Thursday, September 2, 2021

ஆப்கானின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது

அமெரிக்காவும்  நேச  நாடுகளும்  ஆப்கானை விட்டு வெளியேறிய   மகிழ்ச்சியில்  தலிபான்கள்  துள்ளிக்  குதிக்கிறார்கள்.   எதிர்காலம் எப்படி  இருகப்போகிறது  எனத் தெரியாது  ஆப்கான்  மக்கள்   குழம்பிப்போயுள்ளனர். ஆப்கான்   சுதந்திரமடைந்து  விட்டதெனத் தலிபானின் தலைவர்கள்   ஊடகங்களுக்குப்  பேட்டியளிக்கின்றனர். ஆப்கானில்  உள்ள   மக்கள்  மகிழ்ச்சியில்  துள்ளிக்  குதிப்பதாகத் தெரியவில்லை. அவர்கள்  நாட்டை  விட்டு  வெளியேறுவதற்காக  எல்லை  புறங்களை  நோக்கிச்  செல்கிறார்கள்.

உலக  நாடுகளுடன்  நட்புற‌வுடன்  செயற்படுவோம், பயங்கரவாத  தாக்குதல்களை  நடத்த  மாட்டோம், பயங்கரவாதக்குழுக்கள்  ஆப்கானில் செயற்பட  அனுமதிக்க  மாட்டோம், யாரையும் பழிவாங்க  மாட்டோம்  போன்ற  பல  உறுதி  மொழிகளை  தலிபான்கள் வெளியிட்டார்கள். ஆனால், அங்கிருந்து  வரும்  செய்திகள்  தலிபான்களின்  உறுதி  மொழிக ளுக்கு   நேர் மாறாக  உள்ளன.

ஆப்கானின்  நிர்வாக  யாருடைய  கட்டுப்பாட்டில்  இருக்கிறதெனத்  தெரியவில்லை. அத்தியாவசியப்  பொருட்கலின்  விலை ஏரிவிட்டது.  சில  பொருகள்  கையிருப்பில்  இல்லை.   வங்கிகள்  மூடப்பட்டிருப்ப‌தால்  கையில்  பணமில்லாமல்  பலர்  அவதிப்படுகின்றனர்.    10-15% மக்களுக்குத்தான் வங்கிக் கணக்கு உள்ளன.  ஆப்கானின்  பொருளாதாரம் பணத்தில் தான் தங்கி உள்ளது.

 முந்தைய ஆப்கான் அரசின் சொத்துக்கள் வெளிநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தன.  ஆட்சியைப்  பிடித்த  தலிபான்களால் அப் பணத்தைக்  கையள முடியாத  நிலை உள்ளது.ஆப்கான் மத்திய வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.அமெரிக்க பெடரல் ரிசர்வில் உள்ள 7 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தையும்  பணத்தையும்   எடுக்க முடியாமல் அமெரிக்கா தடை செய்துள்ளது, அதே போல் உலக வங்கியும் தாங்கள் ஒதுக்கிய 460 மில்லியன் டொலர் தொகையையும் பிடித்து வைத்துள்ளது.  

வருமானத்துக்கு வழியின்றி வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தின் எதிர்காலமும் தெரியாமல் ஆப்கான் மக்கள் பெரிய வாழ்வாதார நெருக்கடியையும் பீதியையும் சந்தித்து வருகின்றனர். உலக நாடுகளின் நம்பிக்கையை தாலிபான்கள் பெற்றால்தான் அவர்களால் ஆப்கானிஸ்தானை நிதி நெருக்கடி இல்லாமல் நடத்த முடியும்.

இந்நிலையில் ஆப்கான் மக்கள் அன்றாட வாழ்வாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். ஆப்கான் வங்கிகள் வீழ்ந்து விட்டன. மனிதார்த்த பேரழிவை ஆப்கான் சந்திப்பதாக ஐநா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆப்கானுக்கு உதவி புரிவது இனி கடினமே. தலிபான்களி  எந்த  ஒரு  நாடும்  இதுவரை  அங்கீகரிக்கவில்லை. வெளிநாட்டு  உதவி  கிடைக்க்ம் அனைத்து  வழிகளும்  அடைக்கப்பட்டு  விட்டன. உலக நாடுகளின் நம்பிக்கையை தலிபான்கள் பெற்றால்தான் அவர்களால் ஆப்கானிஸ்தானை நிதி நெருக்கடி இல்லாமல் நடத்த முடியும்.

தாலிபான்களும் தங்களது புதிய அவதாரமாக கருதிக் கொண்டு   அத்தனை நாடுகளிடமும் நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் தலிபான்களுக்கு அல்கொய்தா  இயக்கம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில், பாலஸ்தீனம், காஷ்மீர், சோமாலியா, ஏமென் என முஸ்லிம் நிலங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

பயங்கரவாத  செயற்பாடுகளுக்கு  தளமாக ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த முடியாது,   என்கிற தொனியில் அதன் வெளியுறவு அமைச்சராகப் போகும் ஸ்டானிக்சாய் தெரிவித்த  கருத்து  இப்போது    கேள்விக்குறியாகி  உள்ளது.அல் கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவரும் ஒசாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியுமான டாக்டர் அமின் உல் ஹக் ஆப்கானில் உள்ள தன் சொந்த ஊரான நங்கர்ஹர் மாகாணத்துக்குத் திரும்பி வந்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  1980ம் ஆண்டுகளில் பின் லேடனுக்கு நெருக்கமான இவர்  கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்.   தோராபோராவில் ஒசாமா பின் லேடனின் பாதுகாப்பு தலைவராக இருந்தார். அவருக்கு  அங்கு  கோலாகல்  வரவேற்ப‌ளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ், லஷ்கர் , இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் முகாமிட தொடங்கி உள்ளதாக  செய்திகள்  வெளியாகி  உள்ளன. ஆப்கானில்  அமைதி  ஏற்பட   வேண்டும்  என விரும்பிய  அமெரிக்காவும்  நேச  நாடுகளும்  அங்கிருந்து  அமைதியாக  வெளியேறிய  கடைசிக்  கட்டத்தில்  தற்கொலைத்  தாக்குதல்  நடைபெற்றது.

காபூலில்  தாக்குதலை  நடத்தியதற்கு  ஒரு  இயக்கம்  பொறுப்பேற்றது.  தாக்குதலுக்குப்  பொறுப்பானவரை  அழித்ததாக  பதில்  தாக்குதல் நடத்திய  அமெரிக்கா தெரிவித்தது.  தாக்குதலுக்கும்  எமக்குப்  தொடர்பு  இல்லை  எனத்  தெரிவித்த  தலிபான்கள் அதற்கு  கண்டனம்  தெரிவிக்கவில்லை.  இது  போன்ற  தாக்குதலுக்கு  இடமளிக்கப்  போவதில்லை என  அறிவிக்கவில்லை.

  தீவிரவாத அமைப்புகள் எஅன்  உலக  நாடுகளால் அடையாளப் படுத்தப்பட்ட  இயக்கங்கள் ஆப்கானில் கால் பதித்துள்ளன. அவற்றின்  செயற்பாடுகள்  உலக நாடுகளுக்கு  சிக்கலையும் தலிபான்களுக்கு தலைவலியையும்  ஏற்ப‌டுத்தப்போகின்றன.

அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் எந்த விதமான மோதலில் ஈடுபட கூடாது. நட்பு நாடுகளை தாக்கக் கூடாது. அதேபோல் தீவிரவாத இயக்கங்கள் எதற்கும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடம் கொடுக்க கூடாது என்பதே  அமெரிக்காவுடனான  ஒப்பந்தத்தின்  சாராம்சம்.

 அமெரிக்க ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்த தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில்  முகாமமைத்துள்ளன.தீவிரவாத அமைப்புகளின் வருகை தங்களுக்கு எதிராக திரும்பி விடுமோ எனும்  அச்சம்  தலிபான்களுக்கு  ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பு என்ர  முத்திரையில் இருந்து  வெளியேறி  அரசியல் இயக்கமாக   மாறி முயற்சிக்கும் தலிபான்களுக்கு தீவிரவாத  இயக்கங்களின்  வருகை முட்டுக் கட்டையாக  இருக்கப்போகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் தலிபான்கள்  பேச்சுவார்த்தை   நடத்தி வருகின்றனர். தீவிரவாத  அமைப்புகளை  ஆப்கானில் இருந்து  வெளியேற்ற  தலிபான்கள்  முயன்றால் அவை  ஒன்ராக  இணைந்து  தலிபான்களுக்கு  எதிராக இயங்கும்  நிலை  ஏற்படலாம். தீவிரவாத  இயக்கங்களை  ஆப்கானுக்குள்  அனுமதித்தால்  உலக  நாடுகளின் எதிர்ப்பு உருவாகும்.   ஆப்கானில் உள்ள ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை தாலிபான் "தற்காலிகமாக" வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தாலிபான்கள் எப்படி காய் நகர்த்தும் என்ற கடும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தீவிரவாத அமைப்புகளை ஆப்கான் அரசு என்ற முறையில் தாலிபான் ஒடுக்குமா அல்லது நண்பர்கள் என்ற முறையில் வளர விடுமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும். உணவுத்தட்டுப்பாடு, ஆப்கான்  மக்களின்  வெளியேற்றம், தீவிரவாத  இயக்கங்களின்  வருகை  என்பன  ஆப்கானை  ஆடிப்படைக்கும்  முக்கிய  பிரச்சினைகளாகும். 

No comments: