Friday, June 10, 2022

போர் சூழலுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி  விளாதிமோர் செலன்ஸ்கி ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு உக்ரைன் ஜனாதிபதிக்கு  அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த மாநாடு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஜூன் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதேபோல் இந்த மாநாட்டில் முதல்முறையாக பசிபிக் நாடுகளைச் சேர்ந்த நேட்டோ உறுப்பினர்களான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் , தென் கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. 

இதுதொடர்பாக நேட்டோ அமைப்பின் துணை பொது செயலாளர் மிர்சியா ஜோவானே கூறுகையில், நேட்டோ அமைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அமைப்பில் சேர உள்ளன. உக்ரைன் குறித்தும் விரைவில் முடிவு எட்டப்படும். ஜனாதிபதிசெலன்ஸ்கி எங்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார் எனக் கூறியுள்ளார். 

இதற்கு முன்னதாக நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ப்ருசேல்ஸ் வரும் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ஜார்ஜியா, பின்லாந்து, சுவீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது. எனவே, நேட்டோ அமைப்பில் உக்ரைனின் இணைப்பு குறித்து இம்மாதத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் நேட்டோ. இந்த நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் இணைய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக கிளர்ந்து எழுந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது போர் அறிவித்து ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் இன்னும் ஓயாத நிலையில், சுமார் 1.4 கோடி உக்ரைன் மக்கள் பேர் காரணமாக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய அவல நிலை ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 1.57 கோடி மக்கள் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவையின்றி தவிக்கின்றனர். இந்த போருக்குப் பின்னர் பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

 


No comments: