Wednesday, March 16, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி- 9

 பானுமதி,சாவித்திரி, அஞ்சலிதேவி ஆகியோர் தமிழ்த் திரை உலகில் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது பாடல் காட்சிகளிலும்  சிறிய வேடங்களிலும்  தலையைக் காட்டியவர் சரோஜாதேவி. அதிர்ஷ்டக் காற்று சரோஜாதேவியின் பக்கம் வீசியதால் "கன்னடத்துப் பைங்கிளி" எனும் பட்டப் பெயருடன் கதாநாயகியக வலம் வந்தார்.  சினிமாவைப்  பற்றி எதுவும் தெரியாத வயதில் பாடுவதற்காகச் சென்ற சரோஜாதேவி எதிர்பாராத விதமாக நடிகையானார்.

  சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா.  பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது  நடந்த பாட்டுப் போட்டியில்  சரோஜாதேவியும் கலந்துகொண்டார்.   போட்டியாளர்கள் அனைவரும் கீர்த்தனைகளையும், கன்னட சினிமாப் பாடல்களையும் பாடினார்கள். ‘ஏ ஜிந்தகி ஹே மேளே' என்ற இந்திப் படப் பாடலை சரோஜாதேவி பாடினார். நௌஷா இசையில் முகமது ரஃபி பாடி பட்டிதொட்டி எங்கும் ஒலித்த  அந்தத் தத்துவப் பாடலைத் தனது இனிமையான கீச்சுக் குரலில் சரோஜாதேவி  பாடியது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட  நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் பிடித்துவிட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாதேவியை அழைத்த ஹொன்னப்பர், “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக்கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன் என்றார்.

பாடகியாகும் கனவுடன் தாயாருடன் சென்ற சரோஜாதேவியைப் பார்த்த  ஹொன்னப்ப பாகவதர்வதர் அதிர்ச்சியடைந்தார். பாடசாலைச் சீருடையில் பார்த்த சரோஜாதேவிக்கும் தனக்கு முன்னால் நிற்கும் சரோஜாதேவிக்கும் இடையிலான வித்தியாசம் அவரை வேறுவகையில் சிந்திக்கத் தோண்டியது.

ஜொலிக்கும் உடையும், கண்ணைக் கவரும் ஒப்பனையும் சரோஜாதேவியை வேறுபடுத்திக் காட்டின.   ஹொன்னப்ப பாகவதர்  தனது முடிவை மாற்றினார்.  பாடுவதற்கு ஆசையுடன் வந்த சரோஜாதேவியும், தாயும் அதிர்ச்சியடைந்தார்கள்.  நீ பாடவேண்டாம் என பாகவதர் சொன்னபோது இருவரும் அதிர்ச்சியடைந்தனர். எனது படத்தில் கதாநாயகியாக நடி எனச் சொன்னதும் அவர்களின் அதிர்ச்சி பன்மடங்காகியது. இருவரும் மறுப்புத் தெரிவித்து விட்டு வீட்டுக்குச் சென்றனர். விக்கிரமாதித்தன் போன்று தொடர்ந்து முயற்சி செய்த   ஹொன்னப்ப பாகவதரினால் தமிழ்த்திரை உகலுக்கு கன்னடத்துப் பைங்கிளி கிடைத்தார்.

 

சரோஜாதேவியின் அப்பாவின் அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸனின் வாழ்க்கை வரலாறு; கெளரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார்  தகப்பன் பைரவப்பா.

  ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அந்தப் படத்தில் “ பாரொ கிளியே.. மரளி மனகெ..” என்று சி. எஸ். சரோஜினி பாடிய சோகப் பாடலை வீணை வாசித்தபடியே பாடுவதாக அமைந்த சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர்விட்டார்ககள்.

படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு இந்தப் படம் கொண்டுவந்த புகழ், வீட்டின் முன் ரசிகர் கூட்டத்தைக் கூட்டியது. ராசியான ஹீரோயின் என்ற சென்டிமென்டும் சேர்ந்துகொள்ளப் பாகவதர் தனது ‘ஆஷாடபூதி, 'பஞ்ச ரத்தினம்' ஆகிய படங்களிலும் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

  ‘இல்லறமே நல்லறம் என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி.பி. பிள்ளையா இயக்கத்தில் ஜெமினி – அஞ்சலிதேவி நடிப்பில் 1958-ல் வெளியான இந்தப் படத்தில் சரளாதேவி என்ற நாட்டியப் பெண்மணியாகச் சின்ன வேடத்தில் நடித்து யார் இந்தப்பெண் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தார். முறைப்படி நடனம் பயிலவில்லை என்றாலும் முக பாவனை அற்புதமாக இருந்தது.

'நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியை நடிக்கவைக்கும் பேச்சு எழுந்ததும், 'சிறு வேடங்களில் நடனமாடும் பெண், எம்.ஜி.ஆருக்கு ஜோடியா?' என்று பல எதிர்ப்புகள் தோன்றின. சரோஜாதேவிக்கு மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்தது. யோசித்தபடி உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆரிடம் பக்கத்தில் இருந்த சிலர், 'அந்தப் பெண் காலை தாங்கித் தாங்கி நடக்கிறாள். கதாநாயகி வேடத்துக்குச் சரிப்பட்டு வருமா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு எம்.ஜி.ஆர், 'அந்த நடையும் அழகாகத்தான் இருக்கிறது' என்று குறை சொன்னவர்களின் வாயை அடைத்திருக்கிறார். தமிழ் சுத்தமாஅக்த் தெரியாது என்ற கருத்தையும் எம்.ஜி.ஆர் ஏற்கவிலை.இதன்பிறகு எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் இந்த அபிநய சரஸ்வதி.

பரதநாட்டியம் தெரியாது; நாடகத்தில் நடித்த அனுபவம் கிடையாது; கவர்ச்சி காட்டவே மாட்டார் என வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்கு தேவையான பல விஷயங்கள் சரோஜாதேவியிடம் இல்லாதபோதும், தன் உழைப்பாலும் நளினத்தாலும் மட்டுமே ஜெயித்தவர் இந்தக் கன்னடத்து பைங்கிளி.

தமிழில் அவர் அறிமுகமான படம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்றாலும் அவருக்கு நட்சதிர அந்தஸ்தை உருவாக்கி தந்த படம் நாடோடி மன்னன். கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது  ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று சரொஜாதேவிகுத் தெரியாது தெரியாது. எனவே   பேசாமல் உட்கார்ந்து இருந்தார். அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்று சரோஜாதேவியைச் சுட்டிக் காட்டி  யார் அந்த பெண் என்று கேட்டார்.

அதற்கு இயக்குனர் அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம். பெங்களூரை சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி என்று தெரிவித்தார். வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு வந்தது யார் என்று நான் இயக்குனரிடம் கேட்டபோது அவர்தான் எம்.ஜி.ஆர் என்று அவர் தெரிவித்தார்.

அதைக் கேட்டு சரோஜாதேவி  அதிர்ச்சி அடைந்தார். அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே என்று நான் வருந்தினார். எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த திருடாதே என்ற படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியைத் தேர்வு செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது என்று தயாரிப்பாளருக்கு பயம். அதனால் அந்தப் படத்தில்  அவர் நடிக்கவில்லை.

 எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக   நடிக்க  சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார். அந்த படம்  அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரமே இவர் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க காரணமாயிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணப் பரிசு, இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பாகப்பிரிவினை ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுத் தந்தன. 1957 ஆம் ஆண்டு என்டிராமாராவ் நடிப்பில் வெளிவந்த பாண்டுரங்க மகாத்மியம் என்ற படம் தான் இவர் தெலுங்கில் அறிமுகமாக வழிவகுத்தது. 1960களில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பணிபுரியும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். நாடோடி மன்னன் தொடங்கி அரசகட்டளை வரை எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவருக்குண்டு.

1959ஆம் ஆண்டு பைகாம் என்ற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தியிலும் தடம் பதித்தார். சசுரால், ஒபேரா ஹவுஸ், பியார் கியா தோ டர்னா கியா, பேட்டி பேட்டே ஆகியவை ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களாகும். திரைப்படங்களில் இவருடைய உடையலங்காரம், சிகையலங்காரம் மற்றும் இவர் அணிந்து வரும் ஆபரணங்கள் அன்றைய பெண்களை வெகுவாக ஈர்த்தது.

கால்நூற்றாண்டுக்கு மேல் தமிழ் திரையுலகில் முதன்மை நாயகியாக கோலோச்சியிருந்த நடிகை சரோஜா தேவி அடுத்த தலைமுறை நாயகர்களான விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருடனும் அதற்கும் அடுத்த தலை முறை நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். இயக்குநர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2009-ல் வெளிவந்த ஆதவன் திரைப்படத்திலும் நடித்தார்.


 

 

No comments: