Wednesday, June 17, 2026

உலககக் கிண்ணத்தில் மெஸ்ஸியின் சாதனைகள்

அல்ஜீரியாவுக்கு எதிரான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் பல சாதனைகளைச் செய்துள்ளார்.

 உலகக்  கிண்ண உதைபந்தாட்ட  வரலாற்றில் 6வது முறையாகக் களமிறங்கிய முதல் ஆண் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

ஆறாவது உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட ரொனால்டோவும் தயாராக  இருக்கிறார்.

 அல்ஜீரியாவுக்கு எதிரான  போட்டியில் ட்ரிக் கோல் அடித்து புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் ஆர்ஜென்ரீனா அணி 3 - 0 என அல்ஜீரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

  17வது நிமிடத்தில்   அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கொடுத்த பாஸை பெற்றுக்கொண்ட அவர், இடது காலால் பந்தை லாவகமாக வளைத்து அல்ஜீரியா கோல்கீப்பர் லூகா ஜிடேனை ஏமாற்றி கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பினார். உலகக் கிண்ணத் தொடரில் 13 கோல்களுடன் களம் இறங்கிய  மெஸ்ஸி 14 கோல்களுடன் இருந்த எம்பாப்பே, கெர்ட் முல்லர் ஆகியோரின் சாதனையைச்  சமன் செய்தார்.

 60வது நிமிடத்தில் தனது 2வது கோலை வலது காலால் அடித்தார்.எம்பாப்பே, கெர்ட் முல்லர் ஆகியோரின் சாதனைகளை முறியடித்து 15 கோல்களுடன் இருந்த பிறேஸிலின் ரொனால்டோவின் சாதனையைச் சமப்படுத்தினார்.

  77வது நிமிடத்தில் தனது 3வது கோலை வலது காலால் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹட்ரிக் கோலை பதிவு செய்தார். இந்த ஹட்ரிக் கோல்கள் மூலம் உலகக் கோப்பை அரங்கில் மெஸ்ஸியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ரொனால்டோவின் சாதனையை முறியடித்து  ய்லகக்கிண்ணத் தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜேர்மனியின்  மிரோஸ்லாவ் குளோசேயின் 16 கோல்கள் என்ற  உலக சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

எம்பாப்வே 14 கோல்களுடன் மிக அருகாமையில் இருப்பதால் மெஸ்ஸியின்  சாதனைக்கு சவாலாக உள்ளது.

இப்போட்டியில் அடித்த முதல் கோல் மூலம், உலகக்  கிண்ண வரலாற்றில் பெனால்டி பொக்ஸிற்கு வெளியிலிருந்து 5 கோல்கள் அடித்த பிறேஸில் ஜாம்பவான் ரிவெலினோவின் சாதனையும் மெஸ்ஸி சமன் செய்தார்.

, அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பையில் கோல் அடித்த மிகக் குறைந்த வயது மற்றும் மிக மூத்த வயது வீரர் என்ற இரட்டைப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தனது 19வது வயதில் 2006 உலகக் கிண்ணப் போட்டியில்  முதல் கோல் அடித்த மெஸ்ஸி, 20 ஆண்டுகள் கடந்து தனது 39வது வயதிலும் 6வது உலகக்  கிண்ணத் தொடரில் விளையாடி தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

 2022 உலகக் கிண்ணப்போட்டியுடன் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு உலகக்  கிண்ணத்திலும்  ஆர்ஜென்டீனாவை கம்பீரமாக வழிநடத்தி வருகிறார்.

மெஸ்ஸியின் உலகக்கிண்ணப் பாதை,

𝟐𝟎𝟎𝟔  ஜேர்மனி,𝟐𝟎𝟏𝟎  தென் ஆபிரிக்கா,𝟐𝟎𝟏𝟒   பிறேஸில்,𝟐𝟎𝟏𝟖  ரஷ்யா, 𝟐𝟎𝟐𝟐  கட்டார்,2026 அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ

 

No comments: