Friday, March 4, 2022

வெளிச்சத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் மக்கள்


 உக்ரைன் மீதான ரஷ்யாவின்  ஆக்கிரமிப்பு உலக நாடுகளின் ஊடகங்களில் முதலிடம் பிடித்துளன. ஆனால், இலங்கை மக்களின் பேசு பொருளாக மின் தடை முக்கிய இடம்  பிடித்துள்ளது. மின் தடை இலங்கைக்குப் புதியதல்ல பருவகால மாற்றரம் போல வருடா வருடம்  ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து மின் வெட்டு அமுல் படுத்தப்படுகிறது. இந்தக் கூத்துக்களுக்கிடையில் மின் சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தாலும் மின் வெட்டு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

அரை மணித்தியாலம், ஒருமணித்தியாலம், இரண்டு மணித்தியாலம்  மின் வெட்டு என வெளியாகும் செய்திகளுக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர். கடந்த வார் அம் ஐந்து மணித்தியாலம், ஏழரை மணித்தியாலம்  மின் வெட்டு அமுல் படுத்தப்பட்டதால் இலங்கையின் எதிர்காலம் இருட்டில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் மக்களின் மனதில் எழுந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களும் பொருளாதார வீழ்ச்சி பற்றி உரையாடத் தொடங்கிவிட்டனர். அலுவலக வேலை நேரம் எட்டு மணித்தியாலங்கள். ஐந்து மணி நேர மின்சாரத் தடையால் ஏற்படும் பாதிப்பு இப்போதைக்கு வெளியில் தெரியாது.  அதன்  பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கும்போது  பொருளாத வீழ்ச்சி மிக மோசமாக  இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மின்சாரம் தடைப்படும் வேளைகளில் மின்பிறப்பாக்கியை இயக்குவதற்கு மண்ணெண்ணெய், டீசல்  இல்லை. டீசல்  இல்லாததால் வாகனங்கள்  நடுத்தெருவில் நிற்கும் நிலை தோன்றியுள்ளது. எரிபொருள் கொடுத்து உதவக் கூடிய நிலையில் இன்னொரு வாகன சாரதி இல்லை.


 அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசை, பால்மா வாங்குவதற்கு நீண்ட வரிசை, எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு நீண்ட வரிசை  இந்த வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்கு  வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. பாணுக்கு வரிசையில் நின்ற வரலாறு இந்தத் தலை முறைக்குத் தெரியாது.

மின்   வெட்டைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

புதிய கைத்தொழில் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த பதவியை வகித்திருந்தார்.மின்சக்தி அமைச்சராக முன்னர் பதவி வகித்த அமைச்சர் காமினி லொக்குகே இன்று மாலை புதிய எரிசக்தி அமைச்சராக யமிக்கப்பட்டார்.இதன்படி, இதற்கு முன்னர் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மின்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில எரிசக்தி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும் இதற்கு முன்னர் பதவி வகித்தனர்.

இவர்களின் நியமனங்களால்  புதிய வெளிச்சம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தனியார் வாகங்களில்  செல்பவர்கள்  பொதுப் போக்குவரத்தை நாடத் தொடங்கிவிட்டனர். உயர் அதிகாரிகளுக்கு வாகனமும், எரிபொருளும் கொடுத்த தனியார் நிறுவனங்கள் அவற்றை இடை நிறுத்தியுள்ளன.

    இரண்டு முக்கிய எரிவாயு இறக்குமதி நிறுவனங்களான லாவ்காஸ், லிற்ரோஆகியன்  எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாது என்று கூறியுள்ளன,   உள்ளூர் வங்கிகள் கடன் கடிதங்களை (LCs) திறக்க அனுமதிக்கவில்லை எனச் சொல்கின்றன.  இது இறுதியில் பாரிய எரிவாயுவு பற்றாக்குறை வழிவகுக்கும். தற்போதைய டொலர் நெருக்கடியால், வங்கிகள் எல்.சி.க்களை திறக்கவில்லை. எரிபொருளைத் தொடர்ந்து எரிவாயுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை  உருவாக வாய்ப்புள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்படி மீளப் போகிறதென்பது பெரிய  கேள்விக்குறியாக உள்ளது. நெருக்கடியான நேரங்களில் இலங்கைகுக் கைகொடுத்த நாடுகளின் கவனம் ரஷ்ய உக்ரைன்  போரின் பக்கம் திரும்பியுள்ளது.

உலகநாடுகள் அனைத்தும் தமது அட்டவணைகளை கைவிட்டு யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பும்  உலக  பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவுவதற்கு  உலக நாடுகள்  முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அரசாங்கத்தின் ஸ்திரத்துக்கு நாட்டின் பொருளாதாரம் மிக முக்கியமானது.  பொருளாதார வீழ்ச்சி பல அரசாங்கங்களுக்கு எதிரியாக மாறியுள்ளன. நிபுணர்களால் கணிக்கப்படும் பொருளாதார வீழ்ச்சியை அப்பாவிப் பொது ஜனங்கள் உடனடியாகப் புரிந்துகொள்வதில்லை.

அத்தையாவசியப் பொருட்களுகுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு,எரிவாயு தட்டுப்பாடு என்பன வறுமைக் கோட்டுக்கிக் கீழ் வாழும் மக்களின் வாழ்வை சிதைக்கவல்லன. அடுத்த தேர்தல் வரை அவர்கள் அதனை மனதில் வைத்திருந்து புள்ளடியிடுவார்கள் என்பதை அரசியல்வாதிகள்  புரிந்துகொள்ள வேண்டும்.

 

No comments: