Monday, November 6, 2023

இக்கட்டான நிலையில் இலங்கை கிறிக்கெற்


 உலகக்கிண்ண  கிரிக்கெற் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. உலகக்கிண்ண சம்பியன்களுக்கு நெருக்கடி கொடுத்த இலங்கை கிறிக்கெற் அணி நெருக்கடியில் சிக்கி உள்ளது. உலகக்கிண்ணத்தை வெல்வதே  விளையாட்டு வீரர்களின்  இலட்சியம்.

இலங்கையின்  உலகக்கிண்ண சம்பியன் கனவு 1999 ஆம் ஆண்டு நனவானது. அதன்  பின்னர் கிரிக்கெற்  வைரஸ் இலங்கை ரசிகர்களப் பீடித்தது. கிறிக்கெற்  ஜாம்பவான்களைக்கொண்ட கிரிக்கெற் அணிகள்  இலங்கையிடம் வீழ்ந்தன. கிரிக்கெற்றைச் சொல்லொக் கொடுத்தவர்களுக்கு இலங்கை பாடம் எடுத்தது.

இலங்கை கிரிக்கெற் அணியின் சம்பியன்கள்  ஒருவர் பின்  ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர்  அவர்களின் இடத்தை இடத்தை  நிரப்புவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆனாலும்,  இலங்கை பல  போட்டிகளில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ணத் தொடருக்காக ஏனைய அணிகள் தயாரான  போது சரியான  ஒரு  அணியைத் தயார்ப்படுத்த இலங்கை கிரிக்கெற் தவறிவிட்டது. உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிய வேளையில்  கப்டன் மாற்றப் பட்டார். உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு அணியாகப் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லாதது, அத்தகைய போட்டிகளின் தோல்விகளை நேரடியாகப் பாதித்தது.

  வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமிர, மதிஷ பத்திரன, லஹிரு குமார ஆகியோர்  காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு  மாற்ரு வீரர்கள் எவரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 

 னிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் புறக்கணிப்பு காரணமாக அஞ்சலோ மெயூஸ், தினேஷ் சந்திமால் போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை.இலங்கையின் தோல்விக்கு இவை முக்கிய காரணமாகும்.

தற்போதைய இலங்கை கிறிக்கெற் செயற்குழு , தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் படி 2040 இல் கூட உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாத இக்கட்டான நிலையில் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பணத்தை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும், விளையாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தாமல், தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகவும் செயற்குழு பயன்படுத்துகின்ற சூழ்நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவுவுஸ்திரேலியாவில் ரி20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற ஊழல்களும், எல்.பி.எல் போட்டித் தொடரில் அந்நாட்டுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. உலகக் கிண்ணம் போன்ற பொதுவான லட்சியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு, ஆலோசகர்கள் மற்றும் தேர்வுக் குழுவும் எல்.பி.எல் போட்டிகளுக்கு எப்படி ஒப்புக்கொண்டன? எல்.பி.எல் போட்டியை நடத்த வேண்டுமா என அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை அணியின்  மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று  இலங்கை கிரிக்கெட் சபை  உடனடியாக பதவி விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.    இலங்கை கிரிக்கெற் சபைக்கும், விளையாட்டு அமைச்சருக்கும் இடையே  பல பிரச்சனைகள்  உள்ளன. அவை  பூதாகரமாக வெடிக்க  உள்ளன.

    தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மாதாந்த சம்பளமாக 30000 அமெரிக்க டொலர், ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன 20,000 அமெரிக்க டொலர்,    உதவி பயிற்சியாளர் நவீத் நவாஸ் 14,000 அமெரிக்க டாலர்,    முழு பயிற்சி ஊழியர்களுக்கும் மாதந்தோறும் 120,000 அமெரிக்க டாலர்கள் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால்,  கிறிக்கெற்றில் எந்தவிதம்மான  முன்னேற்றமும்  இல்லை. ஜயவர்த்தன இருப்பதால், தலைமைப் பயிற்சியாளர் சில்வர்வுட் வெறும் கைப்பாவை போல் இருக்கிறார் என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.

  இலங்கை கிறிக்கெற்  சபை  தேசிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய காலகட்டம் இருந்தது. , ஆனால், அந்த சகாப்தத்தில் இலங்கை நான்கு உலகக் கிண்ண  இறுதிப் போட்டிகளில் விளையாடியது - ஒன்றில்சம்பியனானது.  ஏனென்றால் அதற்குள் முன்னுரிமை தரமானது. கிரிக்கெட், உருவாக்கப்படும் பணத்தின்   அளவு அல்ல.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்.  போராடித் தோற்பது வெற்றிக்குச் சமானமானது. போராடாமல்  தோற்பது அவமானமானது.  இரண்டு முக்கிய தொடர்களில்  இந்தியாவுக்கு எதிராக  50+  ஓட்டங்கள் என்பது மிக  மோசமான  பெறுபேறாகும்.

கிறிக்கெற் என்பது ஒரு விளையாட்டாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மதமாக இருக்கும் நாட்டில் எப்படி கிறிக்கெற்  இந்த முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று ஒருவர் ஆச்சரியப்படுவார். இலங்கை கிரிக்கெட்   விளையாட்டு அமைப்பு என்ற நிலையைக் கடந்து விட்டது.  இப்போது ஒரு வணிகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுகிறது. 

இலங்கை  கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  மற்றயவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.  கிறிக்கெற்றை நேசிக்கும்  இலங்கை ரசிகர்களின்  எதிர் பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

No comments: