Friday, April 8, 2022

போராட்டங்களால் திக்கித் திணறும் இலங்கை

யுத்தத்தால் அச்சத்துடன்  வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையை எற்படுத்தியபோது, சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதாக  உறுதிமொழி எடுத்து பதவி ஏற்ற போது  பாராட்டி வாழ்த்தியவர்கள் இன்று  வெளியேறு எனக் கோஷமிடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற கோட்பாடு அரசியலுக்கும் பொருந்தும். இனப் பிரச்சினை முன்னிலைப் படுத்தப்பட்டதனால் இலங்கை அரசியல் சவாரி வெகு ஜோராகப் போய்க்கொண்டிருந்தது.இல்லாமையும், இயலாமையும்  இலங்கை அரசியலைப் புரட்டிப்போட்டுவிட்டன.

அரசாங்கத்துகு எதிராக எதிர்க் கட்சிகள்  போராட்டங்களை நடத்தின. அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். மற்றையவர்கள் புதினம் பார்த்தனர். எதிர்க் கட்சிகள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்திய போது யாருடைய  போராட்டத்தில் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள் என்ற விவாதம்  அரங்கேறியது.

இலங்கை அரசுக்கு எதிராக வடக்கு  கிழக்கில் நடைபெற்ற  போராட்டங்கள் எவையும் சிங்கள மக்களின்  கவனத்துக்குச் செல்லவில்லை. உள்நாட்டு யுத்தம் நடந்தபோது காணாமல் போனவர்களைத் தேடி அலையும்  உறவினர்கள் நடத்தும் போராட்டங்களை அரசுதரப்பு கண்டுகொள்வதில்லை. அந்த இழப்புகளைக் கடந்து போய்விட வேண்டும் என்பதிலேயே அரசுதரப்பு  உறுதியாக நிற்கிறது.

மரணங்கள் மலிந்த பூமியாக இருந்த இலங்கைபோராட்டம், ஆர்ப்பாட்டம் நிறைந்த பூமியாக மாறிவிட்டது. சர்வ அதிகாரத்துடனான நிறைவேற்று அதிகாரம்  நிறைந்த ஜனாதிபதிக்கு எதிராக மக்கள்  கிளர்ந்து எழுந்த போது உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்ட ரட்சகரின் வீட்டுக்கு முன்னால் கூடிய மக்களின் ஆவேசக்குரல்கள்  உலகெங்கும்  எதிரொலித்தன. எது நடக்காது என அரசாங்கம் நம்பி இருந்ததோ அது கனகச்சிதமாக நடந்து விட்டது.  அரசாங்கத்தின் மீதிருந்த மக்களின் கோபம் ஜனாதிபதியின் பக்கம் திரும்பிவிட்டது. "கோ கோத்தா கோ கோம்" என்ற  முழக்கம் விண்ணை எட்டியது. ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள், பாராலுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வீடுகள் மக்களால் முற்றுகையிடப்பட்டன.

யாரும் அழைக்காமல் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் போராட்டங்கள் நடைபெறுகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை இரவு பகலாகப் போராட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். ஜனாதிபதி வீட்டுக்குப் போக வேன்டும், இந்த அரசாங்கம் பதவி விலக வேன்டும் என மக்கள் கோஷமிடுகிறார்கள். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம்  ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்தான் உள்ளது. இன்றைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முன்வரமாட்டார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தனித்து இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். பிரதமரைத் தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற அலிசப்ரி அச்சடித்த  மைகாய்வதற்கிடையில் இராஜினாமாச் செய்துவிட்டார். முக்கிய அதிகாரிகள் தமது பதவிகளை  இராஜினாமாச் செய்துள்ளனர். ஒரு சில முக்கியஸ்தர்களின்  குடும்பம் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.

வெளிநாட்டுச் செய்திகளில் பார்த்த சம்பவங்கள் நம் நாட்டில் அரங்கேறுகின்றன. இப்படி ஒரு நிலை இலங்கைக்கு வரும் என யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஜனாதிபதி பதவி விலகினால் அல்லது  புதிய அரசாங்கம் பதவி ஏற்றால் உடனடியாக நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. அரசங்கத்தின் மீதான மக்களின் கோபம்தான் போராட்டத்துக்கான  உந்து சக்தியைக் கொடுத்துள்ளது.

 

No comments: