Saturday, March 19, 2022

இலங்கையில் உருவான பொருளாதாரப் போர்

இந்து சமுத்திரத்தின் முத்து, தப்ரபேன் எனப் புகழப்பட்ட இலங்கை இன்று பொருளாதார  சுழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலைக்கு பலத்த போட்டி ஏற்பட்டதால் சுற்றுலாவை பிரதான வருவாயாக கட்டமைத்தது. கொரோனா என்ற கொடிய துயரம் அந்த வருவாயை நசுக்கியது. உலக நாடுகள் அனைத்தும் கொரோவால் பாதிக்கப்பட்டன. படுத்து விட்ட இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு அரசாங்கம் செய்த முயற்சிகள் எவையும் கைகொடுக்கவில்லை.

 இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்துள்ளது. 1970ல் இலங்கையில் நிலவிய பஞ்சத்தை விட மிக மோசமான பஞ்சமாக இது பார்க்கப்படுகிறது.   இலங்கை பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்பாகத்தான் வீழ்ச்சி அடைகிறது என்றும் கூட சொல் முடியாது. ஏனென்றால் கடந்த நான்கு  வருடமாகவே. அதாவது கொரோனாவிற்கு முன்பே  பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது.

முக்கியமாக சீனாவிடம் வாங்கிய கடன், சீனாவின் பல்வேறு ரோட் அண்ட் பெல்ட் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிதி உதவிகள், அதற்கான வட்டி எல்லாமே இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது. அதன்பின் வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றது.   முக்கியமாக கொரோனா சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது. உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், சுற்றுலாத்துறையை கணிசமாக நம்பி இருக்கும் இலங்கை படுமோசமான வீழ்ச்சியை சந்தித்தது. அதிலும் டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டே சென்றது.

கடந்த வருடம் 190 தாண்டிய இலங்கை ரூபாய் மதிப்பு இப்போது 260 ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. ரிசர்வ் அந்நாட்டு மத்திய  வங்கி இதை சரிப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்தும் எதுவும்   உதவிகரமாக அமையவில்லை. வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. ரஷ்ய போர் காரணமாக இன்னொரு பக்கம்  பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

மின்சாரத்தடை மக்களை வருத்துகிறது. பொருட்கலின் விலை உயர்வு ஒன்றும் புதியதல்ல. முன்பு 5 ரூபா, 10 ரூபா வரையில் பொருட்களி விலை உயரும். இன்று50 ருபா, 7 ரூபா, 100 ரூபா  உயர்ந்தால் பண வசதி  உள்ளவர்களால் கூட சமாளிக்க முடியாதுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாகவும், வேலைவாய்ப்பு இன்மையாலும் தலைநகர் கொழும்பில் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் ஜனாதிபதி  கோட்டாபய , பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரையும், அவர்களின் குடும்பங்களை எதிர்த்தும் போராட்டங்கள்  நடைபெறுகின்றன.

1958 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் பெளத்தமும், சிங்களமுமே முன்னிறுத்தப்பட்டன. தமிழ்  இளைஞர்கள் உருமைக்குரல் எழுப்பி ஆயுதப் போராட்டம் செய்தபோது இனவாதப் பிரசாரங்கள்  உச்சம் பெற்றன.

நாட்டை முன்னேற்றுவது. பொருளாதார அபிவிருத்தி,  இளைஞர்களுக்கான  வேலை வாய்ப்பு  போன்ற எவற்றுகும்  தேர்தல் விஞ்ஞாபனத்தில்  முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இன வாதம் பேசினால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற உணர்வு அப்போது மேலோங்கியது.

மக்களும் பொருளாதார திட்டங்களை பற்றி யோசிக்காமல்  இன வாதத்திற்கு வாக்களித்ததன் விளைவு இன்று வீதியில் இறங்கிப்  போராடும் நிலையை உருவாக்கியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள்  கோஷமிடுகின்றன.   ஆட்சி மாறினாலும்  இதே நிலைதான் தொடரும்.  உடனடியாக  மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.


No comments: