Wednesday, September 1, 2021

ஆப்கானை விட்டு அமெரிக்கா வெளியேறியதால் தலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கானை  விட்டு  அமெரிக்கா  வெளியேறியதால்  தலிபான்கள்  கொண்டாட்டம்

* கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் 1.74 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* இந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்டது 417 இலட்சம் கோடி ரூபாய்

* ஆப்கானில் 2,461 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

* அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களில் 3,846 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளைச் சேர்ந்த 66 ஆயிரம் பேர் பலியாயினர்

* ஆப்கான் மக்களில் 47 ஆயிரத்து 245 பேர் பரிதாபமாக இறந்தனர்

அல்கொய்தா தலைவர்   ஒஸாமா பின்  லேடனைத்தேடி ஆப்கானிஸ்தானுக்குள்   நுழைந்த  அமெரிக்கா  இருபது   வருடங்களின்  பின்னர் அங்கிருந்து   வெளியேறியது. அமெரிக்காவின்  கடைசி  இராணுவ  வீரர்  வெளியேறியதும், தலிபான்கள்  துப்பாக்கியால் சுட்டு  தம்து  மகிழ்ச்சியைக்  கொண்டாடினர். இருபது  வருட  உழைப்பு  வெறும்  பத்து  நாட்களில்  தவிடு  பொடியாகியது.

காபூல்  விமானநிலையத்தை  விட்டு  அமெரிக்கா  வெளியேறியதும் தலிபான்கள்  காபூல்  விமானநிலையத்தைத்  தமது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்தனர்.

காஃபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசி சி -17 விமானம்  காலை 6.56 க்கு வெளியேறியது.   ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவதை  அமெரிக்கா நிறைவு செய்துள்ளது, அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க  இராணுவ வரலாற்றில் ஒரு அத்தியாயம்  மூடப்பட்டுவிட்டது. மிகப்பெரிய தோல்விகள், நிறைவேறாத வாக்குறுதிகள் கடைசி  நேரத்தில்  180 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்க இராணுவத்தினரும் உயிர்களை இழந்த வெறித்தனமான இறுதி வெளியேற்றம்.

ஆப்கானில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவின் கடைசி விமானத்தில் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டோபர் டொனாஹே, ஆப்கனுக்கான பொறுப்பு துாதர் ராஸ் வில்சன்  ஆகியோர் கடைசி நபர்களாக ஏறினர்

கடந்த 15 நாட்களாக நடந்து வந்த மீட்பு நடவடிக்கைகளில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர், வெளிநாட்டவர், ஆப்கானிஸ்தானியர்களை மீட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதேபோல் நட்பு நாடுகளும், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டுள்ளன.

'ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்துள்ளது. விமான நிலையம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி உறுதி செய்யப்படும்,'' என, தலிபான் மூத்த தலைவர் ஹக்மத்துல்லா வாசிக் கூறியுள்ளார்.''அன்னிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது. இது உலக நாடுகளுக்கு ஒரு பாடம்,'' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்பட்டு தலிபான் கட்டுப்பாட்டுக்குள் விமான நிலையம் வந்துள்ளது. ஆனாலும், நாட்டை விட்டு செல்வதற்காக நேற்றும் பலர் விமான நிலையம் அருகே காத்திருந்தனர். அமெரிக்கப்படை  விமான  நிலையத்தை  விட்டு  வெளியேறிய  பின்னர்  தலிபான்களின் முக்கிய  தலைவர்கள்  அங்கு   சென்று  பார்வையிட்டனர்.

ஆப்கானிஸ்தானை    விட்டு தப்பிக்க முயன்றவர்கள் விட்டுச் சென்ற பைகள், கிழிந்த துணிகள் என விமான நிலையமே குப்பை காடாக காட்சியளிக்கிறது. தவிர தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தவர்களின் கார்களும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர்ப்  போத்தல்கள்உணவுப் பொட்டலங்கள்  ஆகியவற்ருடன்  அமெரிக்கர்களுக்கு  உதவிய  நாய்களும் கைவிடப்பட்டுள்ளன.

   அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறும் முன்னர் தங்களின் தளவாடங்களை முழுமையாக எடுத்துச் செல்ல போதுமான நேரம் கிட்டவில்லை. இருப்பினும் தங்கள் நாட்டு இராணுவ தளவாடங்கள் தலிபான்கள் கைக்கு செல்வதை  அவர்கள் தவிர்த்துள்ளனர்.

 சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீக்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போன்றவற்றை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிட்டு தான் அமெரிக்க படையினர் வெளியேறியிருக்கின்றனர்.அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்தில் சினூக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு செல்லும் தலிபான்கள் அவற்றை பார்வையிடும் வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 இதனிடையே இராணுவ தளவாடங்களை செயலிழக்கச் செய்தது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கன்சி, “காபூல் விமான நிலையத்தில் இருக்கும் 73 ராணுவ விமானங்களை அமெரிக்க படையினர் செயலிழக்கச் செய்துவிட்டனர். இனி அவற்றை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது. அவை ஒருபோதும் பறக்காது. அவற்றை யாராலும் பறக்க வைக்கவும் முடியாது. இதே போல 27 ஹம்வீ வாகனங்களும், 74   கவச வாகனங்களும் நிரந்தரமாக பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன‌” என தெரிவித்தார்.கவச வாகனம் ஒன்று மட்டுமே 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது.

 மேலும் இந்த தளவாடங்களை வெடிக்க வைத்து செயலிழக்க வைப்பதை அமெரிக்க படையினர் தவிர்த்து விட்டனர். அப்படிச் செய்திருந்தால் விமான நிலையத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், பயணிகள் விமானங்களை அங்கு இயங்க வைக்கும் முயற்சியாக ராஜ தந்திர வகையில் அமெரிக்க படையினர் செயல்பட்டிருப்பதாக கென்னத் மெக்கன்சி குறிப்பிட்டார்

இதனிடையே காபூல் விமான நிலையத்தில் நிறுவியிருந்த  சி ‍ -ரம்ஸ் எனப்படும் ரொக்கெட் எதிர்ப்பு அமைப்பையும் அமெரிக்க படையினர் செயலிழக்க வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத வகையில் செய்திருக்கின்றனர். அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு கடைசி நிமிடம் முன்பு வரை இந்த ரொக்கெட் எதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தான் .எஸ் அமைப்பினரின் தாக்குதல்களை சில மணி நேரங்கள் முன்பு வரை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்க ராணுவ தளவாடங்கள் செயல்படாத நிலையில் இருப்பதை அறிந்த தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான நிலையத்தை பராமரிக்க தேவையான   உபகரணங்களும்,தொழில்நுட்ப நிபுணர்களும் தலிபான்களிடம் இல்லை. கட்டார் அல்லது துருக்கியின் உதவியுடன்   மீளமைக்கப்படும்  என  தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப்  படைகள்  கைவிட்டுச்  சென்ற  விமானங்களுக்குள்  சென்ற  தலிபான்கள் விமானிகளின்  இருக்கையில்  அமர்ந்து  இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் 200 அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்துக்கு வர முடியாமல் 200 அமெரிக்கர்களும், ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் சிக்கியுள்ளனர்.   காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டதும் அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் கூறியுள்ளார்.

 கடந்த இரண்டு வாரங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்கள் அங்கு இருந்திருந்தால் அனைவரையும் மீட்டிருப்போம் எனவும்  அவர்  மேலும்  தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்கர்களை சாலை மார்க்கமாக மீட்பது குறித்து ஆப்கானின் அண்டை நாடுகளுடனும், தலிபான்களுடனும் பேச்சி  வார்த்தை  நடைபெறுவதாகவும்  ,ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க  தூதரகம் கட்டாரின் தலை  நகர்  டோஹாவில் இருந்து செயற்படும்  எனத்  தெரிய  வருகிறது

அமெரிக்காவின் தோல்விகள் ஏராளம்   இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆயுதங்களை தயார் செய்வதற்கும் அமெரிக்க பில்லியன் டொலர் செலவழித்த போதிலும், கிளர்ச்சியாளர்களை தடுத்து நிறுத்தக்கூடிய ஆப்கான் இராணுவத்தை உருவாக்க முடியவில்லை.

  தலிபான்கள் அரசாங்கத்தை முழுமையாகக் கைப்பற்றியதால் தொடர்ச்சியான பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு இருப்புக்களில் வைத்திருக்கும் பில்லியன் கணக்கானடொலர்களில் பெரும்பான்மையானவை இப்போது அமெரிக்காவில் பிடியில்  உள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பல மாதங்களாக தங்கள் சம்பளத்தை பெறவில்லை என்று கூறுகின்றனர்.

மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.ஆயிரக்கணக்கானோர் மோசமான நிலையில் வாழ்கின்றனர். ஒரு பெரிய வறட்சி நாட்டின் உணவுப் பொருட்களை குறைத்து, அதன் இறக்குமதிகளை மேலும் முக்கியமாக்கி, மக்கள் பசியால் வாடும் அபாயத்தை அதிகரித்துள்ளது

இவற்றை எல்லாம் தலிபான்கள் எப்படிச்  சமாளிக்கப்போகிறார்கள். எந்த  நாட்டில்  இருந்து எப்படியான  உதவியை  எதிர்பார்கிறார்களென்பதை  அவர்கள்தான்  தெளிவுபடுத்த  வேண்டும்.

No comments: