Wednesday, September 22, 2021

போத்துகலில் தஞ்சமடைந்த ஆப்கான் மகளிர் உதைபந்தாட்ட அணி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமான  மக்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.  இன்னும் பலர்  வெளியேறுவதற்கு முயற்சி செய்கின்றனர். பெண்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்கின்றனர்.பெண்களின் சுதந்திரத்துக்கு தலிபான்கள்  தடை விதித்ததால்  ஆப்கானில் வாழ்வதற்கு  பெண்கள் விரும்பவில்லை. கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வமுள்ள பெண்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டை ஏற்கவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் உதைபந்தாட்ட வீராங்கனைகள் அவர்களது குடும்பத்துடன் போத்துகலில் தஞ்சமடைந்துளனர்.

ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் அணி வீராங்கனைகளை வெளியேற்றுவற்கு ஒப்ப‌ரேஷன் சாக்கர் பால்ஸ் எனப்படும் மீட்பு பணி குழு அமைக்கப்படது.மீட்புப்பணிக் குழுவின்  முயற்சிகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்குழமை அதிகாலை அவர்களை  ஏற்றிச் செல்வதற்கான விமானம் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர்கள் போத்துக‌லின் லிஸ்பனில் இறங்கினர்.

  ஆப்கானிஸ்தான் மகளிர் தேசிய அணியின் தலைவி ஃபர்குண்டா முக்தாஜ், கடந்த சில வாரங்களாக கனடாவில் உள்ள தனது வீட்டில் இருந்து வீராங்கனைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க ஏற்பாடு செய்வதில் பணியாற்றியதாக‌ அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். . "அவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை" என்று தெரிவித்தார்.

1996 ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சுவீடன் சென்ற ஆப்கானிஸ்தான் மகளிர் தேசிய உதைபந்தாட்ட அணியின் கோல்கீப்பரும் பயிற்சியாளருமான விடா ஜெமராய், வீராங்கனைகள் மீட்கப்பட்ட பிறகு உணர்ச்சிவசப்பட்டதாக கூறினார்.

ஒப்ப‌ரேஷன் சாக்கர் பால்ஸ் எனப்படும் மீட்பு பணி குழுவில் முன்னாள் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், அமெரிக்க சென். கிறிஸ் கூன்ஸ் என்பன    மனிதாபிமான குழுக்களின் சர்வதேச அமைப்பு  மூலம் தலிபான்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டது என்று சிஐஏ மற்றும் விமானப்படை வீரர் நிக் மெக்கின்லி கூறினார். டல்லாஸை தளமாகக் பணிக்குழு நிறுவப்பட்டது, இது ஒரு இலாப நோக்கமற்றது, இது 50 ஆப்கானிஸ்தான் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீட்டுவசதியை ஏற்படுத்த தயாராக உள்ளது.

  ஆப்கானிஸ்தானில் சிறப்புப் படைகளுடன் பணியாற்றி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் முன்னாள் காங்கிரஸ் தலைமை அதிகாரியும், வெள்ளை மாளிகையின் அதிகாரியுமான ராபர்ட் மெக்ரேரி என்பவரே  பெண்கள்  உதைபந்தாட்ட‌ அணியை மீட்கும் முயற்சியை வழிநடத்தி  , போத்துகலில் தஞ்சம் அளித்தார்.

சில வீராங்கனைகள் மொழி பெயர்ப்பாளர் மூலம் ஏபி செய்தி நிறுவனத்துடன் பேசினார்கள். அவர்கள் உதைபந்தாட்டத்தைத் தொடர விரும்புவதாகக் கூறினர். தொழில்முறை வீராங்கனைகளாக   வர விரும்புவதாக பலர் கூறினார்கள்.ஒருவர் மருத்துவராகவும், இன்னொருவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மற்றவர்கள் பொறியாளராகவும் இருக்க விரும்புகிறார்கள்.


No comments: