ஜெயலலிதாவின் அடையாளங்களில் ஒன்று கொடநாடு எட்டேட் பங்களா. ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக நீலகிரியில் உள்ள கொடநாட்டுக்குச் சென்றால் சென்னையில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிம்மதிப் பெரு மூச்சு விடுவார்கள். ஜெயலலிதா மரணமடைந்த பின் னர் எடப்பாடி முதல்வராக இருந்தபோது கொடநாட்டில் கொலையும் கொள்ளையும் நடை பெற்றது. அந்த வழக்கின் மறு விசாரணை எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தை அச்சப்பட வைத்துள்ளது.
கொடநாடு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான சயந்தன், தனது வாக்கு மூலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.அந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க ஸ்டாலினின் தலமையிலான தமிழக அரசாங்கம் சதி செய்வதாக எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை தொடங்கியபோது கொடநாடு விவகாரத்தை விவாதமாக்க
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்
முயற்சித்தனர். தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக எழுதப்பட்ட பதாகைகளை சபையில் தூக்கிப் பிடித்தனர். சட்டசபையின் நடவடிகையை மீறிய அவர்களின்
செயலைக் கண்டித்த சபாநாயகர் அப்பாவு உடனடியாக அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பாட்டாளி மக்கள்
கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின்
உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வெளியேறினர்.
மூன்று முறை முதலமைச்சராக கடமையாற்றிய ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கும் சட்டசபை நடவடிக்கைகள் அனைத்தும் நன்கு தெரியும். சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் விவாதிக்க முயன்றதும் பதாகைகளை எடுத்துச் சென்றதும் சட்டப்படி தவறு. தவிர, கொடநாட்டில் கொலை,கொள்ளை நடந்தபோது தமிழக முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி எனச்சொல்லி அரியணையில் இருந்தவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டு இப்போ அரசியல் பழிவாங்கல் என்கிறார்கள். எடப்பாடி முதலமைச்சராக இருந்த போதே குற்றவாளிகள் அவரின் பெயரைச் சொன்னார்கள். இப்போ ஸ்டாலினின் அரசியல் சூழ்ச்சியால்தான் தனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக எடப்பாடி எடப்பாடி சொல்வதை அவரின் சகாக்கள் தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்.
2017-ம்
ஆண்டு ஏபரல் மாதம் 17 ஆம்திகதி நடைபெற்ற கொலை,
கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உட்பட 10 பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை நான்கு ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி பேட்டியளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சயான், வாளையார் மனோஜை ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்த இரண்டு பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.
டெஹெல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் மத்தியூஸ் சாமுவேல், கொடநாடு பங்களா பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார். கொடநாடு கொலை,கொள்ளை சம்பவத்துடன் அன்றைய முதலமைச்சர் எடப்பாடிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மத்தியூஸ் சாமுவேலுக்கெதிராக எடப்பாடியால்தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு அப்படியே உள்ளது. அரசு இயந்திரத்தின் மூலம் குற்றவாளிகளை முடக்கியதுபோல் பத்திரிகையாளரை முடக்க முடியவில்லை.
இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என சயான் தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில், கூடுதல் விசாரணையை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பழையை எஸ்.பி அலுவலகமான நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு அலுவகத்தில் பலத்த பாதுகாப்புடன் சயானிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
கொடநாடு
சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை, இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திக்கத்
தயார் என நேரடியாக எடப்பாடி சொல்லவில்லை. தமிழக
அரசின் அரசியல் சதி எனத் தெரிவிக்கும் எடப்பாடி, சிபிஐ விசாரணையை கோரவில்லை. அல்லது
இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுக்கவில்லை.
கொடநாடு
எஸ்டேட் பங்களாவைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாசல்களிலும்
ஒன்றுக்கு மேற்பட்ட காவலர்கள். 24 மணி
நேர கண்காணிப்பு கமரா. இத்தனையையும் தாண்டி ஒரு நாள் அங்கு கொள்ளை நடை பெற்றது. ஒரு
காவலர் கொல்லப்பட்டார். இனொருவர் காயமடைந்தார். கொள்ளையடிக்கப்பட்ட விபரம் எதுவும்
உடனடியாகத் தெரியவரவில்லை. ஏராளமான பணம், நகை, வைரம்,தங்கக்கட்டி ,ஆவணம் என பல ஊகங்கள் ஊடகங்களில் செய்தியாகின.
கொடநாடு
கொள்ளையர்கள் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று கைக்கடிகாரங்கள், கிறிஸ்டல் பொம்மை
என்பன கைபற்றப்பட்டன. பெரிய கொள்ளை என வர்ணிக்கப்பட்ட
சம்பவம் சிறு கொள்ளையுடன் முடிவுபெற்றது. இது அப்போதே பலத்த
சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொடநாடு
சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் அதன் சூத்திரதாரியான கனகராஜ் விபத்தில்
மரணமானார். கனகராஜ் முன்னாள் முதல்வர் பன்னீரின் ஊரைச் சேர்ந்தவர். அதே நாள்
குடும்பத்துடன் சென்ற சயானின் கார்
மீது இன்னொரு வாகனம் மோதியதில் சயானின் மனைவியும், மகளும் பலியானார்கள்.
சயான் பலத்த காயங்களுடன் தப்பிவிட்டார்.கொடநாடு பங்களாவில் உள்ள கண்காணிப்பு கமராக்களை
இயக்கும் தினேஷ்குமார் தற்கொலை செய்தார். கொடநாட்டில் கொலை,கொள்ளை நடந்த போது அங்குள்ள கண்காணிப்பு கமராக்கள் அனைத்தும் செயலிழந்தன. கொடநாட்டு
கொள்ளையின் போது காயமடைந்த காவலாளி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை.
சினிமாப்
படம் போன்ற மர்ம முடிச்சுகள் அனைத்தும் அவிழ்க்கப்பட வேண்டும் என தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் தெரிவித்தார்.
இதைத்தான் அரசியல் பழிவாங்கல் என எடப்பாடி
கூறுகிறார்.
தனது ஆட்சிக்காலத்தில் அன்றைய அமைச்சர்களின் முறைக்கேடுகள் பற்றிய ஆவணங்களை
ஜெயலலிதா அங்கு பாதுகாப்பாக வைத்திருகலாம். அவை எல்லாம் கடத்தப்பட்டு அழிப்பப்பட்டு விட்டன எனவும் சந்தேகம் உள்ளது. முறைப்படி
விசாரணை நடந்தாலும் அதை எப்படி இழுத்தடிப்பதென
அரசியலாதிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
எடப்பாடியின் பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர் பதற்றமடைகிறார். ஜெயலலிதாவின் கொடநாட்டில் நடந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தெரிய வேண்டும் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. தலைவர்கள் அதற்குதடையாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment