இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்தார். அதன் காரணமாக பாண்டியா ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட வேளையில் அவரது செயல்பாடு மீது விமர்சனங்கள் எழுந்தது. அதோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ரி20 உலக கோப்பை தொடரிலும் அவர் பந்து வீசாததால் பெரிய சர்ச்சை வெடிக்கவே தான் மீண்டும் எப்போது பந்து வீசும் அளவிற்கு தயாராகிறேனோ அப்போது இந்திய அணியில் என்னை தேர்வு செய்யுங்கள் என்று அதிரடியான ஒரு கருத்தை வெளியிட்டு அணியில் இருந்து வெளியேறினார். பின்னர் பாண்டியா தற்போது தீவிர பயிற்சிக்குப் பிறகு பந்துவீசும் அளவிற்கு தயாராகி உள்ளார். ஆல்-ரவுண்டராக இருந்த ஹர்டிக் பண்டியா பந்துவீசாததன் காரணமாக மும்பை அணி அவர்களது அணியில் இருந்து அவரை வெளியேற்றியது. ஆனால் மெகா ஏலத்திற்கு முன்பாக ஹர்டிக் பண்டியாவை வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை கப்டனாகவும் நியமித்து நடப்பு தொடரில் விளையாடி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் துடுப்பாட்டம்,பந்துவீச்சு,களத்தடுப்பு
என அனைத்திலுமே பாண்டியா அசத்தி வருகிறார். குறிப்பாக பேட்டிங்கில் முன்பெல்லாம் பினிஷிங்
ரோலில் களமிறங்கும் அவர் தற்போது டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடி வருகிறார். அதிலும்
குறிப்பாக மூன்றாம் இடத்தில் களம் இறங்கி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 8 போட்டிகளில் அவர் மூன்று அரைசதங்களையும் குஜராத் அணிக்காக
அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில்ரி20 கிரிக்கெட்டில் தான் பேட்டிங் செய்ய விரும்பும்
இடம் எது என்பது குறித்து தற்போது பாண்டியா தனது வெளிப்படையான கருத்தினை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்
ரி20
கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும் என்பது என் கனவு. மும்பை அணிக்காக
2016-ஆம் ஆண்டு சில போட்டிகளில் நான் மூன்றாம் இடத்தில் களம் இறக்கப்பட்டேன். ஆனால்
அப்போது என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் இந்த தொடரில் நான் அந்த விஷயத்தை
சிறப்பாக செய்து காட்ட நினைக்கிறேன். தற்போது
வரை நடைபெற்ற போட்டிகளின் படி நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இனிவரும்
போட்டிகளிலும் என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எங்களது
அணியில் கில் ஆட்டம் இழந்து விட்டால் என்னுடைய பேட்டிங் வேறுமாதிரி இருக்கும். அதே
அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றால் வேறு மாதிரி இருக்கும். இப்படி சூழ்நிலைகளைப்
புரிந்து கொண்டு அணியின் கப்டனாக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.
நான் பேட்டிங் செய்யும்போது பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் ப்ராப்பர் கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாட விரும்புகிறேன். இதுவரை என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து விளையாடி வருகிறேன். இனியும் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து விளையாட ஆசை என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment