Friday, August 20, 2021

தலிபான்களின் எழுச்சியால் மாற்றமடையும் உலக அரசியல்

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த  அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகள்  20 வருடங்களின் பின்னர்   விலகியதால் தலிபான்கள் மீண்டும்  ஆசியைக் கைபற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  முன்பு  ஆட்சி செய்த போது  உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்துக் குரல் கொடுத்தன.

 சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்திருந்த  தலிபான்கள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். மீண்டும் அப்படி ஒரு ஆட்சி வந்துவிடுமோஎன  ஆப்கான் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்கள் தனியே  வீதிக்கு வரக்கூடாது என முன்பு  தலிபான்கள் ட்டளையிட்டனர். இந்த 20 வருடங்களில் ஆப்கான்  பெண்கள் பலதுறைகலில் கால் பதித்துள்ளனர்.அரசியல், ஊடகம், விளையாட்டு, கலை என  பெண்கள் அனைத்து  துறைகளிலும் பிரகாசிக்கின்றனர். தமது எதிர்காலம் எப்படி இருக்குமோ எனத் தெரியாது அவர்கள் அச்சப்படுகின்றனர்.அமெரிக்கப் படைகளுக்கு உதவிய  சுமார் 44,000 ஆப்கானிஸ்தானிய மொழிபெயர்ப்பாளர்கள் பழிவாங்கப்படுவோம் என பயத்துடன் இருக்கிறார்கள்.

தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் ஊடக மற்றும் தகவல் மைய வளாகத்தில் நடைபெற்ற   பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,

 "ஆப்கானை சுமார் 20 வருடகால போராட்டத்திற்குப் பின்னர் நாங்கள் விடுவித்திருக்கிறோம். எங்கள் மண்ணிலிருந்து வெளிநாட்டவரை வெளியேற்றியிருக்கிறோம். இது ஒரு பெருமிதமான தருணம் என்று தான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் இனி மோதல்கள் நிகழும் போர்க்களமாக இருக்காது என்று உறுதியளிக்கிறோம். எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அனைவரையும் நாங்கள் மன்னித்து விட்டோம். ஆப்கான் போர் முடிவுக்கு வந்து விட்டது. எங்களுக்கு உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எந்த எதிரியும் வேண்டாம். நாங்கள் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம்.

எங்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே அவர்கள் பயப்படத் தேவையில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் பாதுகாப்பான சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை.

ஆப்கானிஸ்தான் 20 வருடங்களுக்கு முன்பும் இஸ்லாமிய நாடு தான், இப்போதும் இஸ்லாமிய நாடு தான், நாளையும் அதே தான். ஆனால், அனுபவம் மற்றும் பக்குவ ரீதியாக தற்போது நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பிருந்தவர்கள் அல்ல. எங்களிடம் பல விஷயங்களில் வேறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள். முதலில் நாங்கள் ஆப்கானில் ஒரு முறையான அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறோம். அதைத் தொடர்ந்து, இங்கு என்ன விதமான சட்டங்களை அமுல்படுத்தப் போகிறோம் என்பது குறித்துத் தெரிவிக்கிறோம்” -  என்றார்.

எல்லோருக்கும் பொது  மன்னிப்பு வழங்கி விட்டோம் அனைவரும் ஒற்றுமையாக நாட்டை க் கட்டி யெழுப்ப  வேண்டும் என  தலிபான்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.தலிபான்கள் திருந்திவிட்டதாக ஒரு தரப்பினர்  தெரிவிக்கிரார்கள். இல்லை அவர்கள் இனமும் திருந்தவில்லை. மதத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்போகிறார்கள் என இன்னொரு தரப்பு சொல்கிறது. ஆனால், தலிபான்களால் அமைக்கப்படும் அரசாங்கத்தின்   செயற்பாடுதான் இதற்கு விடைசொல்ல  வேண்டும்.

பாகிஸ்தான் உடனடியாக ஆப்கானை  ஆதரித்தது. சீனா உருறுணையாக இருக்கப்போகிறது. பிரிட்டன் அவதானிக்கப்போகிறதாம். பயங்கரவாதிகளின் ஆட்சியை அங்கீகரிக்கப்போவதில்லை என  கனடா அறிவித்துள்ளது.   அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் கண்காணிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தியா என்ன செய்வதெனத் தெரியாது தவிக்கிறது.

ஆப்கானிஸ்தானை  ஆதரிக்கும் நாடுகள்,  எதிர்க்கும் நாடுகள், அவதானிக்கும் நாடுகள்  என  உலக நாடுகள் பிரிந்து  நிற்கப்போகின்றன

தலிபான்கள் ஆப்கான் தலைநகர் காபூலைக் கைப்பற்ற முன்பே பாகிஸ்தான்  ஜனாதிபதி  இம்ரான்கான் வாழ்த்துத் தெரிவித்துவிட்டார். தலிபான்களை வளர்த்துவிட்ட  நாநடுகளில் பாகிஸ்தானுக்கு  முக்கிய  பங்கு இருக்கிறது. அமெரிக்கா சொல்வதைக்  கேட்டு நடக்கும்  பாகிஸ்தான், தலிபான் போன்ற  அமைப்புகளுக்கு புகலிடம் கொடுத்தது. ஆகையால், பாகிஸ்தான் முந்திக்கொண்டு  வாழ்த்துத் தெரிவிப்பது ஆச்சரியமானதல்ல.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே  பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆப்கானை விட்டு அமெரிக்கா வெளியேறப்போகிறது                                                       என்ற தகவல் வெளியான நிலையில், தலிபான் பிரதிநிதிகளை தனது நாட்டுக்கு அழைத்த சீனா,  பேச்சுவார்த்தை நடத்தியது.

தலிபான்களுடன் நட்பு பாராட்ட சீனா விரும்புவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு மிகப் பெரும் போட்டியாக இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவைச்  சுற்றி உள்ள  நேபாளம் ,பங்களாதேஷ்,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. திபெத்தை  சீனா தனது கட்டுப்பாட்டில்  வைத்திருக்கிறது. கடந்த  வாரம் வரை  ஆப்கானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய  தொடர்பு இருந்தது. இப்போது அந்த இடத்தை  சீனா கைப்பற்றியுள்ளது.

சீனாவின்  ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பு, உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய  நாடுகளில் வலுவாக உள்ளது.ஆப்கானுடன் 80 கி.மீ., நீள எல்லையை சீனா பகிர்ந்து கொள்கிறது. அதில் பெரும்பகுதி ஜின்ஜியாங் மாகாணத்தில் வருகிறது. அதனால், தன் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க சீனா விரும்புகிறது.  தலிபான்களுடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் தனது நாட்டைப் பாதுகாக்க  சீனா முனைகிறது. 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின்  வளர்ச்சிகு  இந்தியா  செய்த முதலீடுகள்  கைவிடபப்டும் அபாயம் உள்ளது. இந்திய ஆப்கான் ஒப்பந்தங்கள் பாதிக்கப்படுவதால்  இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா செய்த முதலீடுகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் இனி அது சாத்தியமாகாது.  

சாபஹார் துறைமுகத்தைக் கட்டமைக்க   இந்தியா முதலீடு செய்தது. ஆப்கனுடனான ஏற்றுமதி இறகுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா உருவாக்கியுள்ள கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சி பணிகள் பாராட்டுக்குரியது என லிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். அடுத்தக் கட்டப் பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படுமா என்பதை கணிக்க முடியாமல் உள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள  லிபான்கள் தற்போது அந்நாட்டில் ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்படப் பல நாடுகள்  லிபான்கள் உடன் நட்புறவைப் பாராட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றம் அல்லது சாதகமான பதில்களும் வரவில்லை.

  தலிபான்களின்  முன்னைய  ஆட்சியில் உலகின்  மிகப் பழமையான பர்மியன்  புத்தர் சிலை    தகர்க்கப்பட்டது. புத்தர்  சிலைகலைத் தகர்க்கப்போவதில்லை என  இன்றைய  தலிபான்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தமக்கு எதுவித  தொடர்பும் இல்லை என  தலிபான்கள் கூறியுள்ளனர். உலகின் பல நாடுகளின் பயங்கரவாத  பட்டியலில் புலிகள் அமைப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் லிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற மக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலுக்கு ஐஎஸ், ஜெய்ஸ்--முகம்மது, லஷ்கர்--தோய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த சில நாட்களாகவே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபான் கொடிகளை ஏந்தியபடி, வெளிநாட்டு தீவிரவாதிகள் வந்ததாகவும், இதுகுறித்த தகவல்கள் லிபான் அமைப்பினருக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

பயங்கரவாத  பட்டியலில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை தலிபான்கள் அடக்குவார்களா ஆதரிப்பார்களா என்பதை உலகநாடுகள் உன்னிப்பாக அவதானிக்கின்றன. தலிபான்களின் ஆட்சி உத்தியோக பூர்வமாகஅமையும் போதுதான்  பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

ரமணி

No comments: