Wednesday, March 16, 2022

ரோயல் சலஞ் பெங்களூர் கப்டன்களின் சாதனைகளும் வேதனையும்

 

 கிரிக்கெட் ரசிகர்க ளின் நரம்பைச் சூடாக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் திகதி முதல் மே 29-ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இவ்வருடம் லக்னோ, குஜராத் ஆகிய 2 புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதில் மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஒன்பது அணிகளும் கப்டன்களை அறிவித்த பின்னர் கடைசியாக பெங்களூர் தனது கப்டனை அறிவித்தது.  பெங்களூருக்கு இது வரை கப்டனாகச் செயற்பட்டவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீரர்கள். ஐபிஎல் இலும் ரி20 யிலும் பல சாதனைகளைச் செய்தவர்கள். ஆனால், எவருமே சம்பியன்  கிண்ணத்தை பெங்களூருக்குப் பெற்றுக் கொடுக்க‌வில்லை.

கப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் புதிய கப்டனைத் தேட வேண்டிய நிலைக்கு பெங்களூர் தள்ளப்பட்டது. மெகா ஏலத்தில்  புதிய கப்டனை வாங்க முயற்சித்தது.  எதிர் பார்த்த  இளம் வீரர்களை வேறு அணிகள் அதிக பணம் கொடுத்து வாங்கியதால் ஏமாற்றமடைந்தது பெங்களூர். பப் டு பிஸஸிஸை பெங்களூர் போட்டி போட்டு வாங்கியதால் அவர்தான் கப்டன் என ரசிகர்கள் முடிவு செய்தனர்.நீண்ட இழுத்தடிப்பின் பின்னர் டு பிஸஸிஸை கப்டனாக பெங்களூர் அறிவித்தது. அனுபவனும் ஆற்றலும் மிக்க டு பிளஸிஸ் மீது பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.


                                      பப் டு பிளேஸிஸ் புதிய க‌ப்டன்

 தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் பப் டு பிளேஸிஸ் அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்த இவர் கடந்த பல வருடங்களாக சென்னை அணியில் முக்கிய முதுகெலும்பு வீரராக செயல்பட்டு வந்தார். கடந்த வருடம் 633 ஓட்டங்ள் குவித்து சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய   அவரை 7 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூரு தற்போது புதிய க‌ப்டனாக அறிவித்துள்ளது.

 இதுநாள் வரை ராகுல் டிராவிட், விராட் கோலி உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. எனவே தற்போது டு பிளேஸிஸ் முதல் முறையாக தங்களுக்கு சம்பியன் கிண்ணத்தை வாங்கிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பெங்களூர் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 


 1. ராகுல் ட்ராவிட் (2008) :

ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டு பெரும்பாலான அணிகள் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த நட்சத்திரங்களை க‌ப்டனாக அறிவித்தது.   பெங்களூருவைச் சேர்ந்த ராகுல் ட்ராவிட் பெங்களூர் அணியின் முதல் க‌ப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் அந்த சீசனில் அவர் தலைமையில் 14 போட்டிகளில் பங்கேற்ற அந்த அணி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

2. அனில் கும்ப்ளே (2009 – 2010):

அதன்பின் பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அந்த அணி நிர்வாகம் க‌ப்டனாக நியமித்தது. அவர் தலைமையில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி 2009இல் இறுதிப்போட்டி வரை சென்றாலும் சம்பியனாக‌ முடியவில்லை. 2009, 2010 ஆகிய 2 வருடங்கள் க‌ப்டனாக செயல்பட்ட அவர் தலைமையில் 35 போட்டிகளில் பங்கேற்ற பெங்களூரு 19 வெற்றிகளை பதிவு செய்தது.

3. கெவின் பீட்டர்சன் (2009):

  2009 ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் முதல் 6 போட்டிகளில் பெங்களூர் அணியின் க‌ப்டனாக செயல்பட்டார். அதில் அந்த அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்துக்காக அவர் விளையாட சென்றதன் காரணமாக அதன் பின் அனில் கும்ப்ளே க‌ப்டன் பொறுப்பை ஏற்றார்.

 4. டானியல் வெட்டோரி (2011 – 2012) :

 நியூசிலாந்தின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய 2 வருடங்கள் பெங்களூர் அணியின் க‌ப்டனாக செயல்பட்டார். அதில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே அசத்திய அவர் அந்த அணி இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

  5. விராட் கோலி (2013 – 2021):

 இந்தியாவின் நட்சத்திரமாக உருவெடுக்க துவங்கிய விராட் கோலியிடம் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரு அணியின் க‌ப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அபாரமாக செயல்பட்ட அவர் கடந்த வருடம் வரை 140 போட்டிகளில் அந்த அணிக்காக கேப்டன்ஷிப் செய்து முழு மூச்சுடன் கோப்பையை வெல்ல போராடினார். குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு 4 சதங்கள் உட்பட 976 ஓட்ட‌களை   குவித்து தனி ஒருவனாக போராடிய போதிலும் அவரால் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்ற‌ முடியவில்லை என்பது சோகமான செய்தியாகும்.

6. ஷேன் வ‌ட்சன் (2017) : கடந்த 2017ஆம் ஆண்டு விராட் கோலி க‌ப்டனாக பொறுப்பு வகித்த நிலையில் காயம் அடைந்த காரணத்தால் 3 போட்டிகளுக்கு அவுஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வ‌ட்சன் கேப்டனாக செயல்பட்டார். அதில் அந்த அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

No comments: