Tuesday, April 26, 2022

ஐ.பி.எல் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள்

மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் திகதி கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான  நடைபெற்று வருகிறது. பொதுவாகவே ஐபிஎல் என்றாலே அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிடும் வீரர்கள்  மைதானத்தில் ரன் மழை பொழிந்து தங்களது அணிகளுக்கு வெற்றிகளை தேடித் தருவார்கள். அதில் ஒருசிலர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சதமடித்து வெற்றியைத் தேடித் தருவார்கள்.   இந்த வருடம் அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 தொடரில்   30 போட்டிகள் முடிந்துள்ள நிலையில்  மூன்று  சதங்கள் அடிக்கப்பட்டுவிட்டன.

ராஜஸ்தானுக்காக விளையாடி வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் இரண்டு  சதங்களை தெறிக்கவிட்டு ஒரேஞ் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.  லக்னோவின் கப்டனாக விளையாடும் இந்திய நட்சத்திரம் கேஎல் ராகுல் ஒரு சதமடித்துள்ளார்.

  கிறிஸ் கெயில்:

 ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் சூறாவளியாக சுழன்று அடித்து வந்த கிறிஸ் கெயில் எனும் புயல் 40 வயதை கடந்து விட்டதால் கடந்த வருடத்துடன் ஓய்ந்தது. கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகளுக்காக விளையாடிய அவர் 142 போட்டிகளில் 4965 ஓட்டக்ன்களை குவித்து தன்னை ஒரு ஜாம்பவான் என நிரூபித்துள்ளார்.இதில் 405 பவுண்டரிகள் 350 சிக்ஸர்கள் என எதிரணி பந்துவீச்சாளர்களைப் புரட்டி எடுத்த அவர் மொத்தம் ஆறு சதங்களை அடித்து இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார். அதிலும் கடந்த 2011-ஆம் ஆண்டு புனேக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழ்க்காது  175  ஓட்டங்களை தெறிக்கவிட்ட அவர் ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்தவர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.

  விராட் கோலி:

6402 ஓட்டங்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி ஐந்து  சதங்களை அடித்து இந்தப் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிலும் 2016-ஆம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர் ஒரே சீசனில் 5 சதங்களையும் விளாசியதுடன் 973 ஓட்டங்களைக் குவித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ஓட்டங்களையும் சதங்களை அடித்த வீரர்  என்ற உடைக்க முடியாத சாதனையையும் படைத்துள்ளார்.

டேவிட் வார்னர்/ஷேன் வாட்சன்

 ஐபிஎல் தொடரில் 5449 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்  என்ற அற்புதமான சாதனை படைத்துள்ள அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2010-ஆம் ஆண்டு முதல் முறையாக டெல்லி அணிக்காக சதம் அடித்து அதன் பின் 2012, 2017, 2019 ஆகிய வருடங்களிலும் டெல்லி, ஐதராபாத் அணிகளுக்காக மொத்தம் நான்கு  சதங்களை அடித்து இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடிக்கிறார். இதே இடத்தில் மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனும் நான்கு  சதங்களுடன் 3-வது இடம் பிடிக்கிறார். மொத்தம் 145 போட்டிகளில் 3874 ஓட்டங்களை எடுத்துள்ள அவர் 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக சதமடித்தார். குறிப்பாக கடந்த 2018இல் சென்னை அணிக்காக ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் 57 சந்துகளில் அதிரடி சதம் அடித்து 117 ஓட்டங்கள் குவித்த அவர் 3-வது முறையாக சென்னை சம்பியனாக முக்கிய பங்காற்றியதை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.


ஏபி டீ வில்லியர்ஸ்/சஞ்சு சாம்சன்

ஜோஸ் பட்லர்/கேஎல் ராகுல்

 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஏற்கனவே இரண்டு  சதங்களை அடித்துள்ள நிலையில் இந்த வருடம் மும்பைக்கு எதிரான போட்டியில் சதமடித்து 103 [ஆட்டமிழக்காது]ஓட்டங்கள் விளாசி தனது அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் மொத்தம் மூன்றுசதங்கள் அடித்துள்ள அவரும் இந்த பட்டியலில் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தானுக்காக சதமடித்த ஜோஸ் பட்லர் இந்த வருடம் 6 போட்டியில் இரண்டு  சதங்களை அடித்து மொத்தம் மூன்று சதங்களுடன் இந்தப் பட்டியலில் ஒரே வருடத்திலேயே 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வருட மும்பைக்கு எதிராக சதம் அடித்து 100 ஓட்டங்கள் எடுத்த அவர் அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக 103 ஓட்டங்கள் விளாசி தனது 3-வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.

 உலகின் எப்பேர்ப்பட்ட உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்  எவ்வளவு கடினமாக பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்ஸர்களாக பறக்க விடும் திறமை பெற்ற தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் இந்த வருடம் ஓய்வு பெற்றதால் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகும். இருப்பினும் 5162 ஓட்டங்களை 151.68 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் வெளுத்து வாங்கி ரசிகர்களை மகிழ்வித்த அவர் மூன்று  சதங்களை அடித்து இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

சஞ்சு சாம்சன்: கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தானின் கப்டனாகும் அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில் இதுவரை 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மூன்று சதங்களை அடித்து இந்த பட்டியலில் 4-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

இவர்கள்  தவிர இது போக ஷிகர் தவான், அஜிங்கிய ரஹானே, பிரண்டன் மெக்கலம், வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், பென் ஸ்டோக்ஸ், முரளி விஜய், ஹாஷிம் அம்லா போன்ற நட்சத்திரங்களும்   ஐபிஎல் இல்  தலா இரண்டு சதங்களை அடித்து இந்த பட்டியலில் 5-வது இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

No comments: