Tuesday, November 14, 2023

இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை


 உலகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும், இன்று  நடைபெற உள்ள உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியின் மீது தான் உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியை, நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. இதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ள முதல் அணி எது என்பது தான் தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தின் தன்மை மற்றும் யாருக்கு சாதகாமானது என்பது குறித்து சற்று விரிவாக இங்கு ஆராயலாம்.

துடுப்பாட்டத்துக்குச்  சாதகமான வான்கடே மைதானம்

அளவில் சிறியதான வான்கடே மைதானம் எப்போதுமே துடுப்பாட்ட வீரர்கள்க்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் அதிரடிக்கு பெயர்போன இந்திய மைதானங்களில், வான்கடே மைதானத்திற்கு தனி இடம் உண்டு. பவுண்டரி மற்றும் சிக்சர்கள் என்பது சர்வ சாதாரணமான விஷயமாகும். நடப்பு உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில்  4 லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் 3 போட்டிகளில் முதலில் விளையாடிய அணிகள் 350-க்கும் அதிகமான ஓட்டங்களை எளிதாக குவித்தன. தொடர்ந்து பிரமாண்ட வெற்றிகளையும் பதிவு செய்தன. அவுஸ்திரேலிய அணி மட்டுமே மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமா?

பகல் இரவு ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு, வான்கடே மைதானம் சொர்க்கபுரியாக அமையும். அதேநேரம், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கக் கூடும். சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக ஆடுகளம் செயல்படும். ஆனால், லைன் மற்றும் லெந்தில் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக செயல்பட வேண்டியது அவசியம். காரணம் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு பந்துவீச்சாளர்களை மோசமாக சோதிக்கக் கூடும். சிறிய பவுண்டரி எல்லைகள் என்பதால், பந்துவீச்சாளர்கள் சிறிய தவறு செய்தாலும், பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை எளிதில் விளாச முடியும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சேஸிங்கில் அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் நடத்திய ருத்ரதாண்டவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

போட்டியை தீர்மானிக்கும் முதல் 10 ஓவர்கள்

வான்கடே மைதானத்தில் முதல் இன்னிங்ஸோ அல்லது இரண்டாவது இன்னிங்ஸோ, முதல் 10 ஓவர்களில் பொறுப்பாக விளையாட வேண்டியது மிகவும் முக்கியது. காரணம் இந்த ஆடுகளத்தில் புதிய பந்தை வேகப்பந்து விச்சாளர்கள், இரண்டு பக்கங்களிலும் எளிதில் ஸ்விங் செய்ய முடியும். எனவே, வான்கடே மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால், முதலில் பேட்டிங் செய்தால் பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க வேண்டும். அதுவே, பந்துவீசினால் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் டாப்-ஆர்டரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிரணி மீது அழுத்தத்தை போட்டு இந்தியாவால் வெற்றி பெற முடியும். உதாரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் நிலைத்து நின்று ஆடியதால் தான் ஆப்கானிஸ்தான் அணியால், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதியில் 292 ஓட்டங்கள் வரை சேர்க்க முடிந்தது. அதேபோட்டியில் முதல் 10 ஓவரிலேயே அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மேக்ஸ்வெல் தனது அபார ஆட்டத்தால் வெற்றியை தேடி தந்தார். எனவே, பேட்டிங்கோ, பந்துவிச்சோ முதல் 10 ஓவர்களில் இந்திய அணி கூடுதல் கவனமாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

வான்கடே மைதான புள்ளி விவரங்கள்

வான்கடே மைதானத்தில் இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 14 முறையும், இரண்டாவதாக விளையாடிய அணிகள் 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 261 ஓட்டங்கள். வான்கடே மைதானத்தில் அதிகபட்சமாக தென்னாப்ரிக்கா அணி 438 ஓட்டங்களையும், குறைந்தபட்சமாக இலங்கை அணி 55 ஓட்டங்களையும் பதிவு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 293ஓட்டங்களைவிரட்டியது தான் அதிகபட்சமான சேஸிங்காகும்.

No comments: