Friday, June 3, 2022

வரி உயர பொருட்களின் விலை உயரும்


 

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோல் உயரும்

கோல் உயர கோன் உயர்வான்

                        - ஒளவையார்

பொருளாதாரச் சிக்கல், நிதி நெருக்கடி ஆகியவற்றால்  தடுமாரும் இலங்கை அரசு வருவாயைப் பெருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சையும் தன் வசம் எடுத்துள்ளார்.இடைக்கல பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாக அவர் அறீவித்துள்ளார்.

இலங்கையில் மே மாதத்தில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் 39.1% உயர்ந்துள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக  வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பு கூட்டு வரி 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும்,தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று கார்கள், இருசக்கர வாகன டயர்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி, வாஷிங்மிஷின், குக்கர், பிரிட்ஜ், செல்போன் போன்றவற்றிற்கான இறக்குமதி வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

  இதன்மூலம் அரசுக்கு ரூ.1,395 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

கொரோனா  நாடு முடக்கப்பட்டது ஆகியவற்றால் இரண்டு ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரம் கடும் இழப்பை சந்தித்தது. இலங்கையின் வருவாய் சுற்றுலாவை பெரிதும் நம்பியிருந்ததால் தீவிர வருவாய் பற்றாக்குறையை சந்தித்தது. அதன் காரணமாக   விலைவாசி உயர்வு விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து அது உள்நாட்டு அரசியல் குழப்பமாக உருவெடுத்தது.

இலங்கையில் மதிப்புக்கூட்டு வரியை அதிகரிக்க போடப்பட்டுள்ள தீர்மானத்தை கண்டித்து தென் மாகாணத்தில் காலி நகரில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மாவட்ட சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டம் காரணமாக நகரில் வியாபார நடவடிக்கைகள் முழுமையாக தடைபட்டதன.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி மாவட்ட வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஹேமந்த கமகே, பொது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு காரணமாக பொது மக்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக மக்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த ஹேமந்த கமகே, இதன் மூலம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு போராட்டம் அல்ல என்று கூறிய ஹேமந்த கமகே, இந்த வரி அதிகரிப்பு காரணமாக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்துக் குழப்பங்களையும் தீர்ப்பதற்காக வாக்குறுதியளித்து  ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். குழப்பங்கள் எவையும் தீர்க்கப்படாது, புதுப் புது குழப்பங்கள்    வரிசை கட்டி வந்துகொண்டிருக்கிறது. பிரதமர் ரணிலின் தலைக்கு மேலே 21 எனும் கத்தி தொங்குகிறது.இவை எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றல்      ரணிலுக்கு இருக்கிறதா என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலாக இருக்கிறது.

No comments: