Monday, June 27, 2022

தெருவோர கடையில் துணி விற்கும் பிரபல அம்பயர்

கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைப்  போலவே சரியான தருணத்தில் சரியான முடிவுகளை வழங்கும் நடுவர்கள் எனப்படும் அம்பயர்களும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். வீரர்களைப் போலவே சரியான தருணத்தில் சரியான முடிவுகளை கொடுத்தால் அவர்களையும் ஹீரோக்களைப் போல கொண்டாட ரசிகர்கள் எப்போதும் தவறியதில்லை.

 ஆனால் நியாயமான முடிவை வழங்காமல் அநீதியான முடிவுகளை வழங்கும் ஸ்டீவ் பக்னர் போன்ற அம்பயர்களை காலத்திற்கும் மறக்காத ரசிகர்கள் வில்லனாகவே பார்ப்பார்கள். மேலும் கிரிக்கெட் வீரர்களைப் போலவே நியாயமான முறையில் நேர் வழியில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களை எலைட் பேனல் என்ற பிரிவின் கீழ் தாமாக முன்வந்து தேர்வு செய்யும் ஐசிசி அவர்களுக்கு தேவைக்கேற்ப நல்ல சம்பளமும் உலக கோப்பை போட்டிகளை நடத்தும் கௌரவத்தையும் கொடுக்கிறது. அதனால் ஆஸ்திரேலியாவின் சைமன் டஃபுள் போல் கிரிக்கெட் வீரர்களுக்கு ஈடாக புகழைப் பெற்று பெருமையுடன் வாழும் நல்ல வாழ்வும் அம்பயர்களுக்கு கிடைக்காமல் இருப்பதில்லை. ஆனால் கிரிக்கெட் வீரர்களைப் போல் அதிகப்படியான பணத்திற்க்கு மயங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்கள் ஏதோ ஒரு காலத்தில் பிடிப்பட்டு தடைபெற்று அதுவரை பெற்ற பெயர்களை வீணடித்து மோசமான வாழ்க்கையை சந்திக்க நேரிடும். அது போன்றதொரு நிலைமையில் தான் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் பிரபல அம்பயர் அசாத் ரவூப் உள்ளார்.

2000 முதல் 2013 வரை 13 வருடங்களாக சர்வதேச அளவில் 170 போட்டிகளுக்கு மேல் அம்பயராக செயல்பட்ட இவர் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் வழக்கம் போல ஐசிசியின் எலைட் பேனல் அம்பயர்கள் பிரிவில் இடம் பிடித்து ரசிகர்களிடையே கவுரவம் மிக்கவராகத் திகழ்ந்தார். அதனாலேயே ஐபிஎல் தொடரிலும் 2008 முதல் முதன்மையான அம்பயராக செயல்பட்ட இவர் 2016இல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார்.

 கடந்த 2013 ஐபிஎல் தொடரில் போட்டிகளை பிக்சிங் செய்வதற்காக தரகர்களிடம் விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பெற்றதாகக் குற்றம் எழுப்பப்பட்டது. அதனால் இவரை பிசிசிஐ 2016இல் தடை செய்ததால் மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்படும் வாய்ப்பும் இவருக்கு பறிபோனது. அதுபோக கடந்த வருடம் தம்மிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து உறவு வைத்துக் கொண்டு இறுதியில் ஏமாற்றி விட்டதாக மும்பையைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி இவர் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார். இப்படி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போயுள்ள இவர் தற்போது பாகிஸ்தானில் ஒரு சிறிய துணி கடையை நடத்தி வருகிறார். ‍   கிரிக்கெட்டில் குற்றம் சுமத்தப்பட்ட தாம் அதன்பின் மேற்கொண்டு அது சம்பந்தமான எந்த வேலைகளிலும் ஈடுபட விருப்பம் இல்லாத காரணத்தால் பொருளாதார நெருக்கடியில் இல்லையென்றாலும் இந்த வேலையைச் செய்ய துவங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர் தனது புதிய வாழ்க்கையை பற்றி பேசியது பின்வருமாறு.


 “இது எனக்கானது அல்ல, இது எனது ஊழியர்களின் தினசரி ஊதியம், அவர்களுக்காக நான் வேலை செய்கிறேன். எனது வாழ்வில் ஏராளமான போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளேன், இருப்பினும் இப்போது என்னை பார்க்க யாரும் எஞ்சியில்லை. 2013 முதல் கிரிக்கெட்டில் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கிறேன். ஏனெனில் ஒரு முறை ஒன்றை விட்டால் அதை முற்றிலும் நான் விட விரும்புகிறேன்” “எப்போதுமே எனது வேலையில் உச்சத்தைத் தொடுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கடையில் பணியாளராக வேலை செய்த நான் அதன் உச்சத்தைத் தொட்டேன். கிரிக்கெட்டில் விளையாடி அதன் உச்சத்தையும் தொட்டேன். பின்னர் நடுவராக செயல்பட்டு உச்சத்தை தொட்ட நான் இதிலும் உச்சத்தை தொட விரும்புகிறேன். எனக்கு பேராசை கிடையாது, நான் நிறைய பணத்தையும் உலகத்தையும் பார்த்து விட்டேன். எனது ஒரு மகன் மாற்றுத்திறனாளி. மற்றொரு மகன் அமெரிக்காவில் படித்து விட்டு தற்போது தான் திரும்பியுள்ளார்” என்று கூறினார்.

  பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லண்டா பஜார் எனும் இடத்தில் இவர் 2-வது தர துணிகள், காலணிகள் மற்றும் பெல்ட்கள் அடங்கிய கடை மற்றும் பாத்திர கடை என 2 வகையான கடைகளை நடத்தி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து வெளிவந்த பின்பு தம்மை யாரும் பார்க்க வரவில்லை என தெரிவிக்கும் அவர் இந்த புதிய வாழ்க்கையிலும் உச்சத்தை தொட கடினமாக உழைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments: