Wednesday, June 15, 2022

கோடிகளில் உயர்ந்தது ஐபிஎல் இன் மதிப்பு

ஐ.பி.எல்-ன்  அடுத்த 5 சீசன்களுக்கு  ஒரு போட்டியின் மதிப்பு ரூ.107 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. தொலைக்காட்சி உரிமத்தைவிட டிஜிட்டல் உரிமம் ரூ.187 கோடி ரூபாய் அதிகமாக வியாபாரம் ஆகியிருக்கிறது.

பெரு நிறுவனங்கள் பலவும் முட்டி மோதிக் கொண்டிருந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஐந்து சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமம் 48,390 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. மலைப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்திருக்கும் இந்த வியாபாரத்தின் மூலம், உலகளவில் அதிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடர்களின் பட்டியலில் அமெரிக்காவின் நஷனல்  புட்போல்  லீக்குக்கு   அடுத்த இரண்டாம் இடத்தை ஐ.பி.எல் எட்டியிருக்கிறது.

2008-ம் ஆண்டில் ஐ.பி.எல் முதன்முதலாக தொடங்கப்பட்ட போது முதல் 10 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனமே வாங்கியிருந்தது. 10 சீசன்களுக்காக அந்த நிறுவனம் கொடுத்த தொகை ரூ.8,200 கோடி மட்டுமே. 2008 முதல் 2017 வரையிலான இந்த 10 ஆண்டுகளில் ஐ.பி.எல் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றது. கோடை விடுமுறையில் ஏப்ரல் - மே இரண்டு மாதங்களில் ஐ.பி.எல்தான் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும். சோனியின் ஒளிபரப்பு உரிமம் 2017-ல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அடுத்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்பதற்கான ஏலத்தை நடத்தியது. 2017 - 2022 வரையிலான இந்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமையை ரூ.16,346 கோடி கொடுத்து ஸ்டார் குழுமம் வாங்கியிருந்தது. தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல் டிஜிட்டல் உரிமமும் இதனுள் அடக்கமாகியிருந்தது. அதனுடைய மதிப்பு ஏறக்குறைய ரூ.3,900 கோடி.

ஸ்டார் குழுமத்தின் வசம் இருந்த ஒளிபரப்பு உரிமம் சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்த 15வது சீசனோடு காலாவதியான நிலையில், அடுத்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்பதற்கான வேலைகளில் பிசிசிஐ இறங்கியது. இந்த 15 ஆண்டுகளில் ஐ.பி.எல் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் இதனைச் சுற்றிய வர்த்தகமும் எப்போதுமே ஏறுமுகத்தில்தான் இருந்தது. இதனால் வரவருக்கும் 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமம் எதிர்பார்த்திடாத மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டது.

அதற்கேற்ற வகையில் இந்த முறை ஏலத்திற்கான நடைமுறையிலும் சில மாற்றங்களை பிசிசிஐ செய்திருந்தது. இதன்படி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புகளுக்கான உரிமங்கள் தனித்தனியாக ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் தனி. இதுபோக, குறிப்பிட்ட சில போட்டிகளை மட்டும் டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான உரிமம் எனத் தனித்தனியாக நான்கு உரிமங்களுக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இவர்கள் போக கடைசி 5 சீசன்களை ஒளிபரப்பியிருக்கும் ஸ்டார் குழுமம், முதல் 10 சீசன்களை ஒளிபரப்பியிருந்த சோனி நிறுவனம் மற்றும் ஜீ நிறுவனம் ஆகியவையும் கோதாவில் இறங்கியிருந்தன. 

நான்கு விதமான உரிமங்களுக்கும் சேர்த்து அடிப்படை விலையாக ரூ.32,890 கோடியை நிர்ணயித்திருந்தது பிசிசிஐ. ரூ.45,000 கோடி அளவுக்கு இந்த உரிமங்கள் விலைபோகும் என பிசிசிஐ எதிர்பார்த்தது. பெரு நிறுவனங்கள் பலவும் முட்டி மோதுவதால் ரூ.60,000 கோடி வரைக்குமே கூட விலைபோகலாம் எனப் பலராலும் கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான், ஏலம் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அமேசான் நிறுவனம் ஏல நிகழ்விலிருந்து பின் வாங்கியது. போட்டி கடுமையாக இருக்கும் சூழலில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டி வந்தால் அந்த முதலீட்டை மீட்டெடுத்து லாபம் பார்ப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் அமேசான் வெளியேறியதாக தகவல்கள் கசிந்திருந்தன. 

1) Package A என்றழைக்கப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.23,575 கோடிக்கு ஸ்டார் குழுமமே வாங்கி தங்களின் உரிமத்தைத் தக்கவைத்திருக்கிறது.

2) Package B ஆன டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு Viacom 18 நிறுவனம் வாங்கியிருக்கிறது.

3) சீசனின் முதல் போட்டி, ப்ளே ஆஃப்ஸ் மற்றும் மாலை நேர போட்டிகள் என சீசனுக்கு 18 போட்டிகளை மட்டும் ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் உரிமமான Package C யையும் Viacom 18 நிறுவனமே ரூ.3,258 கோடிக்கு வாங்கியிருக்கிறது.

4) Package D ஆன மற்ற நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை 1,057 கோடிக்கு Viacom 18 மற்றும் டைம்ஸ் குழுமம் வாங்கியிருக்கின்றன.


No comments: