Thursday, March 31, 2022

உதைபந்தாட்ட கலவரத்தில் அதிகாரி மரணம்


  உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண்  போட்டியில் நடைபெற்ற கலவரத்தில் ஸாம்பிய மருத்துவ அதிகாரி மர‌ணமடைந்தார்.

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் உள்ள மொஷூட் அபலா தேசிய மைதானத்தில் நைஜீரியா, கானா அணிகளுக்கு இடையிலான  உலகக் கிண்ண தகுதிச் செஉற்றுப் போட்டி நடைபெற்றது.   1-1 என போட்டி சம நிலையில் முடிந்ததால் உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து நைஜீரியா வெளியேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நைஜீரிய ரசிகர்கள் அங்கிருந்த பொருட்களை வீசி தீயிட்டு கலவரத்தை உண்டுபண்ணினர்.

 இந்தக் கலவரத்தில் ஊக்கமருந்து கட்டுப்பாட்டுக் குழுவில் பணிபுரிந்த ஸாம்பியாவைச் சேர்ந்த  மருத்துவர்ஜோசப் கபுங்கோ,  மூச்சுத்திணறி மரணமானார்.

"செவ்வாயன்று நடந்த போட்டியில் ஊக்கமருந்து அதிகாரியாக கடமையாற்றிய எங்கள் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோசப் கபுங்கோவின் மறைவிற்கு இன்று நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், மேலும் டாக்டர் கபுங்கோவின் குடும்பத்தினருக்கும் முழு கால்பந்து குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஜாம்பியா கால்பந்து சங்கத் தலைவர் ஆண்ட்ரூ கமங்கா கூறினார்.  போட்டிக்கு பிந்தைய வன்முறையின் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நைஜீரிய கால்பந்து கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில், கபுங்கோ, கானா அணியின் டிரஸ்ஸிங் ரூம் அருகே, ஊக்கமருந்து விசாரணைக்காக‌ ஒரு வீரரை அழைத்துச் செல்லக் காத்திருந்த போது அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த வன்செயல் பற்றிய விசாரணையை பீபா தொடங்கிய பின்னர் நைஜீரிய கால்பந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

No comments: