உலகக் கிண்ணத் தொடரின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான
லீக் போட்டியில், கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வீழ்த்தியது.
இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கனடா அணி தனது உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதன்முறையாக
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ்
மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே மிகுந்த எச்சரிக்கையுடன்
விளையாடின. இதனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. சுவிஸ்
கேப்டன் கிரானிட் ஷாகா மற்றும் கனடா வீரர் கைல் லாரின் இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல்
காரணமாக இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
இரண்டாவது
பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி
கோல் அடித்து சுவிஸ் அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அடுத்த 11வது நிமிடத்தில் இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி, பந்தை கோல் போஸ்ட்டிற்குள்
அனுப்பி சுவிட்சர்லாந்தின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இதற்கிடையில், ஆட்டத்தின்
76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய கனடாவின் பிராமிஸ் டேவிட், தான் விளையாடிய
முதல் பந்திலேயே அபாரமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். சுவிட்சர்லாந்து 2 - 1 என வெற்றி பெற்றது. இந்த
வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்று
அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே பிரிவில் கனடா அணி இரண்டாவது இடம் பிடித்து
தனது உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக
அடுத்த சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

No comments:
Post a Comment