ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணி இருந்த வரையில் அவருடைய குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது. ஜெயலலிதா மறைந்த பின்னர் முதல்வராவதற்கு ஆசைப்பட்ட சசிகலாவால் கழகத்தினுள் கலகம் எழுந்தது. ஜெயலலிதா கையைக் காட்டிய ஓ.பன்னீர்ச்செல்வதைத் தூக்கி எறிந்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலைப்படுத்தப்பட்டார். முதல்வர் பதவி கொடுத்த சுகானுபவங்களை இழக்க விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவைத் தூக்கி எறிந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் தலமையைக் கைப்பற்ற பெரும் முயற்சி செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்ததால் அவரின் முயற்சிகள் அனைத்தும் நீர்த்துப்போயின.
கழகத்தினுள் எடப்பாடியின் கை ஓங்கியது. பன்னீரும் அவரது ஆதர்வாளர்களும் ஓரம் கட்டப்பட்டனர். கழகத்தின் பிடி எடப்பாடியின் கையில் உள்ளது. இரட்டை இலை வழக்கு பன்னிரின் வசம் உள்ளது. இரட்டை இலை இல்லாத தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்த வரலாறு உள்ளது. இரட்டை இலை இல்லாமல் ஜெயலலிதாவே படுதோவியடைந்தார். ஆகையா ல், பன்னீரும் , எடப்பாடியும் இணைந்து செயற்பட்டால்தான் கழகம் உருப்படியாக இருக்கும். இல்லையேல் இருவரின் அரசியல் எதிர்காலமும் சூனியமாகி விடும். சகிகலாவுக்கு ஆதரவான சில தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் கொடுத்தபோது அவர்கள் நீக்கப்பட்டனர்.
எடப்பாடியை வழிக்குக் கொண்டுவர சசிகலாவை ஆதரித்து பன்னீர் பேசுவார். அப்போது சிலர் எடப்பாடிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள். இன்னும் சிலர் பன்னீருடன் சமாதானம் பேசுவார்கள். இப்போது பன்னீரின் சகோதரரானஓ.ராஜாவும் மூத்த நிர்வாகிகளும் சசிகலாவைச் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணனுக்கு அடங்கிய தம்பியான ராஜா, அண்ணனான பன்னீருக்குத் தெரியாமல் சசிகலாவைச் சந்தித்திருக்க மாட்டார். சந்தித்தது மட்டுமல்லாமல் கழகத்துக்குத் தலைமை ஏற்க வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதர்வாக தீர்மானம் செய்தது, சசிக்லாவைச் சந்தித்தது, அழைப்பு விடுத்தது என்பனவற்றை எடப்பாடி தரப்பு கொஞ்சமும் ரசிக்கவில்லை. அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சசிகலாவைச் சந்தித்த ராஜாவும் இன்னும் சிலரும் கட்சியில் இருந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தம்பியை நீக்குவதற்கு அண்ணன் பன்னீர் கையெழுத்திட்டார்.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை மட்டும் 305 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். சசிகலாவைச் சந்தித்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகப் பேசியவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொடர்பிலிருந்தவர்கள், கட்சி விரோத நடவடிக்கை எனப் பல காரணங்களை முன்வைத்து இந்த நீக்கங்கள் நடைபெற்றிருந்தாலும், ‘ஒரு கட்சிக்கு இது ஆரோக்கியமானதா?’ என்கிற அழுத்தமான கேள்வியை முன்வைத்து விவாதம் எழுந்திருக்கிறது. பாரதீய ஜனதாவை எதிர்த்துப் பேசுபவர்களை நீக்கியது மிகவும் கொடுமையானது.
கட்சியிலிருந்து நீக்கம் என்பது கழ்கத்துக்குப் புதிதல்ல. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்த பின்பு, சசிகலா, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக சுமார் 3,000 நிர்வாகிகள் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்களுடன் ஒத்துப்போகாத நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டுவந்தனர். ஆட்சியிலிருந்தபோது, குறைவாக இருந்த இந்த நீக்க எண்ணிக்கை, எதிர்க்கட்சியாக அமர்ந்த பிறகு வேகம் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை, நவம்பர் மாதங்களில் மட்டும் 16 நீக்க அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஜூலையில் மட்டுமே தஞ்சை தெற்கு, கன்னியாகுமரி, சேலம் புறநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 29 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாகக் கூறப்பட்டாலும், நீக்கப்பட்ட அந்த நிர்வாகிகளின் பின்னால் எத்தனை ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பார்கள் என்பதைத் தலைமை யோசிப்பதில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், இந்த நீக்கம் அதிகரித்தது. கடந்த பெப்ரவரியில் மட்டும் 157 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது கட்சிக்குப் பெரிய பின்னடைவு.
ஒரு புகார் வந்தால், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதாவின் வழக்கம். இதற்காகக் கட்சிக்குள் ஐவரணி செயல்பட்டது. இதுபோக, உளவுத்தகவல் மூலமாகவும் புகார்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வார். அதன் பிறகுதான் கடும் நடவடிக்கைகள் பாயும்.
இப்போது மாவட்டச் செயலாளர்களின் ராஜாங்கம்தான் நடக்கிறது. தங்களுக்குப் பிடிக்காத நிர்வாகிகள், தொண்டர்களைக் கட்சித் தலைமை மூலமாகக் கட்டம் கட்டிவிடுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்ட 10 பேரும், தருமபுரி, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் புறநகர், விருதுநகர் கிழக்கு மாவட்டங்களில் நிலவும் உட்கட்சிப் பூசலால் நீக்கப்பட்டவர்கள். இவர்கள் மீதான புகார்களைக் கட்சித் தலைமை விசாரிக்கவே இல்லை.
மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டிய நெருக்கடியில்தான், பன்னீரும் எடப்பாடியும் இருக்கிறார்கள். கடந்த ஒன்பது மாதங்களில் நீக்கப்பட்ட 305 பேரில், 50 பேர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 16 பேர் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டத்திலேயே, கட்சி விரோத நடவடிக்கைகள் களைகட்டுகின்றன. இது ஏன் நடக்கிறது என்பதை அமர்ந்து பேசி, சுமுகமாகத் தீர்வுகாண்பதற்குத் தலைமை விரும்பவில்லை. இப்படியே போனால், ‘எங்கள் இருவரையும் தவிர, எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குகிறோம்’ என்று ஒரு நள்ளிரவில் இவர்கள் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்கிறார்கள்.
“முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது பண மோசடிப் புகார் எழுந்தபோது, அதைக் காரணமாகக் காட்டி கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட பிறகும்கூட, கட்சியிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருசார்பாகவே அ.தி.மு.க தலைமை நடந்துகொள்வது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. பன்னீர் - எடப்பாடி கட்டுப்பாட்டில் இப்போது கட்சி இல்லை. மாவட்டச் செயலாளர்கள் கையில்தான் கட்சி இருக்கிறது. அதுதான் இது போன்ற நீக்கப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்” என்றார் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கழகச் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.
வாய்பாய், அத்வானி ஆகிய இரண்டு தலைவர்களும் இணைந்து பாரதீய ஜனதாக் கட்சியை நழி நடத்தினார்கள். கருணாநிதி, அன்பழகன் ஆகிய இருவரின் ஒருமித்த கருத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி நடை போட்டது. மோடி, அமித் ஷா ஆகியோரின் செயற்பாட்டினால் அசைக்க முடியாத இடத்தில் பாரதீய ஜனதா உள்ளது. எடப்பாட் பழனிச்சாமி, ஓ. பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் அதிகாரப் போட்டியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது.
சிலம்பு
No comments:
Post a Comment