இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான
ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் 2 பாகங்களாக நடைபெற்றது. இந்தியாவுக்கு காலம் காலமாக
தரமான வீரர்களை உருவாக்கி கொடுக்கும் இந்த தொடரின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட
பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய
பிரதேசம் ஆகிய 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அரையிறுதிப் போட்டியில்
அபாரமாக செயல்பட்ட மும்பை, மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
அந்த நிலைமையில் இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 22-ஆம் தேதியன்று பெங்களூருவில்
உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் துவங்கியது.
41 முறை சம்பியனாகி வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள வலுவான மும்பையை ஒருமுறைகூட சம்பியனாகாத மத்திய பிரதேசம் எதிர்கொண்டது
மத்திய பிரதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த அற்புதமான வெற்றியால் வலுவான மும்பைக்கு மாபெரும் அதிர்ச்சி கொடுத்த கத்துக்குட்டியான
மத்திய பிரதேசம் வரலாற்றில் தனது முதல் ரஞ்சிக் கோப்பையை வென்று புதிய சரித்திரத்தை
எழுதியது.
அந்த அணி வென்ற போது பெவிலியனில்
இருந்து கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு உணர்ச்சி பொங்க ஓடி வந்த பயிற்சியாளர் சந்திரகாந்த்
பண்டிட் தனது அணி வீரர்களை கட்டி அணைத்துக்கொண்டது ரசிகர்களின் நெஞ்சை தொட்டது. ஆனால்
அதன் பின்னணியில் மிகப்பெரிய வைராக்கியமே உள்ளது என்றே கூறலாம். ஆம் கடந்த 1998/99
ரஞ்சி கோப்பையில் மத்தியபிரதேச அணியின் கப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் வரலாற்றிலேயே
அந்த அணி முதலும் கடைசியுமாக இறுதிப்போட்டிக்கு சென்று இதே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்
கர்நாடகாவுக்கு எதிராக தோற்றுப் போனது.
கடந்த 22 வருடங்களாக இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் திணறி வந்த மத்தியபிரதேச அணியை இந்த வருடம் பயிற்சியாளராக வழிநடத்திய சந்திரகாந்த் பண்டிட் அதே பெங்களூரு மண்ணில் 41 சாம்பியன் பட்டங்களை வென்ற வலுவான மும்பையை தோற்கடித்து தனது மாநிலத்தின் சார்பில் முதல் ரஞ்சிக் கோப்பையை வென்றார்.
No comments:
Post a Comment