Monday, September 20, 2021

கிறிக்கெற்றின் நுணுக்கங்களை விபரித்த குரல் காற்றில் கலந்தது

மைதானத்தில் நடக்கும் கிறிக்கெற் போட்டியை வர்ணனையால் நமக்குத் தந்த ஜாம்பவான் மைக்கைல் ஹோல்டிங் ஓய்வை அறிவித்துள்ளார்.  31 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் கிறிக்கெற் வர்ணனையில் அரியபல நுணுக்கங்களையும் கிறிக்கெற்றின் நுட்பங்களையும்  கற்றுக் கொடுத்த   மைக்கைல் ஹோல்டிங் கிறிக்கெற் வர்ணனைக்கு பிரியாவிடை கொடுத்தார்.

மேற்கு இந்தியத்தீவுகளின் அதிவேக பந்து வீச்சாளரான  மைக்கல் ஹோல்டிங் 1987 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.  1990 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில்  இங்கிலாந்து கிறிக்கெற் விளையாடச் சென்றபோது  செய்தபோது வர்ணனைக்கான  மைக்கல்  மைக்கைப் பிடித்தார்.

மைக்கல் ஹோல்டிங்கின் மேற்கிந்திய உச்சரிப்பு ஆங்கிலத்தில் கிறிக்கெற்றின்  நுணுக்கங்களை மிக அழகாக விவரிப்பார், வர்ணனைப் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய இழப்புதான். ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் மைக்கைல் ஹோல்டிங். வர்ணனை மட்டுமல்லாது சமுக அநீதிக்காக முரல் கொடுதவர் மைக்கைல் ஹோல்டிங். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை அதன் பிறகான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் மைக்கைல் ஹோல்டிங்.

கடந்த ஆண்டு ‘Black lives Matter’ இயக்கம் உச்சத்தில் இருந்த போது இங்கிலாந்து தேசத்தில் இருந்து ஒலித்தது இந்த கணீர் குரல். ஹோல்டிங்கின் வர்ணனையில் அழகியலை விட அறிவியல் தான் அதிகம் இருக்கும். ஒரு கண்டிப்பான தந்தை எந்தளவு தனது பிள்ளையின் குற்றம் குறைகளை கண்டிப்பாரோ அந்தளவு காட்டம் இருக்கும், அவரது பேச்சில். தவறான ஷாட் ஆடினால் எவ்வளவு பெரிய வீரர் என்றாலும் பூசி முழுகாமல் உடனே இது மோசமான ஷாட் என்ற வார்த்தைகள் வரும். பந்துவீச்சை பொறுத்தவரை இவரிடம் அரை மணி நேரம் உட்கார்ந்து பேசி விட்டு வந்தால் ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு பெரிய பல்கலைக்கழகம் இந்த மைக்கேல் ஹோல்டிங்.

தந்தையிடம் கண்டிப்பு மட்டும் தான் இருக்குமா என்ன? கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது அமீர் சூதாட்ட குற்றத்தில் கைது செய்யப்படும் போது இவ்வளவு பெரிய திறமையை பணம் விலைக்கு வாங்கி விட்டதே என நேரலை நிகழ்ச்சியில் கண் கலங்கி அழுதார் ஹோல்டிங்.

மைக்கல் ஹோல்டிங்குக்கு  பிடிக்காதது ரி20. அது பற்றி பலமுறை  விமர்சித்திருந்தார்.  வரலாற்றில் உங்களுக்கான பெயரை அழுத்தி எழுதப்போகும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டுவிட்டு ரி20  வ்ளையாடச் சொல்வது அறம் கிடையாது என்று பலமுறை சொல்லியுள்ளார். ரி20 கிறிக்கெற் நல்லதா கெட்டதா என்ற வாதத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஹோல்டிங்கின் இடத்திலிருந்து பார்த்தால் அவரின் கோபத்தில் உள்ள அர்த்தம் புரியும்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்காக 60 டெஸ்ட் போட்டிகளிலும்,, 102 ஒருநாள் போட்டிகளிலும்   விளையாடிய  மைக்கல் ஹோல்டிங் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். விக்கெற் போனால் போகட்டும்  நான் தப்பினால் என விளையாடிய  வீரர்கள் அதிகம்.

60 டெஸ்ட்   போட்டிகளில் விளையாடிய மைக்கல் ஹோல்டிங் 910 ஓட்டங்கள் எடுத்தார். அதிக பட்சமாக 73 ஓட்டங்கள் அடித்தார். 249 விக்கெட்களை வீழ்த்துய மைக்கல் ஹோல்டிங் 11 போட்டிகலில் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.102 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மைக்கல் ஹோல்டிங் 282 ஓட்டங்க எடுத்தார் அதிக பட்சமாக 64 ஓட்டங்கள் அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் 142 விக்கெற்களை வீழ்த்தினார். ஐந்து முறை நான்கு விக்கெற்களை வீழ்த்தினார். 

பந்து வீச்சில் மட்டுமல்லாது மைதானத்திலும் ஆக்ரோசத்தை  வெளிப்படுத்தியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் நடுவர் அவுட் தர மறுத்ததால் ஸ்டம்ப்புகளை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியவர் ஹோல்டிங். மைக்கல் ஹோல்டிங்கை எதிர்க்க முடியாதவர்கள் அவரது நிறத்தை முன்னிலைப்படுத்தி கேவலப்படுத்தினார்கள். அவற்றுகெல்லாம் தனது பந்து வீச்சால் பதிலளித்தார்.

1980-களில் நான் சந்தித்த இன ரீதியான ஒடுக்குமுறை தற்போதும் தொடர்வது வெட்கக்கேடானது என்று ஒரு முறை கூறினார் ஹோல்டிங். சமத்துவ சமூகம் படைக்க நம்மால் முடிந்த பங்களிப்பை அளிப்பதுதான் ஹோல்டிங்கிற்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை.

No comments: