Sunday, October 10, 2021

பாரதீய ஜனதாவின் தடையை தகர்த்த மம்தா பானர்ஜி


 பாரதீய ஜனதாக் கட்சியின்  பிரதான அரசியல் எதிரியான மம்தா பானர்ஜி இடைத் தேர்தலில் பெற்ற  வெற்றி   அவரது செல்வாக்கு சரியவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பார்னஜி தோல்வியடைந்தார். இதனால் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், ஐந்து மாதங்களின் பின்னர்  இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதால் அவரது அரசியல் எதிரிகள் அதிர்ச்சியடைந்துள்ள‌னர்.இந்தியப் பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களையும்  மேடைகளில் பகிரங்கமாக   விமர்சிக்கும் மம்தா பானர்ஜியை அரசியலில் இருந்து ஓரங்கட்ட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் வியூகம் அமைத்தனர்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பார்னஜியின் கட்சியைத் தோற்கடிக்க பாரதீய ஜனதாக் கட்சி  உறுதி பூண்டது.  பிரதமர் மோடி, மைச்சர் அமித்ஷா உட்பட‌ அனைத்து தலைவர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டனர்.  அவர்களால் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் , பாரதீய ஜனதாவின் திட்டப்படி  தலைவி மம்தா பார்னஜி தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த மே மாதம் அமோக வெற்றி பெற்றது. 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. பாஜக 77 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மீண்டும் வெற்றிபெற்றாலும் அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி   போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற முன்னாள் நண்பர் சுவேண்டு அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

பாரதீய ஜனதாக் கட்சிக்கு அதிகளவான வாக்கு வங்கி உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார்.  இந்தியாவின் அடுத்த பிரத‌மராகும் எண்ணத்தில் இருக்கும் மம்தாவுக்கு தேர்தல் தோல்வி மிகப் பெரிய அவமானமாகும். திரிணாமுல் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தமது தலைவியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். ஆறு மாதங்களுக்கிடையி தேர்தலில்  வெற்றி பெற வேண்டிய நிலைக்கு மம்தா தள்ளப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாய் பவானிப்பூர்  பதவியை இராஜினாமா செய்தார். அங்கு போட்டியிட்ட மம்தா வெற்றி பெற்றார்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாள‌ர்  பிரியங்கா திப்ரேவாலைவிட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

செப்ரெம்பர் 30 ஆம் திகதி பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 82,068 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் 25,680 வாக்குகள் மட்டுமே பெற்றார்.மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2896 வாக்குகள்   பெற்றது

2011-ம் ஆண்டு தேர்தலில் பவானிபூரில் 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றார்.

சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடந்த விதம் இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்றும் பொதுத்தேர்தலின் போது 1000 குண்டர்கள் நந்திகிராமில் முகாமிட்டு சதி வலை பின்னியதாகவும்  மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். மம்தா தோல்வியை தழுவ வேண்டும் என்பதில் பாரதீய அனதாக் கட்சித்தலைமை மிகத் தீவிரமாக இருந்தது.   இதற்கான வியூகத்தை வகுத்து தேர்தல் பணிகளை கண்ணும் கருத்துமாக கையாண்டது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

 மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திரிணாமுல் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள் இறங்கி வேலை செய்தனர். இதற்காகப் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதேபோல மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு இருந்தனர். இருந்தாலும் கூட அங்கு பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 3ஆவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றார். மம்தா பானர்ஜி ஆனால், அதேநேரம் நந்திகிராம் தொகுதியின் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. வாக்கு அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி மம்தா, இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தார்.

 மம்தா ஒரு வேளை இடைத்தேர்தலில் தோற்றிருந்தால் அது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கும். தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருப்பதும் கேள்விக்குறியாகும். இதனால் வாழ்வா சாவா என்கிற அளவுக்கு பவானிபூர் இடைத்தேர்தல் மம்தாவுக்கு அமைந்தது.

மம்தாவுக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் சட்ட மன்ற உருப்பினர்கள் அமைச்சர்கள் பவானிபூர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சிகளை முறியடித்து மம்தாவை தேர்தலில் வீழ்த்தும் நோக்கில் ஏராளமான பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகள் பவானிபூரில் குவிந்தனர். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலும், முடிவும் தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.

மம்தா பார்னஜி எனும் பெண்சிங்கம் மீண்டும் கர்ஜிக்கத் தயாராகிவிட்டது. மம்தா தலைமையிலான திரிணமுல் தொடர்ந்து பாஜகவின் சவால்களை உடைத்து வெற்றி பெற்றுவரும் அதே நேரத்தில் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் செல்வாக்கு சரிந்துகொண்டே போகிறது. எனவே, தேசிய அளவில் மிகப் பிரம்மாண்டமான, அசைக்க முடியாத சக்தியாக வலுப்பெற்றிருக்கும் பாஜகவைத் தேசிய அளவில் எதிர்ப்பதற்கான அணியில் மம்தாவின் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்னும் குரல்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த தேர்தலில், இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், தன்னை விட்டுப் பிரிந்துசென்று கட்சி தொடங்கிய மம்தாவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது. ஆனால், அவருடைய தலைமையை ஏற்கவோ தொகுதிகள் ஒதுக்கீடு உட்பட அனைத்திலும் அவருடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவுக்கோ அக்கட்சி இறங்கிவரும் என்பதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் தென்படவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை காங்கிரஸ் கையாண்ட விதத்தை வைத்து இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேலும், திரிணமூல் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் சூழலில், அது திரிணமூலுடன் ஓரணியில் இணைவதற்கு வாய்ப்பேயில்லை.

பாஜகவுக்கு எதிரான அரசியல் கூட்டணியில் மம்தா மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பார் என்பதை மறுத்துவிட முடியாது. இன்று இந்தியாவில் பாஜகவுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழும் அரசியல் தலைவர்களில் முதல் இடத்தில் வைக்கத் தகுதியானவரும் அவரே. ஆனால், மாநிலத் தேர்தலில் அவர் ஈட்டிவரும் வெற்றி, தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் எந்த அளவில் தாக்கம் செலுத்தும் என்கிற கேள்வியைத் தவிர்த்துவிட முடியாது. மே.வங்கத்தில் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடிந்த அவரால், தேசிய அளவில் அதை வளர்த்தெடுக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளிக்கும் எதையும் அவர் செய்துவிடவில்லை. அவர் ஒருவரால் மட்டும் அது முடியாது என்றாலும் பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் இணைப்பதிலும், அதை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் போதுமான அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

தேசிய தலைவராக மம்தா இன்னமும் உருவாகவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக மம்தாவின் கட்சி இல்லை. காங்கிரஸை முந்தினால்தான்  தேசியரீதியாக மம்தாவால் பிரகாசிக்க முடியும்.

 

No comments: