உலகக் கிண்ண குரூப் L போட்டியில் கானாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கிண்ணத்தின் கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை.
உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இரண்டு போட்டிகளில் இருந்து இங்கிலாந்தும் கானாவும் தற்போது தலா நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து 'L' பிரிவில் முன்னிலை வகிக்கிறது.

No comments:
Post a Comment