Saturday, November 18, 2023

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டி

 உலக கிரிக்கெட்டின் புதிய சம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கிண்ண 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் திகதேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐந்து முறை சம்பியனாக அவுஸ்திரேலியாவும், இரண்டு முறை சம்பியனான  இந்தியாவும் சம்பியன்  கிண்ணத்துக்காக  மோத உள்ளன.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் சாகசம் நடைபெறும்.

 ’சூர்யகிரண் அக்ரோபாட்டிக் குழு  இந்திய விமானப்படையின் சார்பில்  விமான சாகசம் நடைபெறும்.   


உலகக்  கிண்ணத்தைக் கைப்பற்றிய பத்து கப்டன்களுக்கும் பிசிசிஐ அதிகாரிகள் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கின்றனர். பாகிஸ்தானின் அணியின் முன்னாள் கப்டனான  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளதால், அவர் இதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இறுதிப்போட்டியை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது சார்பாக அந்நாட்டு துணை பிரதமர் மார்லஸ் வர உள்ளார்.

                      இரு அணிகளின்  மோதல் புள்ளி விபரம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா , அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மொத்தம் 150 போட்டிகள் நடந்துள்ளன.

   இந்தியா   57  போட்டிகளில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா 83 வெற்றிகளுடன் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் உள்ளது.   10 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்தது. ஒருநாள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 8 முறை அவுதிரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 5 முறை மட்டுமே வென்றுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளை பொறுத்தவரை 2003 இறுதிப்போட்டி , 2015 அரையிறுதியில் மோதியபோது இரண்டு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா அணியே வென்று முன்னிலையில் உள்ளது.

                       இந்திய வீரர்களின் செயல்திறன்

இந்தி  ரோஹித் ஷர்மா ஆறு ஒருநாள் போட்டிகளில் 51.16 என்ற சராசரியுடன் 307 ஓட்டங்களை இந்த மைதானத்தில் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும்.

விராட் கோலி இங்கு எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 192  ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.

இந்திய பந்துவீச்சாளர்களில், பிரசித் கிருஷ்ணா இங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 முகமது சிராஜ் நான்கு ஒருநாள் போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளும், அஸ்வின் ரவிச்சந்திரன் மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, அஸ்வின் இந்த மைதானத்தில் 32 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும்.

                   அவுஸ்திரேலியா அணியின் செயல்திறன்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா சிறப்பான சாதனையை படைத்துள்ளது.

அந்த அணி ஆறு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றது.

                  நரேந்திர மோடி மைதானத்தின் புள்ளிவிவரங்கள்

இந்த மைதானத்தில் மொத்தம் 32 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு முதலில் துடுப்பெடுத்தாடிய  அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா தவிர்த்து ஏனைய அணிகள் விளையாடிய போட்டிகளில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக 287 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச  ஓட்டமாகும்.

2006இல் ஸிம்பாப்வே, மேற்கு இந்தியாவுக்கு எதிராக 85 ஓட்டங்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் குறைந்தபட்ச  ஓட்டமாகும்.

பிட்சில் கறுப்பு மண் இருப்பதால், ஆடுகளம் மெதுவாக இருக்கும் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக திரும்பும்.

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்த மைதானத்தில் எந்த அணியும் 300 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகக்  கிண்ணத்தில் நரேந்திர மோடி மைதானம்

 2023   ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இந்த மைதானத்தில் எந்த ஒரு அணியும் 300 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கவில்லை.

இந்த தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 286 ஓட்டங்களே இங்கு அதிகபட்ச ஸ்கோராகும். அந்த போட்டியில் அவுஸ்திரேலியா 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இங்கு ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த புள்ளி விபரங்கள் ஆகும்.

 இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டெவோன் கான்வே 152 ஓட்டங்கள்  எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது.

அவுஸ்திரேலிய அணியில்டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் ஆகியோர் டாப் ஆர்டரில் அதிரடியாக ஓட்டங்களை சேர்க்க தயாராக இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் ஏமாற்றத்தை கொடுத்தால் நங்கூரத்தை போடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் கிளாஸ் பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரை அலங்கரிக்கும் நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அடித்து நொறுக்கி தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஃபினிஷராக இருக்கிறார். இருப்பினும் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் சற்று தடுமாற்றமாக  இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆல் ரவுண்டர்கள் இல்லாத குறையை மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கின்றனர். அதே போல ஆடம் ஜாம்பா சமீபத்திய போட்டிகளில் இந்திய பேவீரர்களுக்குஅ  சவாலை கொடுத்த தரமான ஸ்பின்னராக இருக்கிறார். அவர்களுடன் கப்டன் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் அனுபவமிகுந்த வேகப்பந்து வீச்சார்களாக மிரட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

  இந்திய அணியில் கப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கும் நிலையில் அவருக்கு நிகராக சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை காட்டி வருகிறார். அவர்களுக்கு நிகராக தேவைப்பட்டால் அதிரடியாகவும் நங்கூரமாகவும் விளையாடும் தன்மை கொண்ட உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று நம்பலாம்.

ஸ்ரேயாஸ் ஐயர் , கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் மிடில் ஆர்டரை வலுப்படுத்துகின்றனர்.  ரவீந்திர ஜடேஜா, ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அவுஸ்திரேலியர்களை  தெறிக்க விடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். பொதுவாக அன்றைய நாளில் யார் நல்ல ஃபார்மில் அசத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பார்கள். அந்த வகையில் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோரை விட ஷமி, பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி தற்போது நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு பலமாகும்.

No comments: