Sunday, April 24, 2022

அமைதியான போராட்டத்தை சீர்குலைத்த துப்பாக்கிச் சத்தம்


 இந்து சமுத்திரத்தின் அழகிய முத்தான  இலங்கை இன்று கறைபடிந்து காட்சியளிக்கிறது.  பசிவந்தால் பத்தும் பறந்துபோம் என்றார் தமிழ்ப் பாட்டி ஒளவையார். அடுத்து என்ன செய்வதென அறியாது தவித்து நிற்கும் மக்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கப்படுகிறது. இலங்கையைப் பற்ரிய ஊடகச் செய்திகள் அனைத்திலும்   ஜனாதிபதி கோத்தாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ராஜபக்ஷ குடும்பம் அரசிலலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோஷம் எதிரொலிக்கிறது. அரசாங்கத்தின் மீதிருந்த மக்களின் கோபம் ஜனாதிபதியின் மீதும் குடும்ப அரசியலில்ன் மீதும் திரும்பியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய பதவியில் இருந்து விலகினால், ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் இருந்து வெளியேறினால்  இலங்கையில் நிலவும்  பொருளாதாரப் பிரச்சினை உடனடியாகத் தீர்ந்து விடாது என்பதை போராட்டம் செய்பவர்கள் நன்கு அறிந்துள்ளனர். அரசாங்கத்துக்கு  உறுதுணையாக இருந்த அமைச்சர்களையும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும், கட்சிமாறி கை  உயர்த்தியவர்களையும்  போராட்டக் காரர்கள்  இப்போதைக்கு கவனத்தில் எடுக்கவில்லை. அடுத்த தேர்தலில் அவர்கள் விஷப் பரீட்சையை எதிர் நோக்க  வேண்டிய நிலை ஏற்படும்.

கோல் பேஸில்  ஒலிக்கும் வெகுஜனப் போராட்டக் காரர்களின்  குரல் உலகெங்கும்  கேட்கிறது. ஆனால், ஜனாதிபதியின் காதுகளில் மட்டும்  கேட்கவில்லை. இன்றைய பிரச்சினைகளுக்கு 20 ஆவது திருத்தச் சட்டம்தான் காரணம் என நினைக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, 19வது திருத்தத்தை  வேறு வடிவில் அமுல் படுத்த நினைக்கிறார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு,  பிரதமரின்  கையில் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ விரும்புகிறார். அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் செல்வதை  இன்றைய நிலையில் பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை.

மிகக் குறுகிய காலத்தில் 17 ஆவது, 18 ஆவது, 19 ஆவது, 20 ஆவது திருத்தச் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நான்கு திருத்தங்களுக்கும் ஆதரவாகக் கை உயர்த்தினார்கள்.  சிலருக்கு  காலம் கடந்த பின்னர் ஞானம் பிறந்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்  கோல் பேஸில் இரன்டு வாரங்கள் கடந்து அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நாடு பூராகவும் போராட்டங்கள்  முன்னெடுக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மக்களை வாட்டி வதைக்கிறது.  சமையல் எரிவாயு, எரிபொருள்  போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அரசுக்கெதிரான போராட்டம்  நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் நடைபெறுகின்றன.

போராட்டத்தின் உச்சக் கட்டமாக ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அமைந்துள்ளது.  ஒரு உயிர் பறிக்கபப்ட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்தவர்  ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்பது ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. " எனக்கு நிதி வேண்டாம் நீதி வேண்டும்" என கொல்லப்பட்டவரின் மகள்  கொடுத்த  குரல் தமிழ் மக்களின் குரலாக எதிரொலித்துள்ளது.

ரம்புக்கணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆளும் கட்சிக்கு முண்டு கொடுத்த அரசியல் வாதிகள்  கண்டித்து அறிக்கை விடுக்கின்றனர். இலங்கையின்  பிரபலமானவர்கள்  பொறுத்தது போதும் என்று முடிவு செய்த  போராட்டக் களத்துக்குச் சென்று ஆதரவு தெரிவிக்கின்றனர். 

இனவாதம் இனி மேல் இலங்கையில் எடுபடுவது சந்தேகம். தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என முடிவெடுக்கப்பட்ட கோல்பேஸில்  சிங்கள மக்கள் தமிழில் தேசிய கீதம் பாடினார்கள். இலங்கை அரசாங்கத்தை, இலங்கை ஜனாதிபதியை, இலங்கைப் பிரதமரை  சிங்கள மக்களுடன் இணைந்து தமிழ் மக்களும்  சேர்ந்து தெரிவு செய்யும் காலம்  உருவாக வேண்டும்.

மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்தால் நாட்டில் சுபீட்சம் உண்டாகும். மக்களின் போரட்டத்தை அடக்க முயன்றால் அது  அரசியலுக்கு ஆபத்தானது.

 

No comments: