங்க முதலாளி’ என்றார். ‘மருதமலைக்குப் போறதுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுங்க போதும்’ என்றார் தேவர். அப்படித்தான் கோயில் பிரபலமானது.

அதேபோல் தேவர் செய்த இன்னொரு விஷயம்... ஐம்பதுகளில், கோவையில் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்ததை ஒருபோதும் மறக்கவில்லை தேவர். ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு தொகையை தனக்கும் இன்னொரு தொகையை உதவிக்காகவும் குறிப்பிட்ட தொகையை முருகன் கோயில்களுக்காகவும் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தன் நண்பர்களுக்குமாகவும் வழங்கி வந்தாராம்.

“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

No comments: