Thursday, June 25, 2026

அதிர்ச்சியளித்த ஹெய்ட்டி மீண்டு வந்த மொராக்கோ


   உலகக் கிண்ணத் தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹெய்ட்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ அணி, குரூப் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய போதிலும், ஹெய்ட்டி அணி இப்போட்டியில் மொராக்கோவுக்கு கடுமையான சவாலை அளித்தது.

இந்த ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே ஹெய்ட்டி வீசிய பந்து, துரதிர்ஷ்டவசமாக மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ மீது பட்டு ஓன் கோலாக (Own Goal) மாறியது.   39வது நிமிடத்தில் அதன் கப்டன் அஷ்ரப் ஹகிமி கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஹெய்தியின் வில்சன் இசிடோர் தூரத்திலிருந்து ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 2-1 என மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

 43வது நிமிடத்தில் ஹகிமி கொடுத்த பாஸை இஸ்மாயில் சைபாரி கோலாக மாற்ற, முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. சைபாரிக்கு இது நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ந்து 3வது கோலாகும்.   78வது நிமிடத்தில் மொராக்கோவின் மாற்று வீரர் சுஃபியான் ரஹிமி ஒரு கோல் அடித்து அணியை முதன்முறையாக 3-2 என முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 20 வயதான கெசிம் யாசின் மற்றொரு கோல் அடிக்க, மொராக்கோ அணி 4-2 என்ற கணக்கில் திரில் வெற்றியை உறுதி செய்தது. இந்த கோல் போஸ்ட்டின் எல்லையைக் கடந்ததா என்ற சர்ச்சை எழுந்த போதிலும், 'வார்' தொழில்நுட்ப சோதனையின் மூலம் கோல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி 7 புள்ளிகளுடன் குரூப் சி பிரிவில் 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பிறேஸில் அணி அதே 7 புள்ளிகளுடன் சிறந்த கோல் அடிப்படையில் முதலிடம் பிடித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்  கிண்ணத்தில்  விளையாடிய ஹெய்தி அணி புள்ளிகள் ஏதுமின்றி வெளியேறினாலும், தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை வென்றது.

 


No comments: