Sunday, November 12, 2023

ஒரு போட்டியில் மக்ஸ்வெல்லின் சாதனைகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த அவுஸ்திரேலியா ஆச்சரியபடும் வகையில் வெற்றி பெற்றதுடன்  பல சாதனைகளையும்  நிலைநாட்டியது.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலகக் கிண்ண வரலாற்றிலும் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை  மக்ஸ்வெல்  படைத்தார். இதற்கு முன் ரோஹித் சர்மா, கெயில் உட்பட அனைவருமே முதலில் துடுப்பாடிய போது தான் இரட்டை சதத்தை அடித்திருந்தார்கள்.

  அத்துடன் 128 பந்துகளில் 201* ஓட்டங்கள் அடித்த அவர் உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (138 பந்துகள்) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார்.

 ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலக கிண்ணத்திலும்   சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் (201*) பதிவு செய்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஸிம்பாப்பேவுக்கு எதிராக பாகிஸ்தானின் பஃக்கர் ஜமான் 193 ஓட்டங்களும் உலகக்  கிண்ணத்தில்  இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூஸ் ஸ்டார்ஸ் 158 (2011இல்) ஓட்டங் கள் அடித்திருந்ததே முந்தைய சாதனைகளாகும்.

   உலகக் கிண்ண  வரலாற்றில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி இரட்டை சதமடித்த முதல் வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1983 உலகக் கிண்ணத்தில் ஸிம்பாபேவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்து திணறிய போது கபில் தேவ் 175*  ஓட்டங் கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

  ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் (149) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் மக்ஸ்வெல் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவுக்கு எதிராக ஸிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் 132 ஓட்டங் கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

 இதுபோக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் எஞ்சிய வீரர்களில் யாருமே 30 ஓட்டங்கள் கூட அடிக்காத போது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1984இல் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 189* ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அவுஸ்திரேலிய வீரர் ஆகிய வரலாற்றையும் மக்ஸ்வெல் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாட அவுஸ்திரேலியா தகுதி பெற்றது.

No comments: