Thursday, June 2, 2022

பவுன்சர்கள் வீசிய ரசிகசியத்தை கூறும் சோயிப் அக்தர்


 கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரர்களுகு  பவுண்டரியும் சிக்சர்களையும் அடிக்க பிடிக்கும் என்றால் ஒரு பந்து வீச்சாளர்களுக்கு அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரணி வீரனை க்ளீன் போல்ட்டாக்குவதும் பவுன்சர் பந்துகளை வீசி பயமுறுத்துவது மிகவும் பிடிக்கும். அதிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அசுர வேகப்பந்துகளால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த வேண்டும் என்று நினைப்பவர். பவுண்டரி எல்லையின் அருகில் இருந்து பயங்கரமாக ஓடி வரக்கூடிய அவர் முடிந்த அளவு அதிவேகமாக  துடுப்பாட்டவீரனைத்  திணறடிக்கும் வகையில் பந்து வீசுவார். அவரின் வேகத்திற்கு சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் போன்ற உலகத்தரமானவர்கள் கூட பலமுறை தடுமாறியுள்ளனர்.

  2003 உலகக் கிண்ணப் போட்டியின்  போது 161.3 கி.மீ வேகத்திலான பந்தை வீசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக உலக சாதனை படைத்துள்ளார். 20 வருடங்கள் நெருங்கியும் இதுவரை அந்த உலக சாதனை உடைக்கப் படாமல் இருக்கும் நிலையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை கண்டால் வேண்டுமென்றே கூடுதல் வேகத்தில் பந்து வீசி அவர்களை கதி கலங்க செய்ய இவர் கொள்ளை பிரியப்படுவார்.

பவுன்சர்களை வீசினால் பேட்ஸ்மேன்கள் குரங்குகளைப் போல தாவி தாவி தவிர்ப்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதை தன்னுடைய காலங்களில் அதிகமாக வீசியதாக சோயப் அக்தர் தற்போது கலகலப்புடன் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. பேட்ஸ்மேன்கள் குரங்குகளைப் போல தாவுவது பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகவே பவுன்சர்கள் அதிகமாக வீசுவேன். நான் பொய் பேச விரும்பவில்லை. நான் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் தலையை அதிவேகமான பந்துகளின் வாயிலாக அடிப்பதற்கு விரும்புவேன். ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு அது மிகவும் பிடித்தது என்று வெளிப்படையாகக் கூறினார். அவர் எத்தனையோ பவுன்சர்கள் வீசியிருந்தாலும் கடந்த 2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஷேன் வாட்சனுக்கு எதிராக வீசிய ஒரு பவுன்சர் பந்து வாட்சனை தாண்டி விக்கெட் கீப்பர் தாண்டி பவுண்டரி செல்லும் அளவுக்கு மின்னல் வேகத்தில் வீசியதை மறக்கவே முடியாது. தனது வாழ்நாளில் அது போன்ற ஒரு வேகமான பந்தை பார்த்ததே இல்லை என்று ஷேன் வாட்சன் கூட சமீபத்தில் அது பற்றி நினைவு கூர்ந்து இருந்தார்.

No comments: