Saturday, April 9, 2022

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் உஷாரான இந்தியா


 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தின் குரல் மெல்ல ஒலிக்கத்தொடங்கியுள்ளது. அதற்கு காரணமாக மாநில அரசின் தன்னிச்சை முடிவுகளை மத்திய அரசு கைக் காட்டத்தொடங்கி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதைப்  போன்ற பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் உருவாகும் என்று பிரதமர் மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் கால வாக்குறுதிகளில் இலவசங்கள்  முதலிடம் பிடிக்கின்றன. இலவசத்தால் கவரப்பட்ட வாக்காளர்கள் தேர்தலின்  முடிவை மாற்றி அமைக்கின்றனர்.  அந்த இலவசப் பொருள் கிடைப்பதற்காக எதனை அரசு இழக்கப்போகிறது என்பதை வாக்காளர்கள் அறியமாட்டார்கள்.

 மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்த மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்கள், பொருளாதார ரீதியாக மீள முடியாதவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநிலங்களின் இதுமாதிரியான திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள், பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்துள்ளனர். பொருளாதார திட்டங்கள், மாநில அரசின் உரிமைகள், வரிச்சுமை, ஏற்றுமதி - இறக்குமதி உற்பத்தி நிர்வாகம் ஆகியவை ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்றாலும், இதையெல்லாம் தாண்டிய ‘ஒன்றை இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ளுமா உலக நாடுகள்.

சீரழிந்த ஒரு நாட்டைக் கை காட்டுவதற்கு உதாரணமாக இலங்கை ஆகிவிட்டது. பொருளாதார நெருக்கடியில் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்ட இலங்கையின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. இங்கு வாழும் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒரு தேசத்திற்கு இந்த நிலை எப்போதும் வரக்கூடாது. வெறும் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்ய - உக்ரைன் போர் மட்டுமே முழுமையாக இதற்கு காரணம் என சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தத்துவ நிலைப்பாடும், அரசியல் அமைப்புச் சட்டமும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆளுமைகளும், தலைமைகளுமே ஒரு தேசத்தின் தரத்தை நிர்மாணிக்கின்றன. இவையெல்லாம் சாத்தியமாயிற்றா   அத்தகைய சூழலை வளர்த்து எடுத்ததா இலங்கை என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது.

- ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பேரா.நா.மணியிடம் இலவசங்கள் பற்றிய அத்தனைக் கேள்விகLukkum  pathilaLiththuLLaar.  அவர் கூறியதிலிருந்து, "நான் இந்தக் கேள்விக்கான பதிலை நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை ஜோசப் ஸ்ட்கிலிட்ஸை மேற்கோள் காட்டி ஆரம்பிக்க விரும்புகிறேன். உலகமயமாக்கலுக்குப் பின்னர் பொருளாதார திட்டமிடுதல்கள் 1% மக்களுக்காக 1% மக்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற பார்வையை முன்வைத்தார். அவர் கூற்றின் சாட்சியை ஏழை, பணக்கார ஏற்றத்தாழ்வில் நாம் காண முடிகிறது. பொருளாதார திட்டமிடலின் குவியம் குறைந்திருப்பதையே அவர் வெளிப்படையாக சொல்லியிருந்தார்.

இந்தப் பின்னணியில் இருந்து நாம் இலவசங்களைப் பார்ப்போம். ஏழைகளிடம் வேலைவாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை என்ற சூழலில் இலவசங்கள் அவர்களுக்கு முக்கியமாகிறது. தரமான சுகாதாரம், தரமான கல்வி, வேலைக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இவற்றை ஒரு 'நல அரசு' மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த மூன்றும் இப்போது காசு கொடுத்தே வாங்கும் சூழலில் உள்ளது. இந்த மாதிரியான சூழலில், ஏழைகள் இலவசமாக எது கிடைத்தாலும் சரி என்ற நிலைக்கு வருகின்றனர். ஆனால் இந்த இலவசங்கள் மீது நாம் தொடர்ந்து கேள்விகளை முன்வைக்கின்றோம். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் வரிச் சலுகை அறிவிக்கப்படுகிறது; அதை எந்த ஒரு கார்ப்பரேட்டும் இலவசம் என்று சொல்வதில்லை. அதைப் பெறுவதற்கு எவ்வளவு லாபி பண்ண முடியுமோ, அவ்வளவு லாபி செய்கிறார்கள். அப்படி வரிவிலக்கு பெறும் பெரு நிறுவனங்கள் எல்லாம் உற்பத்தியை அதிகரித்து, வேலைவாய்ப்பை அதிகரிக்கிறதா என்றால் அது தனியான விவாதப் பொருளாகவே நீளும்.

ஆனால், ஏழை மக்கள் வாங்கும் இலவசப் பொருட்களின் மீது சுயமரியாதை சாயத்தை சிலர் பூச முற்படுகின்றனர். இலவசங்களை அதனாலேயே இப்போது விலையில்லா பொருட்கள் எனக் கூறுகின்றோம். ஆனால், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் இங்கு இலவசம் என்று எதுவுமே இல்லை. இலவசங்களை விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் கார்ப்பரேட்டுகளையும் கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?

கரோனா நெருக்கடி காலத்தில் அரிசியிலிருந்து ரேஷனில் கொடுக்கப்பட்ட அத்தனை இலவசப் பொருட்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இலவசங்களை எல்லாம் விற்கிறார்களா? எல்லாவற்றையும் குடிக்கிறார்களா? என்ற தரவுகள் இல்லை. ஆனாலும் நாம் இலவசங்கள் வீண் என்று பொதுமைப்படுத்துகிறோம். இலவசங்களின் தாக்கங்களை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும். சந்தைப் பொருளாதாரம் சீராக திறம்பட செயல்பட வேண்டும், முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாகிறதா என்று கவனிக்க வேண்டும், கல்வி, சுகாதாரம், திறன் மேப்பாட்டு பயிற்சிகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை எல்லாம் நோக்கி நகர்வதுதான் நல் அரசு. ஆனால், இதை ஒரே நாளில் செய்ய முடியாது. இது ஊழலற்ற ஆட்சியால் உறுதி செய்ய முடியும். அப்படியான சூழல் உருவாகும்போது இலவசங்களுக்கான ஆதரவு படிப்படியாக ஒழியும். இலவசங்களால் பொருளாதாரம் வீழ்ந்துவிடாது. பொருளாதாரத்தை சீர்படுத்தினால் இலவசங்களுக்கான தேவையே இருக்காது. இலவசங்கள்.. இலவசங்கள் என்று எள்ளி நகையாடுவதே அதை வாங்கும் சமூகம் அதைப் பெற கூனிக்குறுக வேண்டும் என்று கொச்சைப்படுத்தும் செயல்" என்று கூறினார்.

இலங்கை அரசியலில் இலவசங்களுக்கு இடம் இல்லை. ஆனால், நாட்டீன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு உரிய காரணங்கள் என்ன என்பதை உலக நாடுகள்  பட்டியலிட்டுள்ளன. இலங்கை செய்த தவறைல் இருந்து உலக நாடுகள் பட்டறிவு பெற்றுள்ளன.இந்திய அரசியலில் இலவசங்களைத் தடை செய்வதற்கு  மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிலை தோன்றியுள்ளது.

 

No comments: